பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய நீதியை இப்போதுள்ள அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும்

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அல்ஜசீரா செய்தி சேவைக்கு வழங்கப்பட்ட நேர்காணல் மற்றும் அதில் முக்கியமாக பேசப்பட்ட பட்டலந்த விவகாரமும் தற்போது நாட்டில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினால் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் வெளியிடப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்தில் இந்த அமைப்பினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் அவரால் மகஜரும் கையளிக்கப்பட்டது.
மகஜரை கையளித்ததன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நாட்டை ஆட்சி செய்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அல்ஜசீரா நேர்காணலின்போது ஊடகவியலாளர் பட்டலந்த விவகாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆணைக்குழுவின் அறிக்கை எங்கு என வினவினார். பாராளுமன்றத்தில் எங்கு சமர்பிக்கப்பட்டது என வினவினார். அத்துடன் அந்த ஊடகவியலாளர் அந்த அறிக்கையை காண்பித்தார்.
இந்த சம்பவம் இடம்பெற்று பல வருடங்கள் கடந்துள்ள நிலையில் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவதற்கு இந்த விடயத்தை பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டத்தை உருவாக்கவில்லை.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய நீதியை இப்போதுள்ள அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும். எனவே, இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எமது அமைப்பு உட்பட பல அமைப்புகள் கையொப்பமிட்டு கோரிக்கை விடுத்துள்ள மகஜர் ஒன்றை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைத்துள்ளோம் என்றார்.