வேட்பாளர் ஒருவருக்கு ஆறு கோடி ரூபாவை செலவிடும் சந்தர்ப்பம்: பஃப்ரல் தெரிவிப்பு
.
ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல் செலவு வரம்புகளின் கீழ் ஒரு வேட்பாளருக்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாவை செலவிடும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக தேர்தலை கண்காணிக்கும் பணியில் ஈடுபடும் பஃப்ரல் (Paffrel) அமைப்பு கூறுகிறது.
நாளாந்தம் பெருமளவு பணத்தை செலவிடுவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போதுள்ள செலவீன வரம்பு விதிகளை பாதுகாப்பது அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில், தேர்தல் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்காக 26 ஒருங்கிணைப்பு மையங்களை ஏற்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது நாட்டின் முழு மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
ராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் தேசிய தேர்தல் சர்ச்சை தீர்வு மையம் நிறுவப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்கள் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்தல் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு வாட்ஸ்அப் இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று வரை 717 தேர்தல் முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன.
அவற்றில் 693 தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.