கடந்த பதினேழு ஆண்டுகால அரசியல் நகர்வும் அதன் பூச்சிய விளைவும்.
பிரபாகரன் இல்லாத பதினேழு ஆண்டுகள்?
கடந்த பதினேழு ஆண்டுகால அரசியல் நகர்வும் அதன் பூச்சிய விளைவும்
திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் மூன்று தசாப்தகால ஈழத் தமிழர் அரசியலை, தனது காலடியில் வைத்திருந்த ஒருவர். அவரைப் போன்று ஈழத் தமிழர் அரசியலை தன் முழு ஆளுமைக்குள் வைத்திருந்த ஒருவர் வரலாற்றில் இல்லை. ஈழத் தமிழ் மக்கள் அரசியல்ரீதியில் உச்சமான ஒன்றை அடைந்திருக்க முடியும் என்றால், அது அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமே சாத்தியப்பட்டிருக்க வேண்டும் - ஆனால் அது நடக்கவில்லை. இதற்கு ஒருவர் மீது குற்றம்சாட் முடியும் என்றால், அங்கும் பிரபாகரனின் நாமம்தான் எஞ்சியிருக்கும் - ஏனெனில் அனைத்தும் அவரைச் சுற்றியே இருந்தது. வெற்றியும் அவர்தான் - தோல்வியும் அவர்தான்.
இவ்வாறானதொரு முடிவை அவர் ஊகித்திருப்பார் என்பதை நம்புவது கடினம்தான் – ஆனால் ஒரு இராணுவ நிபுனர், பல யுத்த களங்களின் வெற்றியை கண்டவர் என்னும் வகையில் யுத்த முடிவின் இறுதித் தருணங்களிலாவது, அவர் தனது முடிவை ஊகித்திருக்கக் கூடும். கிளிநொச்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் நிச்சயம் அவ்வாறானதொரு அச்சம் விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்குள் ஏற்பட்டிருக்காது என்பதை நம்புவது கடினம். எல்லாம் ஒரு திரைப்பட்டத்தை பார்த்து முடித்தது போன்று, முடிந்து போனது.
வெற்றிகளின் வழியாக மட்டுமே தீர்மானிக்கப்படும் அதிகார உலகில், தோற்றவர்களின் குரல்கள் ஒரு பொருட்டல்ல. ஏனெனில் அதிகாரத்தின் மொழி ஒன்றுதான் - அதாவது, முடிந்தால் வெற்றிவாகை சூடு, முடியவில்லையா சரணடை - இல்லாவிட்டால் அழிந்துபோ. இதுவே உலக அதிகார அரசியல் வரலாறு. முன்னர் நான் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டது போன்று, பிரபாகரனின் இறுதி யுத்தம் தோற்கக் கூடாத யுத்தம் ஆனால் அவர் தோற்றுவிட்டார் – தோற்கக் கூடாத யுத்தத்தில் தோற்றுப் போதல் என்பது அழிவுதான். பிரான்சில் வாழ்ந்து, மறைந்த, ஈரோஸ் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான கி.பி.அரவிந்தனின் நினைவை முன்னிட்டு, 2015இல், கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். அதில் பதிவு செய்திருந்த சில வரிகளை தேவை கருதி இங்கு மீண்டும் பதிவு செய்கின்றேன் - அதாவது, ஒரு போராட்டத்தை ஆரம்பித்தவர்களே அதனை நிறுத்தினால் அது நன்மையில் முடிவுறும் ஆனால் ஒருவர் ஆரம்பித்த போராட்டத்தை, இன்னொருவர் (ஒரு தரப்பு) முடித்து வைக்க முற்பட்டால் - அது பேரழிவில்தான் முடிவுறும். பிரபாகரனின் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டிய பொறுப்பும் அவரிடம் மட்டுமே இருந்தது ஆனால் அவர் அந்தப் பொறுப்பைச் செய்யாத நிலையில், அவருடைய போராட்டம் எதிரிகளால் முடித்துவைக்கப்பட்டது.
