தீக்குளிக்க போகிறேன்.. ஜி.பி. முத்து உருக்கம்.. காணாமல் போன தெருவைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
'கிணத்தை காணோம்' வடிவேலு காமெடியை போல, ‘என் பகுதியில் உள்ள தெருவை காணவில்லை, கண்டுபிடிக்கவில்லை என்றால் தீக்குளிப்பேன்’ என ஜி.பி.முத்து கூறியுள்ளார்.

திருச்செந்தூர் அருகே பெருமாள்புரத்தில் உள்ள ஒரு தெருவை சிலர் ஆக்கிரமித்துவிட்டதாகவும், அதனைக் கண்டுபிடித்துத் தருமாறும் பிரபல யூடியுபர் ஜி.பி.முத்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
நேற்று தனது குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஜி.பி.முத்து, கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் காலன் குடியிருப்பு வருவாய் கிராமம் உடன்குடி, பெருமாள் புரத்தில் நத்தம் சர்வே எண் 233-ல் கீழ தெரு என்று ஒரு தெரு இருந்தது. நத்தம் சர்வே எண் 233 / 21 முழுக்க முழுக்க அரசு புறம்போக்கு இடம். இதனைப் பாதையாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அதற்கு வருவாய்த் துறை ஆவணங்களில் ஆதாரம் உள்ளது.
’அத்திப்பட்டி’ கிராமம் போல் மாயமான தெரு:
ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் ‘சிட்டிசன்’ திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் காணாமல் போனது போல, கீழத்தெரு இருந்த இடம் தெரியாமல், காணாமல் போய்விட்டது. அந்த இடம் முழுவதும் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் செல்லும் பாதையும் அடைக்கப்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அந்த இடத்தை நில அளவை செய்ய வேண்டும். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, பெருமாள்புரத்தில் காணாமல் போன கீழ தெருவைக் கண்டுபிடித்துத் தர வேண்டும்" என அந்த புகாரில் ஜி.பி. முத்து கூறியுள்ளார்.
பின்னர், அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
பெருமாள்புரத்தில் உள்ள கீழத் தெரு என்ற ஒரு கிராமத்தையே காணவில்லை. இதனை தாலுகா அலுவலகம் முதல் ஆட்சியர் அலுவலகம் முதல் தெரிவித்துவிட்டேன். அதேபோல, எங்களது ஊரில் ஒரு கோயில் இடம் உள்ளது. கள்ளப்பத்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கேட்டால், அப்படிதான் விற்போம், வாங்குவோம் என மிரட்டுகின்றனர்.
முதலில், கோயில் இடத்தை வாங்க யாருக்குமே உரிமை இல்லை. இதற்கு தீர்வு காணவேண்டும் என்று மனு அளித்துள்ளேன். இதுக்கு மேலும் டார்ச்சல் செய்தால், அடுத்த முறை இங்கு மண்ணெண்ணெய்-யோடு தான் வருவேன். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் என ஜி.பி. முத்து கூறினார்.