காசாவை படம்பிடித்தால் முள்ளிவாய்க்கால் தெரிகின்றது?
எகிப்து மற்றும் கட்டாரில் இடம்பெற்று வரும் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் காசா நகரில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் புதிய தாக்குதல்கள்.

போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தர்கள் தொடர்ந்து முயற்சி
முள்ளிவாய்க்கால் போல் பிணக்குவியல்கள், முள்ளிவாய்க்கால் போல் மனித ஓலங்கள், மனித அவலங்கள்
எகிப்து மற்றும் கட்டாரில் இடம்பெற்று வரும் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் காசா நகரில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் புதிய தாக்குதல்களால் வீதிகளில் மீட்கப்படாது உடல்கள் குவிந்து கிடப்பதாகவும் குடியிருப்பாளர்கள் வீடுகளில் சிக்கி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசா நகரில் இஸ்ரேல் ஆரம்பித்திருக்கும் பாரிய தாக்குதல்கள் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறாக அமையும் என்று ஹமாஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.
போருக்கு முன்னர் காசா மக்கள் தொகையில் கால் பங்குக்கும் அதிகமானவர்கள் வசித்து வந்த காசா நகர், கடந்த ஆண்டு போர் வெடித்து சில வாரங்களிலேயே அழிக்கப்பட்டது. எனினும் ஆயிரக்கணக்கான மக்கள் தமது இடிந்த வீடுகளுக்கு திரும்பினர். அவர்களை மீண்டும் வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
காசா நகரின் அல் ஹவா மற்றும் சப்ரா பகுதிகளில் உள்ள மக்கள் தமது வீடுகளுக்குள்ளேயே சிக்கியும் கொல்லப்பட்டும் இருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அல் ஹவா மற்றும் ரிமால் பகுதிகளில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அங்குள்ள வீதிகளில் இருந்து சடலங்களை மீட்க முடியாதுள்ளதாகவும் காசா சிவில் அவசர சேவை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவம் பெரும் அழிவுகளை மேற்கொண்டு இரண்டு வழிகளைப் பயன்படுத்தி தெற்கை நோக்கி செல்லும்படி அறிவுறுத்தியபோதும் காசா நகரின் பல குடியிருப்பாளர்களும் அங்கிருந்து வெளியேற மறுத்து வருகின்றனர். ‘நாம் வெளியேறப் போவதில்லை’ என்று சிலர் சமூக ஊடகத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
‘நாம் மரணித்தாலும் தெற்கிற்கு செல்ல மாட்டோம். ஒன்பது மாதங்களாக பட்டினி மற்றும் குண்டுகளை நாம் சகித்து வருகிறோம். உயிர்த்தியாகியாக இங்கேயே மரணிக்க நாம் தயாராக இருக்கிறோம்’ என்று 30 வயதான முஹமது அலி, ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அலியின் குடும்பம் நகருக்குள் பல தடவைகள் இடம்பெயர்ந்திருக்கும் நிலையில் உணவு, நீர் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
‘போர் மீண்டும் ஆரம்பிப்பது போன்று ஆக்கிரமிப்பாளர்கள் காசா நகரத்தின் மீது குண்டுகளை வீசுகின்றனர். விரைவில் போர் நிறுத்தம் ஒன்று வரும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அப்படி இல்லாவிட்டால் இறைவனின் நாட்டப்படி நடக்கும்’ என்றும் அவர் கூறினார்.
இதேவேளை காசா நகரில் இருந்து வெளியேறும் பொதுமக்கள் மீது இஸ்ரேலிய ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகள் சூடு நடத்துவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காசா நகரில் உள்ள யார்முக் அரங்கை கடந்து செல்ல திட்டமிட்டபோதும் இஸ்ரேலிய ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்ட பலஸ்தீனர்களின் உடல்கள் வீதிகளில் இருப்பது பற்றி அறிவுறுத்தப்பட்டதாக பெண் ஒருவர் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
‘வீதிகளில் இருக்கும் உடல்களை எடுத்துச் செல்லும்படி துணை மருத்துவர்கள் மற்றும் தீயணைப்புப் படையினரை கேட்கிறோம். இல்லாவிட்டால், அந்த உடல்களை நாய்கள் தின்னும். அந்த உடல்கள் புதைக்கப்பட வேண்டும்’ என்று அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அந்த உடல்களை மீட்க முடியாதிருப்பதாக துணை மருத்துவர்கள் குறிப்பிட்டதாக மற்றொருவர் தெரிவித்துள்ளார்.
‘உடல்களை மீட்கும்படி தமக்கு அறிவுறுத்தல் கிடைக்கவில்லை என்றும் உடல்களை அணுகுபவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காவதாகவும் அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்’ என்றார்.
வீதியில் நடந்து செல்பவர்கள் தலையில் சுடப்பட்டதை கண்டதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
காசா நகரில் வலுக்கட்டாயமாகவெளியேற்றப்பட்டு வரும் மக்கள் பெரும் வேதனையை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
காசாவின் வடக்கில் சுமார் 300,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் இருப்பதாக ஐ.நா கணித்துள்ளது.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 50 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 38,345 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 88,295 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் காசாவின் கிழக்கு புறநகர் பகுதியான ஷஜையாவில் கடந்த இரண்டு வாரங்களாக புதிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட இஸ்ரேலியப் படை அங்கிருந்து வெளியேறி இருப்பதாக காசா அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்தப் படை நடவடிக்கையில் பலர் கொல்லப்பட்டு குடியிருப்பு கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காசாவின் தெற்கு முனையில் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரில் இஸ்ரேலிய டாங்கிகள் கடந்த மே மாதம் தொடக்கம் செயற்பட்டு வரும் நிலையில் நகரின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வீடுகள் தொடர்ந்து தகர்க்கப்பட்டு வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கு ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் சிறிய பலஸ்தீன போராட்டக் குழுக்கள் இஸ்ரேலிய படையுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்கு ரபாவில் உள்ள டெல் அல் சுல்தான் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் ஒரு குழந்தை உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரபாவில் இருந்து வீசப்பட்ட ஐந்து ரொக்கெட் குண்டுகளை வெற்றிகரமாக இடைமறித்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பு கடந்த வாரம் முக்கியமான விட்டுக்கொடுப்பு ஒன்றை செய்த நிலையில் கட்டார் மற்றும் எகிப்தில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் முதலில் இணக்கத்தை வெளியிடுவதற்கு முன்னர் போர் நிறுத்தத்தை ஆரம்பிப்பதற்கும் சில பணயக்கைதிகளை விடுவிப்பதற்குமே ஹமாஸ் தனது நிபந்தனையில் தளர்வை கொண்டுவந்தது.
எனினும் எந்த ஓர் உடன்படிக்கையும் போரின் தமது நோக்கங்களை நிறைவு செய்வதற்காக போரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுத்தி வருகிறார்.
நெதன்யாகுவின் கூட்டணி அரசில் உள்ள தீவிர வலதுசாரிகள், ஹமாஸ் ஒழிக்கப்படும் வரை போரை நிறுத்துவதை எதிர்த்து வருகின்றனர்.