ஒரு அரசியல் மாணவன் என்னும் வகையில், அடுத்தவர்கள் மீது பழிபோடுவதையும், அடுத்தவர்களை குறை கூறுவதையும் நான் எப்போதுமே ஆதரிப்பதில்லை – ஏனெனில் அடுத்தவர்கள் என்பது, எப்போதுமே அடுத்தவர்கள்தான். அவர்களின் நலன்களின் வழியாகத்தான், அனைத்தையும் அவர்கள் நிறுத்துப் பார்ப்பார்கள் - அதிகார அரசியலின் விதியின் அடிப்படையில் நோக்கினால், அதில் எந்தத் தவறும் இல்லை – எனெனில் எங்களுக்கு எங்களுடைய நலன்கள் முக்கியமானது என்றால், மற்றவர்களுக்கு அவர்களுடைய நலன்கள்தானே முக்கியமானதாக இருக்கும் - அதனை எவ்வாறு தவறு என்று வாதிட முடியும்? எனவே இதில் எவர் மீதும் விரல் நீட்டுவதில்; பயனில்லை. நாம்தான் நமக்காக சிந்திக்க வேண்டும் - செயற்பட வேண்டும்.
பிரபாகரன் இருக்கும் வரையில் ஈழத் தமிழர்களுக்கான சொந்த பலம் என்பதிலேயே அவர் உறுதியாக இருந்தார். இராணுவ பலமே, தமிழ் மக்களின் பலம் என்று எண்ணினார். அதிகார அரசியலின் விதியின் அடிப்படையிலும், உலக அரசியல் வரலாற்றின் அடிப்படையிலும் நோக்கினால், பிரபாகரனின் சிந்தனையை தவறு என்று வாதிட முடியாது. ஏனெனில், இராஜதந்திரம் பற்றி ஒரு பிரபலமான கூற்றுண்டு – இது ஜேர்மன் (பிரஷ்ய அரசன்) மகா பிரடெரிக் (1712-1786) கூறியது – அதாவது, ஆயுதங்கள் இல்லாத ராஜதந்திரம் என்பது இசைக் கருவிகள் இல்லாது இசையமைப்பதற்கு ஒப்பானது. இதே போன்று, பிரித்தானிய அதிபர், வின்சன் சர்ச்சில், “அதிகாரம் இல்லாத ராஜதந்திரம் என்பது உரை இல்லாமல் பிரசங்கம் செய்வது போன்றது” என்றார். இவைகள் உணர்த்துவது, அரசியல் என்பது வெறும் பேச்சுக்களோ, புலமையோ, தத்துவமோ அல்ல மாறாக அதிகாரம். அதிகாரம் இல்லாவிட்டால் என்னதான் அறிவாற்றல் இருந்தும் பயனில்லை. ஆயுத பலத்தின் வழியாகத்தான் ஒஸ்லோவில் விடுதலைப் புலிகள் அமைப்பால் நிமிர்ந்து பேச முடிந்தது. ஆயுதங்களை கைவிடுதல் என்பது நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டது ஏனெனில், ஆயுதங்கள் எங்களுடைய மக்களின் அதிகாரமாகும் என்று அன்ரன் பாலசிங்கம் குறிப்பிட்டது இந்த அடிப்படையில்தான்.
இந்தப் பின்னணியில் பிரபாகரனின் காலத்தை வாசித்தால், பிரபாகரன் ஒரு பலத்தின் அடிப்படையில் அனைத்தையும் அளவிட்டது, சிந்தித்தது, செயற்பட்டது சரியானது. இந்தப் பின்புலத்தில் பிரபாகரனை ஒரு ஸ்டாலினிஸ்ட் எனலாம். லெனின் மரணத்தைத் தொடர்ந்து அவரது இடத்தை நிரப்ப வேண்டியவர் ஆளுமைமிக்க, அறிவுஜீவியான லியோன் ரொட்ஸ்கி – ஆனால் அது நிகழவில்லை – ஏனென்றால், ரொட்ஸ்கியோ (ideas) கருத்துக்களே வரலாற்றை நகர்த்துவதாக நம்பினார் - அதனால் ஸ்டாலினை கண்டுகொள்ளவில்லை ஆனால் ஸ்டாலினோ (Control) அதிகாரமே வரலாற்றை நகர்த்துவதாக நம்பினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் அப்படித்தான் நம்பினார் - அதிகாரம் முழுவதையும் தனது பிடிக்குள் வைத்திருப்பதன் மூலமே ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றை நகர்த்த முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். அதன் அடிப்படையிலேயே அனைத்தையும் திட்டமிட்டார். அதிகாரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு சென்ரிமென் உதவாது. பாவ புன்னியக் கதைகள் உதவாது. ரொட்ஸ்க்கியை நன்கு திட்டமிட்டு சோவியத் அதிகார மையத்திலிருந்து வெளியேற்றிய பின்னரும் கூட, ரொட்ஸ்கியை உயிரோடு விட்டுவைக்க ஸ்டாலின் விரும்பவில்லை. மெக்சிக்கோவில் தஞ்சமடைந்திருந்த ரொட்ஸ்கி, ஸ்டாலினிய உளவாளியால் கொல்லப்பட்டார்.
