"உ.வே.சாமிநாதர் பிறந்த நாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்" - முதலமைச்சர் அறிவிப்பு!
.
வரும் காலங்களில் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (டிசம்பர் 9) திங்கட்கிழமை தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறும் கூட்டத்தில், இரண்டாம் நாளான இன்று (டிசம்பர் 10) கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து, வினா விடை நேரத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி. முனுசாமி, “உ.வே.சாமிநாதர் அவர்களின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும். இதனை அரசு பரிசீலிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது, “தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதர் குறித்து சட்டப்பேரவை உறுப்பினரின் முழு கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்படும். ஆண்டுந்தோறும் அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கடைபிடித்து வருகிறோம். அவரின் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உத்தமதானபுரத்தில் உள்ள அவரது இல்லம் அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே, வரும் காலங்களில் இது குறித்தும் அரசு பரீசலிக்கும்,” இவ்வாறு பதில் அளித்தார்.அதனைத்தொடர்ந்து, இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதர் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் என்று உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார். அவரது கோரிக்கை ஏற்று வரும் காலங்களில், உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்” என உறுதியளித்தார். இதனையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி. முனுசாமி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
யார் இந்த உ.வே.சாமிநாதர்?
தமிழ்த்தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாதர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரத்தில் வேங்கட சுப்பையர், சரசுவதி அம்மாள் தம்பதிக்கு மகனாக 1855 பிப்ரவரி 19 ஆம் தேதி பிறந்த இவர், 1880 முதல் 1903 வரை கும்பகோணத்தில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பின்னர், 16 ஆண்டுகள் சென்னை மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்த இவர், 1924-ஆம் ஆண்டில் மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வரானார்.
இவர் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்துள்ளார். 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டுள்ளார். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் மற்றும் எழுத்துபிரதிகளை தமிழ்நாடு முழுவதும் அலைந்து திரிந்து கண்டுப்பிடித்த இவர் 1940 ஏப்ரல் 28 ஆம் தேதி தனது 85 வது வயதில் மறைந்தார். இவருடைய பிறந்தநாளான பிப்ரவரி 19ஆம் தேதியை, தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.