16ஆவது மே 18இல் நீதிக்கான போராட்டம் – நிலாந்தன்.
கடந்த 16 ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருப்பது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டும்தான்.

நீதி கிடைக்காத 16ஆவது ஆண்டு.கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்கள் தங்களுடைய அரசியலை நீதிக்கான போராட்டம் என்று வர்ணிக்கின்றார்கள். ஆனால் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டமானது தொடர்ச்சியானதாக, செறிவானதாக பெருந் திரள் மயப்பட்டதாக இல்லை.அவை அவ்வப்போது தொடர்ச்சியாக நிகழும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக, அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் போராட்டங்களாகத்தான் காணப்படுகின்றன.
கடந்த 16 ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருப்பது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டும்தான். அவர்களுடைய போராட்டம்தான் ஒப்பீட்டளவில் தொடர்ச்சியானது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்கள் உலகின் கவனத்தை ஈர்க்கத்தக்க விதத்தில் தென்னிலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அல்லது தென்னிலங்கைக்கு நோகக் கூடிய விதத்தில் எவ்வளவு தூரம் போராடியிருக்கிறார்கள்?
சில “எழுக தமிழ்கள்”,ஒரு “பி ரு பி”,அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டங்கள், தமிழ்ப் பொது வேட்பாளர் போன்றவை… தவிர நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டம் தொடர்ச்சியானதாகவோ அல்லது தென்னிலங்கையை அசைக்கக் கூடியதாகவோ இல்லை. ஏன் ?
ஏனென்றால் கடந்த 16 ஆண்டு கால தமிழ் அரசியலானது பெருமளவுக்கு கட்சிகள் மைய அரசியலாகத்தான் இருக்கின்றது.தேர்தல் மைய அரசியல்தான். பெருமளவுக்குத் தேர்தலை நோக்கியே கட்சிகள் உழைக்கின்றன .அதேசமயம் பொதுமக்கள் போராடும்போது அல்லது பாதிக்கப்பட்டவர்கள் போராடும் போது அல்லது மக்கள் அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுக்கும் பொழுது கட்சிகள் அவற்றில் இணைக்கின்றன.நீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்கத் தேவையான ஒரு அரசியல் பேரியக்கம் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னை ஓர் அரசியல் இயக்கம் என்று கூறிக் கொண்டது. தமிழ்த் தேசியப் பேரவையையும் அது அவ்வாறு தான் தன்னை அழைக்கின்றது. ஆனால் நடைமுறையில் அவை தேர்தல் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது தான். பொது வேட்பாளருக்காக உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பும் ஒரு பேரியக்கமாக அடுத்தகட்ட வளர்ச்சியைப் பெறவில்லை. இவ்வாறு தமிழ்மக்கள் மத்தியில் நீதிக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு இல்லாத ஒரு வெற்றிடத்தில், கட்சி மைய அரசியலுக்கு ஊடாக நீதிக்கான போராட்டத்தை முழு அளவுக்கு தாக்கமானதாகவும் செறிவானதாகவும் தொடர்ச்சியானதாகவும் முன்னெடுக்க முடியாத ஒரு நிலைமைதான் காணப்படுகிறது.
தமிழ் மக்களும் தமிழ் கட்சிகளும் போராடவில்லை என்று இல்லை. ஆனால் அந்தப் போராட்டங்கள் ஒரு மையத்தில் இருந்து ஒருங்கிணைக்கப்படவில்லை. எல்லாப் போராட்டங்களையும் ஒரு மையத்திலிருந்து ஒருங்கிணைக்கும் மையக் கட்டமைப்பு இல்லை.
தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் நிலைமை அப்படித்தான். அங்கேயும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லை. கடந்த 16 ஆண்டுகளிலும் நீதிக்கான போராட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அடைவுகளைப் பெற்றிருப்பது புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தான்.
இன அழிப்புக்கு எதிரான தடைகள்,தீர்மானங்களை நிறைவேற்றியதிலும் சரி; இன அழிப்பு நினைவுச் சின்னங்களை நிறுவியதிலும் சரி; இன அழிப்பை அனைத்துலக மயப்படுத்தியதிலும் சரி; இன அழிப்பை நோக்கி ஐநாவும் உட்பட மனித உரிமை அமைப்புக்களின் கவனத்தை குவிய வைப்பதிலும் சரி; இன அழிப்பு ஆவணங்களை வெளியிடுவதிலும் சரி; ஒப்பீட்டளவில் அதிகம் உழைப்பதும் முன்னணியில் நிற்பதும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம்தான்.
புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தாயகத்தோடு ஒப்பிடுகையில் அதிகம் சுதந்திரமான,செல்வச் செழிப்புள்ள ஒரு சூழலுக்குள் வாழ்கின்றது. சுதந்திரமான ஒரு சூழலுக்குள் வாழ்வதால் அவர்கள் இன அழிப்புக்கு எதிராக தாயகத்தை விடவும் ஒப்பீட்டளவில் வினைத்திறனோடு போராடக்கூடியதாக உள்ளது. அதனால் நீதிக்கான ஈழத் தமிழர்களின் கடந்த 16 ஆண்டு காலப் போராட்டத்தில் போராட்டத்தின் கூர்முனை போல காணப்படுவது புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தான்.
ஆனால் அங்கேயும் ஒருங்கிணைவு இல்லை. மைய அமைப்பு இல்லை. தமிழர்கள் தாம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளின் நிலைமைகளுக்கு ஏற்பவும் தமது கொள்ளளவுக்கு ஏற்பவும் அங்குள்ள தனிப்பட்ட நபர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு போன்றவற்றுக்கு ஏற்பவும் வெவ்வேறு பரிமாணங்களில் நீதிக்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.
