அர்ச்சுனா எம்.பிக்கு பதிலடி கொடுத்த Dr.சத்தியமூர்த்தி; விதண்டாவாதம் செய்யும் எவரும் உள்ளே வர அனுமதி இல்லை!
.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கேள்வி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பதிலடி கொடுத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்சுனா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்,
யாழ். போதனா வைத்தியசாலையில் 15 நுழைவாயில்கள் உள்ளன.
நோயாளிகளுக்கு மாத்திரமன்றி பல உயர் அதிகாரிகளும் இங்கு சேவையை பெறுகின்றனர்.
நோயாளிகளை பார்ப்பதற்கும் ஏற்றவகையில் நுழைவாயில்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அதை விடுத்து எம்மை பயமுறுத்தி அல்லது உத்தியோகத்தர்களை பயமுறுத்தி வைத்தியசாலை உள்ளே வந்து விதண்டாவாதம் செய்கின்ற எவரும் அல்லது அது கடவுளாக இருந்தாலும் உள்ளே வர அனுமதி கிடையாது.
மேலும் இங்குள்ள உயர் அதிகாரிகளை என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்பது தவறான விடயம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சில உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஏற்படுகின்ற விதத்தில் நடந்து கொள்ளுவாராக இருந்தால், அவர்களை இனிவரும் கூட்டங்களுக்கு அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ்ப்பாணத்தில் தற்போது பரவும் நோய் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்
கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், 6 பேர் சிகிச்சை அளித்தும் நோயின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் ஒருவருக்கு எலிக்காய்ச்சல் என பரிசோதனை முடிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மூவருக்கு எலிக்காய்ச்சல் (Leptospirosis) தாக்கம், ஒருவருக்கு வைரஸ் தொற்று, மற்றொருவருக்கு இருதய கோளாறுடன் வைரஸ் தொற்று என்று நம்பப்படுகிறது.
ஆய்வுக்கூடப் பரிசோதனையின் இறுதி முடிவுகள் சில தினங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 5 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருமலுடன் காய்ச்சல் உள்ளவர்கள் தாமதமின்றி வைத்தியசாலையை அணுகி சிகிச்சை பெற வேண்டும். உடனடி சிகிச்சை பெறும்போது நோயிலிருந்து விரைவாக குணமடையலாம்.
யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்படி சிகிச்சைக்கான சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அடிப்படை சுகாதார வழிமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனினும் பதட்டம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.