இளைஞர் யுவதிகளுக்காக நடைபெறும் பயிற்சிப்பட்டறை.The secret to mindful travel - A walk in the woods என்றொரு பெயர்.
ஒரு காட்டிற்கு அழைத்துச் சென்று, காட்டுடன் நெருங்க விடுவோம் என்று தீர்மானமாயிற்று.
எழுபது பேரைக் கூட்டிச்சென்று சில உளவியல் பயிற்சிகளை வளவாளர் மூலம் கொடுக்கப்பட்டது.
இளைஞர் யுவதிகளுக்காக வெவ்வேறு தலைப்புகளில் நடைபெறும் பயிற்சிப்பட்டறைகளை நட்சத்திர விடுதிகள், ஏசி போட்ட மாநாட்டுமண்டபங்கள் என்று நடத்தி, மூன்று நேர உணவும் அவ்வப்போது icebreaker என்ற பெயரில் கால் கையை நீட்டி மடக்கிற விளையாட்டுகளையும் விடுத்து, இந்த முறை வித்தியாசமாக அதனை திட்டமிட்டோம்.
அதற்கு The secret to mindful travel - A walk in the woods என்றொரு பெயர் வைத்து... பங்குபற்றுனர்களை ஒரு காட்டிற்கு அழைத்துச் சென்று, காட்டுடன் நெருங்க விடுவோம் என்று தீர்மானமாயிற்று. சரி எந்த காட்டுக்கு போகலாம்...சிங்கராஜா வனம்? வில்பத்து? நக்கிள்ஸ்? என்று வழமை போலவே "நெய்யிற்கு அலைந்தோம்".
அட...முல்லைத்தீவு மாவட்டத்தின் 70% நிலப்பரப்பை காடு என்று வனவள திணைக்களமே வரையறுத்து இருக்கும் போது பல்வகைத் தாவரங்களோடும் விலங்குகளோடும் இருக்கும் முல்லைத்தீவிற்கும் வவுனியாவிற்கும் இடையில் உள்ள காடொன்றுக்குள் நாங்கள் செல்வதென்று முடிவானது.
"கரப்புக்குத்தி"
காட்டின் எல்லையிலேயே ஒரு குளம். குளத்திலிருந்து சிறுபோகத்துக்கென திறந்துவிடப்பட்டிருந்த நீர் சலசலவென வாய்காலுக்குள் பாய்ந்து கொண்டிருந்தது. வாய்க்காலின் மேல் ஒரு பரண். எழுபது பேரை கூட்டிச்சென்று சில உளவியல் பயிற்சிகளை வளவாளர் மூலம் கொடுக்கப்பட்டது.குளத்து நீர் வாய்க்காலில் பாயும் ஓசையும் காட்டின் ரீங்காரமும் பின்ணணியில் கேட்க அவர்கள் எழுபது பேரும் கண்மூடி அமர்ந்திருந்து செய்த பயிற்சியும். சில்லென்ற நீரினுள் கால்களை இறக்கி வைத்துக்கொண்டு, கண்மூடி நீருடன் அவர்கள் பேசிய தருணமும் நிஜமாகவே அவர்களை இலேசாக்கியது என்றார்கள்.
அவர்களுக்கான தேநீர் தயாரிப்பதை நான்கு குழுக்களாக பிரித்து போட்டியாக வைத்து, ஆசை தீர நீரில் கும்மாளம் அடிக்க விட்டு, குளத்தை அண்டி இருந்த காட்டுக்குள் காடு தெரிந்த வழிகாட்டிகளோடு ஒரு மணி நேரம் நடக்க விட்டு, மரங்கள், பழங்கள், பூக்கள் என புதிதுபுதிதாக காட்டி, அவர்களை காட்டுக்குள் இரண்டாக பிரித்து பாதையை கண்டுபிடித்து பஸ் நிற்கும் இடத்தை அடையச் செய்தோம். இந்த நிகழ்வுக்கான செலவு, வழமையாக மாநாட்டுமண்டப பயிற்சிப்பட்டறையின் செலவை விட அரைவாசி தான். ஆனால் அனுபவமும் உற்சாகமும் பல மடங்கு.
இரண்டு நாள் விடுமுறை கிடைத்தால், இந்த மாதிரி திட்டமிடலாம். நண்பர்கள் சேர்ந்து விடுதிகளிலும் திரையரங்குகளிலும் பார்ட்டி பண்ணுவதை குறைத்து இந்த மாதிரி இடங்களை இன்னுமின்னும் தேடி கண்டு பிடித்து கூடாரமடித்து கதை பேசி சமைத்து குளித்து மகிழலாம். அந்த பயணம் முடிய எங்கட மூளை 100% charge full என்று சொல்லும். Trip போக போறம் எண்டு எப்பவுமே வவுனியா தாண்டி தான் போகோணும் எண்டில்ல. எங்கட வீட்டுக்கொல்லையே இவ்வளவு ரம்மியமாக இருக்கும் போது பிறகேன் காசை கரியாக்கி... வழியெல்லாம் சொப்பின் பையில சத்தி எடுத்து.... எரிச்சலோடு திரும்போணும்?
வைதேகி நரேந்திரன்