அதிமுக எம்எல்ஏ பேச்சால் அதிர்ந்த சட்டப் பேரவை - 'ஸ்டாலினே மீண்டும் முதல்வர்'
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் முதலவராக ஸ்டாலின் வருவார்!
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் முதலவராக ஸ்டாலின் வருவார் என்று அதிமுக எம்எல்ஏ கூறுவதை பார்த்த திமுக எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மீண்டும் முதல்வராக ஸ்டாலினே வர வேண்டும் என சட்டப் பேரவையில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் பேசியது சட்டப் பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டப் பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பதிலுரை வழங்கினார். தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். இந்த நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியை வெகுவாக புகழ்ந்தார். பேரவையில் பேசிய அவர், "முதல்வரின் காலை உணவு திட்டம் தொலைநோக்கு பார்வையுடன் ஏற்படுத்தப்பட்ட திட்டம். ஆரம்பப் பள்ளிக்கு வரும் பிஞ்சு குழந்தைகளுக்கு முதல்வர் தாயாக இருந்து சுடச் சுட உணவு வழங்கி வருகிறார். காலை உணவு திட்டம் தமிழ்நாடு இருக்கும் வரை முதல்வரை பாராட்டிக் கொண்டே இருக்கும்.
முதல்வர் ரூ.5000 ரூபாய் கொடுத்து விட்டார் என்று கூப்பாடு போட்டவர்கள் எல்லாம் இன்று அவைக்கு வரவில்லை. வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, தமிழகத்தின் முதல்வராக தலைவர் மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆசியோடும், புரட்சி தலைவி அம்மா ஆசியோடும் இந்த நேரத்தில் அவரை வாழ்த்துகிறேன்" என்றார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புன்முறுவல் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஓபிஎஸ்ஸுன் தீவிர ஆதரவாளர். ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் திமுகவுக்கு சென்ற நிலையில், தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவு நிலைபாடுடன் ஐயப்பன் இருந்து வருகிறார். இதனிடையே, இன்று காலை ஓபிஎஸ், முதல்வரை சந்தித்து பேசிய நிலையில், ஐயப்பன் முதல்வரை பாராட்டி பேசியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதிமுக எம்எல்ஏ ஒருவர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் முதலவராக ஸ்டாலின் வருவார் என்று கூறுவதை பார்த்த திமுக எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறிப்பாக, துரைமுருகன் பேரவைக்கு வர முடியாத நிலையில், அந்த இருக்கையில் அமர்ந்திருந்த அமைச்சர் அன்பில் மகேஸ் மிக உற்சாகமாக மேஜை தட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஓபிஎஸ்-முதல்வர் சந்திப்பு ஏன்?
ஓபிஎஸ்-முதல்வர் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்படுகிறது. இருப்பினும், அரசியல் வட்டாரங்களில் ஓபிஎஸ் - முதல்வர் ஸ்டாலின் இடையேயான சந்திப்பு பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்த வரை, அவர் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.
அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், சட்டப் பேரவை தேர்தலில் தனது நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்திருப்பது அவர் திமுகவில் இணைவதற்கான முயற்சியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