ஆனால் அதிகார சக்திகளினால் தீர்மானிக்கப்படும் உலகிற்கு முன்னால், ஒரு சிறிய ஆயுத அமைப்பின், ஆயுத பலத்தின் எல்லை மிகவும் மட்டுப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடியாமையில்தான் அனைத்து சிக்கல்களும் ஆரம்பித்தன. இருக்கும் பலத்தை எக்காலத்திற்குமான அரசியல் பலமாக மாற்றிக் கொள்ளும் உபாயம் அறியாமல் இருந்ததே பெரும் தவறு. பிரபாகரன் அதனை புரிந்து கொள்ளாமல் இருந்தார் என்று நம்புவது கடினம் ஏனெனில் இராணுவ நுணுக்கங்களை அறிந்திருந்த ஒருவர், எவருடைய ஆதரவும் இன்றி, தனது நம்பிக்கையையும், தன்னை நம்பியவர்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, ஒரு வலுவான இராணுவக் கட்டமைப்பை உருவாக்குவதில் வெற்றிபெற்றவர், அவ்வளவு எளிதாக விடயங்களை கண்டுகொள்ள முடியாதவராக இருந்திருக்க முடியாது ஆனாலும் அனைத்துமே நடந்து முடிந்தது.
ஒரு வேளை அவர் தனது நம்பிக்கையாலும், தனது அனுபவங்களாலும் கட்டுண்டு, திருப்பிப் பார்க்க முடியாதவாறு தன்னைத்தானே சிறைப்படுத்தி வைத்திருந்திருக்கலாம் - அவர் என்ன எண்ணினார் என்பதைப் பற்றி ஊகங்களை மட்டுமே நம்மால் செய்ய முடியும். ஆனால் அவர் கட்டியெழுப்பிய சாம்ராஜ்யத்திற்கான இறுதி அத்தியாயத்தையும் அவரே எழுதினார் என்பதே வரலாறு.
இது பிரபாகரன் இல்லாத காலம். மிகவும் சிரமப்பட்டு, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அவர்மீது மரியாதை கொண்டவர்கள், அவருக்கான இறுதி அஞ்சலியை கடந்த ஆண்டு செய்திருந்தனர். அது எப்போதோ செய்யப்பட்டிருக்க வேண்டும் - அப்படி நடந்திருந்தால் பலரது சுயநல அரசியல் தேவைகளுக்கான கருவியாக, அவரது பெயர் பயன்படுத்தப்படுவதை தடுத்திருக்கலாம்.
ஒருவர், அவருடைய காலத்தில் ஆற்றிய செயல்களின் பெறுமதி, அவர் இல்லாத காலத்தில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என்பதைக் கொண்டே மதிப்பிடப்படும். இந்த அடிப்படையில் நோக்கினால், பிரபாகரன் இல்லாத கடந்த பதினேழு ஆண்டுகளில் அவரது நாமம் பயன்படுத்தப்பட்ட முறையும், அவரது பெயரால் இடம்பெற்ற விடயங்களும் எந்த வகையிலும் அவரை மரியாதைக்குரியவராக பாதுகாக்கவில்லை – மாறாக, அவரை அவமதிப்பதாகவே அமைந்திருந்தது. அவர் சிலரது வியாபார நலன்களுக்கான கருவியாக்கப்பட்டிருக்கின்றார். இது ஏன் நடந்தது? இப்போதும் ஏன் நடக்கின்றது? - என்பதற்கான பதில் இந்தக் கட்டுரையாளரிடம் இல்லை - இலகுவான பதில் ஒன்றுண்டு - இவை அனைத்துக்கும் பின்னாலும் உளவுத்துறைகளின் கரங்கள் உண்டு – அப்படியென்றால் தமிழ் நாட்டில் சீமானையும் ஏதோவொரு உளவுத்துறைதான் வழிநடத்துகின்றது என்னும் முடிவுக்கே நாம் வர நேரிடும். அவ்வாறான சதிக்கோட்பாட்டு வாதங்களில் சுகம் காண்பது எனது நோக்கம் அல்ல, மேலும் சதிக்கோட்பாடுகளை முன்னிறுத்தும் அரசியலை நான் ஆதரிப்பதும் இல்லை. ஏனெனில் அது ஆதரிப்பவரையும் ஒரு நாள் தாக்கும். துரோகி என்பது எவ்வாறு ஒரு பூமறாங்காக இன்று அனைவரையும் தாக்குகின்றதோ அப்படி.
