முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள் ராஜபக்ஷ குடும்பத்தை நிம்மதியாக வாழ விடாது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பசியில் வாடி கஞ்சிக்காக வரிசையில் நின்ற குழந்தைகள் மீது குண்டுகளை வீசி கொலை செய்ய கோட்டாபய ராஜபக்ஷ.
முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள் ராஜபக்ஷ குடும்பத்தை நிம்மதியாக வாழ விடாது.
14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்த ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருபோதும் நிம்மதியோடு இருக்கப்போவதில்லை.
இறந்துபோன முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள்,இவர்களை ஒருபோதும் நிம்மதியாக இருக்க விடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற நிதிக்கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
யுத்தம் இடம்பெற்றபோது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ,யுத்தம் நடக்கின்ற பிரதேசங்களில் 75000 மக்கள் மட்டுமே உள்ளார்கள் என்று கூறினார்.
ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் 410,000 க்கும் மேற்பட்ட மக்கள் வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்குக் கொண்டு வரப்பட்டார்கள்.
75 ஆயிரம் மக்களுக்கு உணவு அனுப்பி 400,000 மக்களைப் பட்டினியில் போட்டு பட்டினியால் எம் மக்கள் சாகடிக்கப்பட்டார்கள்.
41 ஆயிரம் மக்கள்தான் இடைத்தங்கல் முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்டார்கள் என்றால் எத்தனை ஆயிரம் மக்கள் அங்கே கொன்றொழிக்கப்பட்டார்கள் .கஞ்சிக்காக வரிசையில் நின்ற குழந்தைகள் மீது குண்டுகள் வீசப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டார்கள் .இதனைச் செய்தவர் கோட்டாபய ராஜபக்ஷ.
69 இலட்சம் சிங்கள வாக்குகளினால் நான் வந்தவன்.எனக்குத் தமிழ் வாக்குகள் தேவையில்லையென மார்தட்டி வந்த கோட்டாபய ராஜபக்ஷவை அதே சிங்கள மக்கள், அதே சிங்கள இளைஞர்கள் அரகலய போராட்டத்தின் மூலம் ஓட ஓட விரட்டியடித்தார்கள். தர்மம் வென்றது. கர்மம் அவரை நாட்டிலிருந்து அகற்றியது. இருக்க இடமில்லாமல் தெருத்தெருவாக திரிந்தார்.
இறந்துபோன முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள் இன்றும் கோட்டாபய ராஜபக்ஷவை நிம்மதியாக உறங்க விடவில்லை. 146,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்த ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்தவர்கள் எந்தக்காலத்திலும் நிம்மதியோடு இருக்கப்போவதில்லை என்பதையும் உறங்கப்போவதில்லை என்பதையும் கர்மவினையும் வரலாறும் அவர்களுக்குக் கற்பிக்கும்.
75 ஆயிரம் மக்களுக்கு உணவு அனுப்பி அங்கு இந்தளவு மக்கள்தான் இருக்கின்றார்கள் என்று கூறி ஆயிரக்கணக்கான மக்களைப் பட்டினியால் கொன்றவர்களுக்கு இந்த உலகம் என்ன தண்டனை வழங்கப்போகின்றது? மக்கள் அங்குள்ள ஐ.நா.அமைப்புக்கள், செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றின் முன்னாள் நின்று எங்களை விட்டுப்போகாதீர்கள் எனக் கதறியபோது இந்த அமைப்புக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வன்னியிலிருந்து வெளியேறின.
ஆதரவு குரல் எழுப்பிக் கதறிய அந்த மக்களைத் தெருவிலே விட்டு இந்த அமைப்புக்கள் தப்பியோடின . இவர்கள் கைவிட்டு ஓடியதால் அத்தனை ஆயிரம் மக்கள் அந்த மண்ணில் கொல்லப்பட்டார்கள். இதற்கு ஐ.நா.மற்றும் சர்வதேச அமைப்புக்கள் பொறுப்பு சொல்ல வேண்டும்.
வெள்ளைக் கொடியுடன் வந்தவர்கள் கொல்லப்பட்டதற்கு நோர்வே சமாதானத்தூதுவர் எரிக் சொல் ஹெய்மும் பொறுப்புக்கூற வேண்டும். இன்றும் தமிழர் தெருவில் நிற்பதற்கு யார் காரணம்?
யுத்தத்திற்கு இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கிய நாடுகள் யுத்தம் முடிந்த பின்னர் தமிழர் பிரச்சினைக்கு ஏன் தீர்வு வழங்க முன்வரவில்லை? ஏன் இந்த நாடுகளினால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை?ஆகவே நாங்கள் பேச முடியாத மனிதர்களாக, அநாதைகளாக,உலகப்பந்தில் ஒதுக்கப்பட்ட ஒரு இனமாக இருக்கின்றோம்.தமிழ்த் தேசிய இனம் தொடர்ந்தும் அழிக்கப்படுகின்றது .அந்த இனத்தின் நிலம்,உரிமை பறிக்கப்படுகின்றது என்றார்.