நெருங்கிவரும் ஜனாதிபதித் தேர்தல்: இலங்கையை நோக்கிவரும் சீன, அமெரிக்க, இந்திய போர்க் கப்பல்கள்
.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூன்று போர்க்கப்பல்கள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
“HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” என்ற போர்க்கப்பல்களே இவ்வாறு வருகை தந்ததுடன், அவற்றை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
இலங்கை கடற்படையின் கூற்றுப்படி, “HE FEI” என்பது 144.50 மீற்றர் நீளமுள்ள நாசகாரக் கப்பலாகும். இது கப்டன் சென் ஜுன்ஃபெங்கின் கட்டளையின் கீழ் 267 பணியாளர்களால் பராமரிக்கப்படுகிறது.
“WUZHISHAN” கப்பல் 210 மீற்றர் நீளமான தளத்தை கொண்டது. இது 872 பேரால் பராமரிக்கப்படுகிறது. கப்டன் ஃபீ ஜாங்கால் இதன் பணிகள் இடம்பெறுகிறது.
“QILIANSHAN” கப்பல் 210 மீட்டர் நீளமுள்ள தளத்தை கொண்டதுடன், இது கப்டன் சியோங் பிங்ஹோன் தலைமையில் இயங்குவதுடன், 334 பணியாளர்கள் இதனை பராமரிக்கின்றனர்.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் போர்க்கப்பல்களின் முப்படையின் கட்டளை அதிகாரிகள், மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க உட்பட கடற்படையின் முக்கிய அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்.
இரு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் நிகழ்ச்சிகளில் இந்தக் கப்பல்களின் பணியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும், கப்பல்களின் பணியாளர்கள் கொழும்பில் தங்கியிருக்கும் போது நாட்டின் சில சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல உள்ளனர்.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் இந்த போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் ஆகஸ்ட் 29ஆம் திகதிவரை நங்கூரமிடப்பட்டிருக்கும் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஒகேன் (USS O’kane) என்ற கப்பல் அண்மையில் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துச் சென்றது.
அத்துடன், இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘ஐ.என்.எஸ்.மும்பை’ 3 நாட்கள் பயணமாக நேற்று திங்கட்கிழமை கொழும்பு துறைமுகம் வந்தடைந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பும் இந்திய போர்க்கப்பலொன்று இலங்கைக்கு வந்துச் சென்றது.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள சூலில் இந்திய, அமெரிக்க மற்றும் சீனாவின் போர் கப்பல்கள் இலங்கையை நோக்கி படையெடுத்துள்ளமை சர்வதேச ரீதியில் அவதானம் செலுத்தும் விடயமாக மாறியுள்ளது.
இலங்கைத் தீவில் இந்த மூன்று நாடுகளின் இராஜதந்திர நகர்வுகள் பல்வேறு அரசியல் குழுப்ப நிலைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் தொடர்ச்சியாக வழிவகுத்து வருகின்றன.
ஜனாதிபதித் தேர்தலுக்கு அண்மித்தான இந்த பயணம் இந்த நாடுகள் இலங்கையில் கொண்டுள்ள செல்வாக்கை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாக கருதப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் 25 நாட்களே உள்ள நிலையில், இந்த தேர்தலில் அமெரிக்கா, இந்தியா, சீனாவின் ரகசிய நகர்வுகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் பின்புலத்தில் இந்த கப்பல்களில் வருகை மேலும் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் எனவும் மேலும் சில போர்க் கப்பல்கள் இலங்கைக்கு வர அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.