“இலங்கையை குற்றவாளிகளால் ஆளப்படும் நாடாகவே உலகம் பார்க்கிறது“
.
நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் ஜனரஞ்சக அரசாங்கம் உருவாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
வளமான நாட்டையும் அழகிய வாழ்வையும் கொண்டு செல்லும் புதிய மறுமலர்ச்சி பாதைக்கு நாட்டை திருப்புவோம் என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் வளங்களைப் பயன்படுத்தி, மேம்படுத்தி, தற்போது உலகிற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வரும் நாட்டின் பெயரை, உயரிய நிலைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”இந்த நாட்டிற்கு மாற்றம் தேவை என்று மக்கள் கூறுகிறார்கள். மாற்றம் தேவை என நினைப்பதில் மாத்திரம் பயனில்லை. மாற்றத்திற்கான வாய்ப்பு வர வேண்டும். இப்போது அந்த பலமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. வலிமையான மாற்றத்தை நோக்கி செல்ல வலுவான சக்தி தேவை. எனவே அந்த அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி கொடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் மாற்றத்தை ஏற்படுத்த பல்வேறு தலைவர்களை கொண்டு வந்தார்கள் ஆனால் யாரும் அந்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பது உங்களுக்கு நினைவிருக்கும். அதனால் கடந்த 76 வருடங்களாக மக்களின் நம்பிக்கைகள் அனைத்தும் தகர்ந்து போனது.
ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் ஒரு தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தன, அவை வளம் பெற்றன. உலகச் சந்தை மாறிவரும் போது நவீன தொழில்நுட்பம் நாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை. அப்போதிலிருந்து எங்களிடம் தேயிலை, தேங்காய், ரப்பர் மட்டுமே உள்ளது.
சந்திரிகா, மஹிந்த, கோட்டாபய மற்றும் மைத்திரிபால, ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவும் அடிப்படை மனித உரிமைகளை மீறிய குற்றவாளியாவார்.
இவ்வாறிருக்க ஏனைய நாடுகள் எமது தலைவர்களை எப்படி ஏற்றுக்கொள்ளும்? நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் சட்டத்தை மதிப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த நாட்டை குற்றவாளிகளால் ஆளப்படும் நாடாகவே உலகம் பார்க்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.