ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் தேவை, வடகொரியாவுக்கு தொழில்நுட்பம் தேவை!
.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் – வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சந்திப்பின் பின்னணி
வட கொரியாவின் அணுசக்தி வளர்ச்சி மற்றும் மேம்பட்ட ஆயுதப் பரிமாற்றங்களை புதின் கையாள விரும்புகிறார்?
புதின் கொரிய நகரமான பியாங்யாங்குக்கு செல்லவிருக்கிறார். கடந்த 24 ஆண்டுகளில் புதின், வடகொரியாவில் கால் பதிப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 2000ஆம் ஆண்டு வடகொரியத் தலைவர் `கிம் ஜாங் இல்’ ஆட்சியில் இருந்த போது அவர் அங்கு சென்றிருந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் ரஷ்யாவின் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் (Vostochny Cosmodrome) நடந்த உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, `கிம் ஜாங் உன்’னின் அழைப்பை புதின் ஏற்றுக்கொண்டார்.
கொரியாவில் புதின் பங்கேற்க இருக்கும் உச்சி மாநாடு உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ரஷ்யா-வடகொரியா நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பின் அளவு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
விளம்பரம்
இந்த சந்திப்பு இருநாடுகளுக்கு இடையிலான கலாசாரம், விவசாயம், பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வட கொரியாவின் அணுசக்தி வளர்ச்சி மற்றும் மேம்பட்ட ஆயுதப் பரிமாற்றங்களை புதின் எவ்வாறு கையாள விரும்புகிறார் என்பது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ஆகும்.
தென் கொரியாவில் உள்ள வட கொரிய ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான டாக்டர் கிம் டோங்-யுப் கூறுகையில், “இந்த உச்சி மாநாடு, உறுதியான விளைவுகளை உருவாக்கும் ஆழமான உரையாடல்களுக்கான இடமாக இல்லாமல் ஒரு நிகழ்வாக இருக்க கூடும்” என்றார்.
ராணுவம் : ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் தேவை, வடகொரியாவுக்கு தொழில்நுட்பம் தேவை.
இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பின் விளைவாக வட கொரியாவும் ரஷ்யாவும் ஒருவரையொருவர் அதிகம் சார்ந்துள்ளன.
கொரியா பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் துறையின் பேராசிரியரான டாக்டர் நாம் சுங்-வூக்கின் கருத்துப்படி, “அவர்களின் நிகழ்ச்சி நிரலில் உள்ள முக்கிய தலைப்புகளில் ஒன்று, வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ரஷ்யாவிற்கு எவ்வளவு அதிகமாக வழங்கப்படும்” என்பதுதான்.
வழக்கமான ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குறுகிய கால ஒப்பந்தங்களுக்கு அப்பால் இம்முறை பேச்சுவார்த்தை சில முக்கிய முடிவுகளை எட்டக்கூடும் என்று அவர் நம்புகிறார். ஆயுத அமைப்புகளின் கூட்டு மேம்பாடு உட்பட நெருக்கமான ராணுவ ஒத்துழைப்பை இரு நாடுகளும் ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார் அவர்.