அக். 7: ஓராண்டை நெருங்கும் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல்: பற்றி எரியும் மத்திய கிழக்கு – அடுத்து என்ன?
.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனம் இரு பகுதிகளாக உள்ளது. காசா முனை, மேற்கு கரை என பாலஸ்தீனத்தின் 2 பகுதிகளையும் வெவ்வேறு அமைப்புகள் நிர்வகித்து வருகின்றன.காசா முனையை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நிர்வகித்து வருகின்றனர்.
அதேவேளை, மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசு நிர்வகித்து வருகிறது. காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை இஸ்ரேல் பயங்கரவாதிகளாக கருதுகிறது. அதேபோல், காசா முனை, மேற்கு கரையில் ஹமாஸ் ஆயுதக்குழுவை போன்று பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்பட பல்வேறு ஆயுதக்குழுக்களும் உள்ளன.
பாலஸ்தீனத்தின் காசா முனை, மேற்கு கரையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு உள்பட பல்வேறு ஆயுதக்குழுக்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. அதேபோல், இஸ்ரேலின் அண்டை நாடுகளான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள், ஈராக்கில் செயல்பட்டுவரும் பயங்கரவாத குழுக்கள், சிரியாவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களுக்கும், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
இந்த குழுக்களுக்கு ஈரான் ஆயுத உதவியும் செய்து வருகிறது. இந்த குழுக்கள் இஸ்ரேலை அழிக்கும் நோக்கை முதன்மையாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. மேற்கு கரை, காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட பிற ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றன.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வந்தது. அதேவேளை, மேற்கு கரை, காசாவில் இஸ்ரேலும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது.2023 அக்டோபர் 7 : இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். தெற்கு இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுவினர் கொடூரமான தாக்குதல் நடத்தினர்.காசா முனையில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன.
மேலும், இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர். இந்த கொடூர செயலை சமூக வலைதளத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்தனர். இந்த சம்பவத்தின்போது இஸ்ரேலிய பெண்களும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகினர்.1,139 பேர் பலி;இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய கொடூர தாக்குதலில் ஒரேநாளில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். பணய கைதிகள்:இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றது.
ஹிஸ்புல்லா தாக்குதல்:
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு அடுத்த நாளே லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கினர். ஆப்ரேஷன் அயன் ஸ்வாட்: இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஆப்ரேஷன் அயன் ஸ்வாட் என்ற பெயரில் ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஹமாசால் தகர்க்கப்பட்ட இஸ்ரேலின் எல்லைகள் மீண்டும் சீரமைக்கப்பட்டன.காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் படை:எல்லைகள் பாதுகாக்கப்பட்டதை உறுதி செய்தபின் இஸ்ரேல் படையினர் காசாவுக்குள் நுழைந்தனர். காசாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முற்றிலும் அழிக்கவும், பணய கைதிகளாக காசாவுக்குள் கடத்தி செல்லப்பட்டவர்களை மீட்கவும் இஸ்ரேல் படையினர் காசாவுக்குள் நுழைந்தனர்.
அதிரடி தாக்குதல்:
காசா முனைக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து தரைவழி, வான்வழி, கடல்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. காசா முனை மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது.மேற்கு கரை மோதல்: காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் படையினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் மேற்கு கரையிலும் மோதல் ஏற்பட்டது. மேற்கு கரையில் உள்ள ஆயுதக்குழுவினருக்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.பலி எண்ணிக்கை:இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான மோதலில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்கு கரையில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு எதிரான போரில் இஸ்ரேலிய வீரர்கள் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.பணய கைதிகள்:கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் இருந்து 251 பேரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காசா முனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இதையடுத்து, ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமாகவும் ஹமாஸ் ஆயுதக்குழுவிடம் பணய கைதிகளாக இருந்த 117 பேரை இஸ்ரேல் உயிருடன் மீட்டுள்ளது.
அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர். இஸ்ரேல் மீது லெபனான், சிரியா, ஈராக், ஏமனில் இருந்து தாக்குதல்:இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் மீது லெபனான், சிரியா, ஈராக், ஏமனில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்தின.
ஈரானின் ஆதரவுடன் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள், சிரியா, ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.பதிலடி கொடுக்கும் இஸ்ரேல்:காசா முனை மட்டுமின்றி லெபனான், சிரியா, ஈராக், ஏமன் என அனைத்து முனைகளில் இருந்தும் இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.