இன்றைய அரசியல் இயலாமையும், ஈழத் தமிழர்களின் இன்றைய தலைவர்கள் என்போர்களின் நிலையையும் உற்றுநோக்கினால், ஈழத் தமிழர் அரசியல் அடிப்படையிலேயே அதன் உயிரோட்டத்தை இழந்துவிட்டது. சாறு இல்லாத கரும்பின் சக்கை போன்றதே இன்றைய ஈழத் தமிழர் அரசியல். 2009இற்கு பின்னரான காலத்தை கையாள முடியாமையும், எவ்வாறு கையாளுவது என்பதில் ஒரு புள்ளியில் சந்திக்க முடியாமையுமே அனைத்துக்குமான காரணம். மாபெரும் தியாகங்களை செய்த ஒரு மக்கள் கூட்டம், எதிரியையே வியக்கவைத்த தாக்குதல்களை புரிந்த ஒரு மக்கள் ஒரு கூட்டம், இன்றோ, ஈழத் தமிழர் அரசியல் என்றால், அது கோமாளித்தனம் என்று கூறக்கூடிய நிலைக்கு வந்து சேர்ந்திருக்கின்றது. மக்களின் பிரதிநிதிகளின் தகுதியைக் கொண்டே, ஒரு மக்கள் கூட்டத்தின் அரசியல் விழிப்புணர்வை அளவிட முடியும். அப்படிப் பார்த்தால், ஈழத் தமிழர்களின் அரசியல் விழிப்புணர்வின் அளவு என்ன என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.
கடந்த பதினேழு ஆண்டுகால அரசியல் நகர்வுகளையும் அதன் பூச்சிய விளைவையும் உற்றுநோக்கினால், ஒன்று வெள்ளிடைமலை – அதாவது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தோற்றுப் போனார் என்பது எந்தளவு உண்மையோ, அதேயளவிற்கு, பிரபாகரன் இருக்கின்ற போது, அவரை ஏற்காதவர்களும், அவரைத் தூற்றியவர்களும் தோற்றுத்தான் போயிருக்கின்றனர். ஏனெனில் அவர் இல்லாத பதினேழு ஆண்டுகளில் எந்தவொரு புதிய அரசியல் போக்கையும் தமிழ்ச் சூழலில் எவராலும் ஏற்படுத்த முடியவில்லை. பிரபாகரன் தவறு, நீங்கள் சரியானவர்கள் என்றால், ஒரு புதிய அரசியல் அத்தியாயம் எழுதப்பட்டிருக்க வேண்டுமல்லவா – அது நிகழவில்லை என்றால் உங்களால் முடியவில்லை என்பதுதானே பொருள். அதே போன்றுதான் பிரபாகரனை இப்போதும் நேசிப்பதாகக் கூறிக்கொண்டு, அவரை தங்களுடைய அரசியலுக்கான முதலீடாக்கிக் கொண்டிருப்பவர்கள், ஒன்றில் அவரது பாதையில் பயணித்திருக்க வேண்டும் அல்லது ஆகக் குறைந்தது ஜனநாயக அரசியலையாவது ஒரு குறைந்தளவான அரசியல் பலமாக்கிக் கொள்ளும் முயற்சியில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஆனால் எதுவும் நிகழவில்லை. அந்த வகையில் நோக்கினால், பிரபாகரனின் இறப்பின் பின்னரான காலம் என்பது, நாங்கள் தோற்றுப் போனவர்கள் என்பதை மேலும் உறுதிப்படுத்திய காலமாகவே நீண்டு சென்றிருக்கின்றது.
- யதீந்திரா 17.05.2026


