சாத்தான்குளம் கொடூரம்: 9 போலீசாருக்கும் மரண தண்டனை அறிவிப்பு!
காவல் நிலைய மரணங்கள் சமுதாயத்தில் மிகவும் கொடியது. காவல்துறையினர் சட்டத்தை காற்றில் பறக்கவிட்டு செயல்பட்டுள்ளனர்.
தமிழக வரலாற்றில் காவல்துறையின் அத்துமீறலுக்கு மிக மோசமான சான்றாக அமைந்த சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020 ஜூன் மாதம் ஊரடங்கு காலத்தில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில், கடந்த மார்ச் 23ஆம் தேதி 9 போலீசாரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான தண்டனை விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதியின் தீர்ப்பு விவரம்
நீதிபதி தனது தீர்ப்பில், "காவல் நிலைய மரணங்கள் சமுதாயத்தில் மிகவும் கொடியது. காவல்துறையினர் சட்டத்தை காற்றில் பறக்கவிட்டு செயல்பட்டுள்ளனர். தண்டனையை குறைக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. குற்றத்தின் அடிப்படையிலேயே தண்டனை தீர்மானிக்க வேண்டும். பொதுமக்களுடைய பணத்தில் அரசு ஊதியம் பெற்றவர்கள், பொருளாதார அழுத்தத்தையோ, மன அழுத்தத்தையோ காரணமாக கூறுவதை ஏற்க முடியாது. இது அரிதிலும் அரிதான வழக்கு. இதுபோன்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்க உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது." என்று தெரிவித்து, 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். வழக்கின் முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதருக்கு மரண தண்டனையுடன் ரூ.84 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. பென்னிக்ஸின் தாயாருக்கு ரூ.1.04 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


