வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று ஃபெங்கல் புயலாக...
.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று ஃபெங்கல் புயலாக (Cyclone Fengal) மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரத்தில் சுமார் 10 கிமீ வேகத்தில் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்தது என்றும், நேற்றிரவு (நவம்பர் 26) 11:30 மணி நிலவரப்படி, இது இலங்கையின் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கிமீ, தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 470 கிமீ, புதுச்சேரிக்கு தென்கிழக்கே 580 கிமீ மற்றும் சென்னைக்கு தென்கிழக்கே 670 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இந்த அமைப்பு வட-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 27) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது அடுத்த இரண்டு நாட்களில் இலங்கை கடற்கரையை ஒட்டி நகர்ந்து தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை:
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை எச்சரிக்கை விடுத்துள்ளது:
- அதீத கனமழை: மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகள்.
- மிக கனமழை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் தனித்த இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
- கனமழை: ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் தனித்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
நேற்று (நவ.26) காலை 08:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.27) காலை 08:30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து தென்கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும் என்றும், அதன் பிறகு மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் வாணிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவில் கனமழை பதிவான இடங்கள்..!
நாகப்பட்டினம் AWS (நாகப்பட்டினம்) 19 செ.மீ வரையிலும்; கோடியக்கரை (நாகப்பட்டினம்), நாகப்பட்டினம் நகர்ப் பகுதிகள், வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) தலா 18 செ.மீ வரையிலும்; திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 14 செ.மீ வரையிலும்; மண்டலம் 02 D15 மணலி (சென்னை), திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 13 செ.மீ வரையிலும்; திருவாரூர் (திருவாரூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) தலா 12 செ.மீ வரையிலும்; மகாபலிபுரம் AWS (செங்கல்பட்டு), செய்யூர் (செங்கல்பட்டு), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), சீர்காழி (மயிலாடுதுறை), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), மரக்காணம் (விழுப்புரம்), வடகுத்து (கடலூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), தரங்கம்பாடி (மயிலாடுதுறை) தலா 11 செ.மீ வரையிலும்; மயிலாடுதுறை (மயிலாடுதுறை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), திருவாரூர் AWS (திருவாரூர்), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), கடலூர் (கடலூர்), காரைக்கால் (காரைக்கால்), நன்னிலம் (திருவாரூர்) தலா 10 செ.மீ வரையிலும் மழை பதிவாகியுள்ளது.