Breaking News
ஒவ்வொரு ஏழு வருடத்திற்குப் பிறகும் இறப்பு என்னை நெருங்கும் வாய்ப்பு இருப்பதாக ஜோசியர் கூறியிருந்தார். __ஒஷோ.
ஒருமுறை இறப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டு விட்டால், நீ அந்த இறப்பற்றதைக் குறித்த விழிப்புணர்வு அடைவாய்.
சிறுவயதில் என்னுடைய குடும்ப ஜோதிடர் என்னை பற்றி சொல்லியிருந்தார். 21 வயதில் எனக்கு மரணம் சம்பவிக்கும் என்று. அது மட்டுமல்ல ஒவ்வொரு ஏழு வருடத்திற்கும் மரணத்திற்கான ஆபத்து நேரும் என்றும் சொல்லி இருந்தார்.
என்னுடைய குடும்பத்தார் மிகவும் பயந்து போய் இருந்தனர். ஏனென்றால் ஏற்கனவே ஏழாவது வயது முடியும்பொழுது அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தது.
பிறகு மறுபடியும் எனது பதினான்காவது வயதில் நான் இறந்து விடலாம் என்று என் குடும்பத்தினர் கலங்கினர்.
ஆனால் இப்போது நான் திரும்பவும் தன்னுணர்வோடு அதை முயற்சித்தேன்.
நான் அவர்களிடம், "ஜோசியர் கூறியபடி இறப்பு நிகழப் போகிறதென்றால், அதற்கு தயாராகிக் கொள்வதே நல்லது. மேலும் ஏன் இறப்புக்கு அந்த வாய்ப்பைத்தர வேண்டும்? நான் ஏன் முன் சென்று அதைப் பாதி வழியில் சந்திக்கக் கூடாது? நான் இறக்கப் போகிறேன் என்றால், அப்போது தன்னுணர்வோடு இறப்பது நல்லதல்லவா" என்றேன்.
எனவே நான் பள்ளிக் கூடத்திலிருந்து ஏழு நாட்களுக்கு விடுப்பு எடுத்துக் கொண்டேன்.
நான் தலைமை ஆசிரியரிடம் சென்று சொன்னேன். "நான் இறக்கப் போகிறேன்."
அவர், "நீ என்ன முட்டாள்தனமாகப் பேசுகிறாய் ? நீ தற்கொலை செய்து கொள்ளப் போகிறாயா? நீ இறக்கப் போகிறேன் என்று சொல்வதன் அர்த்தம் என்ன?" என்று கேட்டார்.
ஒவ்வொரு ஏழு வருடத்திற்குப் பிறகும் இறப்பு என்னை நெருங்கும் வாய்ப்பு இருப்பதாக ஜோசியர் கூறியிருந்த பலனை அவரிடம் கூறினேன்.
நான் ஏழு நாட்கள் இறப்பை நோக்கி காத்திருப்பதாக ஒதுங்கித் தனியாகப் போகப் போகிறேன். இறப்பு வந்தால் அதுவும் ஒரு அனுபவமாக மாறுவதற்காக அதை தன்னுணர்வோடு சந்திப்பது நல்லதல்லவா" என்று கூறினேன்.
நான் எனது கிராமத்திற்கு வெளியே இருந்த ஒரு கோவிலுக்குப் போனேன், நான் அந்தப் பூசாரியிடம் அவர் என்னைத் தொந்தரவு செய்யாதபடி ஏற்பாடு செய்து கொண்டேன். அது ஒரு மிகவும் தனிமையான, யாரும் வராத, பழைய, இறந்து போன கோவில்.
ஒருவரும் அதனிடம் வருவதில்லை. எனவே நான் பூசாரியிடம், “நான் கோவிலில் தங்கியிருப்பேன். நீங்கள் தினமும் ஒரு முறை உண்ணுவதற்கு ஏதாவது சிறிதளவும், குடிக்க ஏதாவது சிறிதளவும் மட்டும் கொடுத்தால் போதும். நான் நாள் முழுவதும் இறப்பை எதிர்பார்த்து இங்கு படுத்துக் கொண்டிருப்பேன் அவ்வளவே!! என்று கூறினேன்.
ஏழு நாட்கள் நான் காத்திருந்தேன். இந்த ஏழு நாட்களும் ஒரு அழகான அனுபவமாக அமைந்தது. இறப்பு ஒருபோதும் வரவில்லை.
ஆனால் நான் என் பக்கத்திலிருந்து இறப்பதற்கு எல்லா வழிகளிலும் முயற்சி செய்தேன். விநோதமான, சம்பந்த மில்லாத உணர்வுகள் ஏற்பட்டன. பல விஷயங்கள் நிகழ்ந்தன. ஆனால் அவற்றின் அடிப்படை விஷயமாக இருந்தது என்ன வென்றால், நீ இறக்கப் போகிறாய் என்று உணரும் பொழுது நீ மௌனமும் அமைதியும் அடைகிறாய்.
எதுவும் எந்தக் கவலையையும் உண்டாக்குவதில்லை அப்போது. ஏனெனில் எல்லாக் கவலைகளும் வாழ்வைக் குறித்தவையே.
