பொதுஜன பெரமுனவில் தாக்கம் செலுத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சி
.
சமகால அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இதுவரை உறுதியான அறிவிப்புகள் எதனையும் வெளிப்படுத்தவில்லை என்பதுடன், கூட்டணி குறித்து வெளிப்படையான பேச்சுகளையும் முன்னெடுக்கவில்லை.
ஆனால், கட்சியை மறுசீரமைக்கும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அண்மையில் கட்சியின் முக்கிய பதவிகளில் ஒன்றாக கருதப்படும் தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டதுடன், கட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராகவும் பிரபல்யப்படுத்தப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையும் அரசியல் சபையும் இன்று வெள்ளிக்கிழமை கூடுகிறது.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெறுகிறது.
பொதுஜன பெரமுனவின் யாப்பில் திருத்தம் செய்வது மற்றும் கட்சியில் புதிய முக்கிய பதவிகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டே இந்த கூட்டம் நடைபெறுகிறது.
கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்காக முக்கிய பதவியொன்று உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்சியின் அதிகாரங்களை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் யாப்பை முன்மாதிரியாக கொண்டு உருவாக்கப்படும் பதவிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
உலகில் மிகவும் பலம்வாய்ந்த கட்டமைபைப் கொண்ட கட்சிகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. இந்தக் கட்சியின் அதிகாரங்கள் அனைத்தும் தலைவர் உட்பட ஒருசிலரின் கீழே உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.