Breaking News
புலத்தில் , தாய்நிலத்தின் கதை சொன்ன புது முயற்சி
ஏதிலிகளான முதியோரின் நல்வாழ்வுக்காக "செந்தமிழ் மாலை" வேர் தேடும் விழுதுகள்
புலத்தில் , தாய்நிலத்தின் கதை சொன்ன புது முயற்சி
ஏதிலிகளான முதியோரின் நல்வாழ்வுக்காக, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் நடாத்திய "செந்தமிழ் மாலை" வேர் தேடும் விழுதுகள் - அரங்க ஆற்றுகை 14.04.2024 Salle des Fêtes de Sevran (9 rue Gabriel Péri) நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
அரங்க வாசல் வரவேற்பு விளக்குகளை திரு. திருமதி மணிவண்ணன் அனுஷா தம்பதியினர் ஏற்றி வைத்தனர். அதனை தொடர்ந்து பிரதான பொதுச்சுடரினை திரு. பேதுருப்பிள்ளை ஜெயசூர்யர் ஏற்றிவைக்க, மறைந்த சமூகசேவையாளர் அமரர். மனோரஞ்சிதம் மனோகரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கான நினைவுச் சுடரினை திரு. வேலும்மயிலும் மனோகரன் ஏற்றிவைத்தார். செல்வி. மாலதி மனோகரன் மலர் வணக்கம் செலுத்தினார். அதனை தொடர்ந்து தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களையும், போரினாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் கொல்ப்பட்ட மக்களையும் நினைவு கூர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர் நினைவுப்பாடல் பாடப்பட்டது. அரங்கின் மங்கள விளக்கினை த. பு. க தலைவர், லாக்குர்நெவ் நகரசபை உறுப்பினர், வர்த்தகர்கள், தமிழ்ச் சங்கத் தலைவர்கள், கலைஞர்கள் இணைத்து ஏற்றிவைத்தனர்.
மனோ அக்கா நினைவு சுமந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றுக்கிண்ணம், செல்வி. மாலதி மனோகரன் மற்றும் திருமதி. செல்வி சுரேந்திரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
ஈழத்தமிழின் திட்டமிட்டு அழிக்கப்பட்ட படுகொலை ஆவணத் தொகுப்பு வெளியிடப்பட்ட்து. இது ஒரு நூல் அல்ல .இது ஒரு வரலாற்று ஆவணம். ஈழத் தமிழர்களின் வரலாற்றின் ஒரு பகுதி இலங்கை தீவு சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1956 முதல் 2002 வரை அதன் பூர்வ குடிகள் ஆன தமிழர்கள் மீது பெரும்பான்மை இன பௌத்த சிங்கள மக்களாலும், அவர்களின் இராணுவ, போலீஸ் படைகளாளும், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையும், தனிமனித, கூட்டு படுகொலைகளையும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், கூட்டு கற்பழிப்புகள் யாவற்றையும் ஆவணப்படுத்தி உள்ளது. இன்நூலினை திரு. சிவசுப்பிரமணியம் மகிந்தன் வெளியிட்டு வைக்க, திருமதி. பிறிஞ்சி ரஞ்சித்குமார் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து அரங்க ஆற்றுகை ஆரம்பமானது.
செந்தமிழ் மாலை நிகழ்வு, அரங்கம் நிறைந்த நிகழ்வாகவும், இளையோரைக் கவர்ந்த நிகழ்வாகவும் அமைந்தது. இளையோர் நிகழ்வில் ஆடிப்பாடி குதூகலித்தனர். வசந்தத்தை வரவேற்ற தன்மை உணரக்கூடியதாக இருந்தது.
டென்மார்க்கிலிருந்து வருகைதந்த திரு. ரத்தி மற்றும் பிரான்ஸ் கலைஞர்களான திரு. ரெமி, திரு. ஜீவன் ஆகியோரின் துள்ளிசை Rap பாடல்கள் சபையை அதிரவைத்தன. தாயக விடுதலைப்பாடல்கள் அனைவரின் உணர்வுகளைத் தட்டியது.
"படலைக்குப் படலை" மீண்டும் நீண்ட இடைவெளியின் பின் மேடையில் கண்டது மகிழ்ச்சி தந்தது. திரு. ஜெயா அவர்களின் இயக்கத்தில் “அகமும் புறமும்” நாடகம் அனைவரையும் தாயகத்துக்கு கொண்டுசென்றுவிட்டது. இளையோரின் karaoke பாடல்கள் காதுக்கு இனிமை தந்தது. நடனங்கள் கண்களுக்கு விருந்தளித்தது. நிகழ்வுகளை தொய்யவிடாது அவுஸ்திரேலியாவில் இருந்து வருகைதந்த சாரங்கன் ரவுடியாய் வந்து பட்டையை கிளப்பிப் போனது புதுமையாக இருந்தது.
மொத்தத்தில் இப்புது முயற்சி கொண்டாட்டம் ஈழக்கலைஞர்களுக்கு புதிய நம்பிக்கை தந்துள்ளது. இந்நிகழ்வின் சிறப்புக்கு பணியாற்றிய திரு. கரிகாலன், திரு. கேங்கேஷ், திரு. ஜெயா, திரு. அன்ரு, த. பு. க தொண்டர்கள், பாலம் படைப்பகக் கலைஞர்கள் மற்றும் ஏனைய கலைஞர்கள், நடன ஆசிரியர்கள், நல்லாதரவு வழங்கிய வர்த்தகப் பெருமக்கள் இவர்களுடன் தொழில்நுட்பக் கலைஞர்களான சிவா ஒலி , துலவன் ஒளி, டி. ஜே. ராஜா, K.S. Prod வீடியோ, மணி போட்டோ அனைவருக்கும் எமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆரம்ப நிகழ்ச்சி தொகுப்பு திரு. அருள்மொழித்தேவன், திருமதி. சுபாசினி, திரு. வினோஜ் வழங்கினர். கலைஞர்களின் அரங்க ஆற்றுகை முடிவில் திரு. விநாயகமூர்த்தி நன்றியுரை வழங்க, இரவு 9 மணிக்கு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.