வாழ்வே எல்லாக் கவலைகளின் அடிப்படை. எப்படியிருந்தாலும் ஒருநாள் நீ இறக்கத்தான் போகிறாய் என்கிற பொழுது, எதற்குக் கவலை?
நான் அங்கு படுத்துக் கொண்டிருந்தேன். மூன்றாவது அல்லது நான்காவது நாளில் ஒரு பாம்பு கோவிலுக்குள் வந்தது. அது கண்ணில் படும் படியே இருந்தது. நான் அந்தப் பாம்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் பயம் அங்கு இல்லை. திடீரென நான் மிக விநோதமாக உணர்ந்தேன். அந்தப் பாம்பு, மேலும் மேலும் அருகில் வந்து கொண்டிருந்தது.
ஆனால் நான் மிக விநோதமாக உணர்ந்தேன். அங்கு பயமில்லை. "இறப்பு வரவேண்டியிருக்கும் போது, ஒருவேளை அது இந்தப் பாம்பின் மூலமாக வந்து கொண்டிருக்கலாம். எனவே எதற்குப் பயப்பட வேண்டும்? காத்திருப்போம்!" என்று நான் நினைத்தேன்.
அந்தப் பாம்பு என் மேல் ஏறி, தாண்டிச் சென்று விட்டது. பயம் மறைந்து விட்டது.
நீ இறப்பை ஏற்றுக் கொண்டால், அங்குபயமில்லை. நீ வாழ்வைப் பிடித்துக் கொண்டிருந்தால், அப்போது அங்கு எல்லா பயமும் இருக்கும்.
பல நேரங்களில் ஈக்கள் என்னைச் சுற்றி வந்தன. அவை என்னைச் சுற்றிப் பறக்கும். அவை என் மேல், எனது முகத்தின் மேல் ஊறும்.சில நேரங்களில் நான் கடுப்பாகி விடுவேன். அவற்றைத் துரத்த விரும்புவேன். ஆனால் உடனே நான் நினைத்துக் கொள்வேன், "என்ன பலன்? விரைவிலோ அல்லது சிறிது கழித்தோ நான் இறக்கப் போகிறேன். அப்போது எனது உடலைப் பாதுகாக்க யாரும் இங்கு இருக்கப் போவதில்லை. ஆகவே அவற்றை அவற்றின் வழியில் விட்டுவிடுவோம்."
அவை அவற்றின் வழியே போகட்டும் என்று நாள் முடிவெடுத்த கணத்தில், என் கடுப்பு, சங்கடம் மறைந்து விட்டது.
அவை இன்னும் உடம்பின் மேல் இருந்தன. ஆனால் அது எனக்கு அக்கறையில்லாததாக ஆகிவிட்டது. அவை வேறு ஏதோவொரு வரின் உடம்பில் நகர்வது போல், ஊர்வது போல ஆகிவிட்டது.
அங்கு உடனே ஒரு இடைவெளி வந்துவிட்டது. நீ இறப்பை ஒத்துக் கொண்டால், ஒரு இடைவெளி உருவாகி விடுகிறது.
வாழ்க்கை அதன் எல்லா கவலைகள், சங்கடங்கள், ஆகிய எல்லாவற்றுடனும் வெகுதூரம் விலகிச் சென்று விடுகிறது. ஒரு விதத்தில் நான் இறந்து போனேன். ஆனால் அங்கு இறப்பற்ற ஏதோ ஒன்று இருப்பதை நான் அறிந்து கொண்டேன்.
ஒருமுறை இறப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டு விட்டால், நீ அந்த இறப்பற்றதைக் குறித்த விழிப்புணர்வு அடைவாய்.
பிறகு திரும்பவும் இருபத்தொன்றாவது வயதில், எனது குடும்பம் காத்துக் கொண்டிருந்தது. எனவே நான், "நீங்கள் ஏன் தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? காத்திருக்க வேண்டாம். இனிமேல் நான் இறக்கப் போவதில்லை" என்று அவர்களிடம் சொன்னேன்.
உடல் ரீதியாக ஏதாவது ஒருநாள் நான் இறந்துதான் ஆக வேண்டும். எப்படியானபோதும், அந்த ஜோசியரின் எதிர்காலப்பலன் எனக்கு மிகவும் உதவி செய்தது.
ஏனெனில் அவர் எனக்கு என் மிக இளம் வயதிலேயே இறப்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார். இடைவிடாது தொடர்ந்து, அது வந்து கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளவும், தியானிக்கவும் எனக்கு சாத்தியமாயிற்று.
இறப்பை ஆழமான தியானத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஏனெனில் அப்போது நீ செயலற்றுப் போகிறாய். சக்தி இந்த உலகத்திலிருந்து விடுவிக்கப்படுகிறது.
அது உள் முகமாக திரும்ப முடியும். அதனால்தான் இறந்ததைப் போன்ற உடம்பின் நிலைக்கு போகும் யோசனை கூறப்படுகிறது .
வாழ்வைப் பயன்படுத்து; இறப்பைப் பயன்படுத்து; இந்த இரண்டையும் கடந்துள்ள அதைக் கண்டுபிடிப்பதற்காகப் பயன்படுத்து.
பின்பு மரண பயமும் இல்லை, மரணம் என்பதும் இல்லை.
__ஒஷோ.