2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்! ஆனால் ஆறு அணிகளுக்கு மட்டுமே அனுமதி!
ஒவ்வொரு அணியிலும் தலா 15 வீரர்கள் வீதம், மொத்தம் 90 வீரர்கள் ஒலிம்பிக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கலாம்.

2028 ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற உள்ளன. இதில் ஸ்குவாஷ், பேஸ்பால்,லாக்ரோஸ் உள்ளிட்ட ஐந்து புதிய விளையாட்டுகளுடன் கிரிக்கெட்டும் புதிதாக சேர்க்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சி மற்றும் ஒவ்வொரு விளையாட்டிலும் களம் காண உள்ள வீரர்களின் எண்ணிக்கை குறித்த ஒப்புதலை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) நிர்வாக வாரியம் நேற்று அளித்துள்ளது.
இதன்படி, 2028 இல் இடம்பெறவுள்ள டி20 கிரிக்கெட்டில் ஆண்கள், பெண்கள் பிரிவில் தலா ஆறு அணிகளுக்கு மட்டுமே அனுமதி என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. அத்துடன், ஒவ்வொரு அணியிலும் தலா 15 வீரர்கள் வீதம், மொத்தம் 90 வீரர்கள் ஒலிம்பிக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் ஆஃப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே ஆகிய 12 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த நிலையில், ஒலிம்பிக் கிரிக்கெட் தொடரில் 6 அணிகள் மட்டுமே பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாடு என்ற முறையில் அமெரிக்கா நேரடியாக கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுவிடும். அமெரிக்காவை தவிர்த்து, ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளவுள்ள பிற 5 அணிகள் எவை என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஐஐசி டி20 சாம்பியன் பட்டத்தை தற்போது ஆண்கள் பிரிவில் இந்திய அணியும், பெண்கள் பிரிவில் நியூசிலாந்து அணியும் வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக 1900-ம் ஆண்டு, பாரீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றிருந்தது. கிரேட் பிரிட்டனுக்கும், பிரான்ஸுக்கும் இடையே இருநாள் போட்டியாக அது நடைபெற்றது. அதன்பின் 128 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் விளையாட்டிற்கு உலக அளவில் ரசிகர்கள் மத்தியில அதிகரித்துவரும் ஆதரவை கருத்தில் கொண்டு, 1998 இல், கோலாலம்பூரில் நடைபெற்ற காமல்வெல்த் போட்டிகளில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது. இதேபோன்று 2022- இல் பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி முதன்முதலில் நடத்தப்பட்டது.