அங்கே ஒரு மைய அமைப்பு கிடையாது. ஐநா மையச் செயற்பாடுகளிலும் சரி ராஜதந்திர மட்டச் செயற்பாடுகளிலும் சரி இன அழிப்புக்கு எதிரான ஏனைய எல்லாச் செயற்பாடுகளிலும் அங்கே ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்படாத நிலைமைதான் காணப்படுகிறது. இந்த விடயத்தில் தாயகத்தின் தொடர்ச்சியாகத்தான் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பும் காணப்படுகின்றது.
அது மட்டுமல்ல, மேற்படி செயல்பாடுகளில் ஒரு அடிப்படையான தலைகீழ் பொறிமுறை உண்டு. அது என்னவெனில் புலம் பெயர்ந்த தமிழர்களின் இன அழிப்புக்கு எதிரான செயற்பாடுகள் அனைத்தும் அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் யதார்த்தத்துக்கு ஏற்ப முன்னெடுக்கப்படுகின்றவை.அவை தாயகத்திலிருந்து வழிநடத்தப்படுகின்றவை அல்ல. மாறாக இன அழிப்புக்கு எதிரான நீதிக்கான போராட்டம் என்பது தாயகத்திலிருந்துதான் வழிநடத்தப்பட வேண்டும். ஆனால் நடைமுறை அவ்வாறு இல்லை. அதற்கு ஒரு பலமான காரணம் உண்டு. தாயகத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் உண்டு. அரசாங்கமும், ஏன் எதிர்க்கட்சிகளும்கூட நாட்டில் நடந்தது இன அழிப்பு என்பதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அண்மையில் கனடாவில் இன அழிப்பு நினைவுச் சின்னம் நிறுவப்பட்ட பொழுது அதற்கு எதிராக மஹிந்த குடும்பத்தின் சார்பாக நாமல் ராஜபக்ஷ என்ன சொன்னார்? ராஜபக்சகளின் வழக்கறிஞரும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஆகிய அலி சப்ரி என்ன சொன்னார்?
எனவே இன அழிப்புக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாயகத்தில் உள்ள கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் சில அடிப்படையான வரையறைகள் உண்டு. இது காரணமாகவே அவ்வாறான நடவடிக்கைகள் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அதிகம் வினைத்திறனோடு முன்னெடுக்கப்படுகின்றன.
அதன் விளைவாகவே அமெரிக்கக் கண்டத்தில் இன அழிப்புக்கு எதிரான தடைகளும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தாயகத்துக்கு வெளியே ஈழத் தமிழர்கள் அதிக தொகையில் வாழ்வது கனடாவில் ஆகும். அதனால் அங்கு சக்தி மிக்க தமிழ் வாக்காளர் தொகுதி ஒன்று எழுச்சி பெற்று வருகிறது. இது கனடாவின் வெளியுறவுத் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு வளர்ச்சியை எதிர்காலத்தில் பெறக்கூடும்.சில மாதங்களுக்கு முன்பு பிரித்தானியாவும் அவ்வாறு தடைகளை விதித்திருக்கின்றது.
இவ்வாறாக கடந்த 16 ஆண்டுகளாக இன அழிப்புக்கு எதிரான நீதியைக் கோரும் ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ராஜதந்திர வெற்றிகளை புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் சமூகம் பெற்றிருக்கின்றது. எனினும் அவை முழுமையானவை அல்ல.
இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். கடந்த 16 ஆண்டுகளிலும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் மெது மெதுவாகவே தமிழ் மக்கள் முன்னேறி வருகிறார்கள். ஐநா இன்றுவரையிலும் இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்பதனை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.மேலும், நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டம் தாயகத்திலிருந்து வழிநடத்தப்படவில்லை. தாயகத்திலும் அதை வழிநடத்தத்தக்க மைய அமைப்பு இல்லை. இதனால் கடந்த 16 ஆண்டு கால நீதிக்கான போராட்டத்தில் பொருத்தமான ஒருங்கிணைப்புகள் இல்லை.
நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் உலக சமூகத்தை தங்களை நோக்கித் திரட்ட வேண்டியவர்களாகக் காணப்படுகிறார்கள். உலகில் தமக்கு நட்பாக உள்ள நாடுகளின் ஆதரவையும் நிறுவனங்களின் ஆதரவையும் திரட்ட வேண்டியவர்களாகக் காணப்படுகிறார்கள். அவ்வாறு உலகத்தைத் திரட்டுவது என்றால் முதலில் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஒரு தேசமாகத் திரட்டி கொள்ள வேண்டும்.ஆனால் தமிழ் மக்கள் தாயகத்தில் தங்களை ஒரு பலமான மக்கள் கூட்டமாக, தேசமாகத் திரட்டுமளவுக்கு தமிழ் தேசியக் கட்சி அரசியல் இல்லை.நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளும் அதன் பின்னரான அரசியல் உரையாடல்களும் அதைத்தான் காட்டுகின்றன. வாக்களிப்பில் தமிழ் மக்கள் ஒரு தேசமாகத்தான் நிற்கிறார்கள்.ஆனால் கட்சிகள் அவர்களை வாக்காளர்களாகப் பிரித்து வைத்திருக்கின்றன. இதுதான் 16 வது மே 18 இல் ஈழத்தமிழ் சமூகத்தின் கள யதார்த்தம்.
நிலாந்தன்