தமிழர் பூர்வீகமாக வாழ்ந்து விவசாயம் செய்த 41,000 ஏக்கர் காணி அபகரிப்பு குச்சவெளியில் 31 விகாரைகள்
.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து விவசாயம் செய்த 41,000 ஏக்கர் காணிகளை வன இலாக்கா திணைக்களம் கையகப்படுத்தி உள்ளதாகவும், துறைமுக அதிகார சபையும் காணிகளை கையகப்படுத்த முனைவதாகவும் குச்சவெளியில் 31 விகாரைகள் கட்டுவதாகவும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட எம்.பி.யான சண்முகம் குகதாசனை வரவேற்கும்.கௌரவிக்கும் நிகழ்வும் சனிக்கிழமை மாலை மூதூர்-பட்டித்திடல் பிரதேசத்தில் இடம்பெற்ற போதே அதில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
உரிமைப் பிரச்சினை அபிவிருத்தி பிரச்சினை.இதில் உரிமை தான் முக்கியம் பாராளுமன்ற உறுப்பினராகி குறுகிய 7 வாரங்களில் ஐந்து கோடிக்கு மேல் இம் மாவட்டத்தில் அபிவிருத்தி பணிகளை செய்துள்ளேன்.
யாருக்கும் விலை போகாது அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறேன். நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்கின்ற வகையில் மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்துள்ளேன்
அபிவிருத்திகளை விடவும் உரிமைகளை பெறுவதே முக்கியமாக காணப்படுகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து விவசாயம் செய்த தமிழ் மக்களுடைய காணிகளை அடாத்தாக வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், துறை முக அதிகார சபை என மொத்தமாக 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய காணிகளை கபளீகரம் செய்துள்ளனர். எல்லைநிர்ணய ஆணைக்குழு சில பகுதிகளை வேறு பகுதிகளுடன் சேர்த்துள்ளது. குச்சவெளியில் 31 விகாரைகள் கட்டுகின்றனர். இதற்காக 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் வழங்கப்பட்டுள்ளன இவ்வாறாக தனிநபர் காணிகளை பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இதனை மீட்க அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றார்