தமிழ் பொது வேட்பாளர்: வடக்கு, கிழக்கு மக்கள் நினைப்பது என்ன?
.
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி வடக்கு, கிழக்கில் கருத்துக்கணிப்பொன்று நடத்தப்பட்டது.
இதில் தமிழ் பொதுவேட்பாளரை இத் தேர்தலில் களமிறக்கியது தொடர்பிலும் அவர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
ஈழத் தமிழர்களை தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏமாற்றி வருவதாக இங்குள்ள மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
பொது வேட்பாளர் திடீரென்று தேர்தலில் களமிறங்கவில்லை. சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலாக தமிழ்க் கட்சிகள், பொது அமைப்புக்களும் இணைந்து பொது வேட்பாளரை களமிறக்கலாமா? அதற்கான சாதக பாதகங்கள் ஆகியவை பற்றிய நீண்ட விவாதத்துக்குப் பின்னரே பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.
எங்களுக்கு விருப்பமோ இல்லையோ ஏதோ ஒரு நிர்பந்தத்தின் பெயரில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்தோம். நாம் தமிழர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என இங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
”தமிழ் இனத்தின் பிரச்சினை தீர்ப்பதற்காக எந்தவொரு ஜனாதிபதியும் இதுவரையில் முயற்சி எடுக்கவில்லை.
இந்தத் தேர்தலிலிருந்து தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. அவர்கள் நினைத்ததை சாதிப்பார்கள்.” என வாக்காளர் ஒருவர் கூறினார்.
”பல வருடங்களாக நாம் எமது உரிமைகளுக்காக போராடி வருகின்றோம். ஒருவரும் அதற்காக முன்வரவில்லை. எனவே எங்கள் பிரச்சினைகளுக்காக நாங்கள்தான் போராட வேண்டும்.
தமிழ் மக்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை. நாம் ஒற்றுமையாக இருந்து எமது வாக்குரிமையைப் பயன்படுத்தி உரிமைக்காக போராட வேண்டும்” என மற்றுமொரு வாக்காளர் தமது கருத்தை பகிர்ந்துக்கொண்டார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.