இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட ஹெஸ்பொலா ராக்கெட் ஏவுதளங்கள் மீது தாக்குதல்
.
இஸ்ரேல் தனது போர் விமானங்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட ஹெஸ்பொலா ராக்கெட் ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் உள்ள ஆயுதங்கள் சேமிப்பு வசதி உட்பட பிற “பயங்கரவாத தளங்களை” தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக ஏவுவதற்காக அந்த ராக்கெட் ஏவுதளங்கள் தயாராக இருந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனானின் அரசு செய்தி நிறுவனம், வியாழனன்று மாலை வேளையில் தெற்கில் குறைந்தபட்சம் 52 தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதாகவும், வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தளங்களில் லெபனானும் தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறியுள்ளது.
முன்னதாக ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, பேஜர், வாக்கி டாக்கி வெடிப்புகள் குறித்துப் பேசியிருந்தார். அப்போது, இஸ்ரேல் அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டதாகவும் போருக்கான அறிவிப்பை அது விடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
விளம்பரம்
கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடந்த பேஜர், வாக்கி-டாக்கி வெடிப்புகளுக்கு இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை.
ஆனால், இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலென்ட், “போரின் புதிய கட்டத்தை” தொடங்குவதாகவும், இஸ்ரேல் வடக்குப் பகுதியில் அதிக கவனம் செலுத்துவதாகவும் வெடிப்புகள் நிகழ்வதற்கு முன்னதாகக் கூறியிருந்தார்.
இஸ்ரேல் அனைத்து விதிமுறைகளையும் சட்டங்களையும் மீறிவிட்டது என்று பேஜர், வாக்கி-டாக்கி வெடிப்பு தாக்குதல் குறித்து ஹெஸ்பொலா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார். அதோடு, இது இஸ்ரேலின் போருக்கான பிரகடனம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் லெபனானின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பயன்படுத்திய வாக்கி டாக்கி மற்றும் பேஜர்களை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சிக்கி 2 குழந்தைகள் உட்பட 37 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இது மத்தியக் கிழக்கு நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அயற்சி அடைந்துள்ள மக்கள் மீது சோனிக் கதிர்களை வைத்து இஸ்ரேலின் போர் விமானங்கள் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் தரப்பு இதுகுறித்துப் பேசும்போது, ஹெஸ்பொலாவின் தீவிரவாத திறன் மற்றும் உள்கட்டமைப்புகளை வலுவிழக்கச் செய்யவும், வடக்கு இஸ்ரேலை பாதுகாக்கவும் தன்னுடைய ராணுவம் செயல்படுவதாகக் கூறியுள்ளது.
ஹசன் நஸ்ரல்லாவின் உரையை காணும் இளைஞர்கள்
காஸாவில் நடைபெற்று வரும் போரின் நீட்சியாக இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கு இடையே 11 மாதங்களாக சண்டை நடைபெற்று வருகிறது.
இதில் நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் ஹெஸ்பொலா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். ஆயிரக்கணக்கானவர்கள் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
ஹெஸ்பொலா பாலத்தீனத்தின் ஆயுதமேந்திய குழுவான ஹமாஸுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு குழுக்களுக்கும் இரான் ஆதரவு வழங்கி வருகிறது. மேலும் இஸ்ரேல், பிரிட்டன் மற்றும் இதர நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
பேஜர்களை வெடிக்க வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 12 நபர்கள் கொல்லப்பட்டனர். இவர்களன்றி 25 நபர்கள் வாக்கி-டாக்கியில் பேசும்போது உயிரிழந்ததாகத் தெரிவிக்கிறது லெபனானின் சுகாதாரத் துறை அமைச்சகம்.
லெபனான் மற்றும் அமெரிக்க தரப்பினர் இஸ்ரேலின் உளவுத்துறை சிறிய அளவிலான வெடிபொருள்களை கருவிகளில் வைத்திருக்கலாம் என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா இனப்படுகொலை குற்றச்சாட்டு
செப்டம்பர் 19ஆம் தேதி அன்று தெற்கு லெபனானில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம்
“எதிராளியின் படை சட்டம், விதிகள், சிவப்பு எல்லைகள் என அனைத்தையும் கடந்துவிட்டது. மனிதம் குறித்தும், சட்டம் குறித்தும், தார்மீகப் பொறுப்பு குறித்தும் எந்தவிதமான அக்கறையும் அதற்கு இல்லை” என்று ஹசன் அறிவித்துள்ளார்.
இதை ஒரு இனப்படுகொலை என்று வர்ணித்த அவர், லெபனான் மக்கள், அவர்களின் இறையாண்மை, பாதுகாப்பு என அனைத்துக்கும் எதிரானது இந்தத் தாக்குதல் என்று குறிப்பிட்டார்.
இதை நீங்கள் ஒரு போர்க் குற்றம் என்றும் கூறலாம் அல்லது ஒரு போரை அறிவிக்கும் நிகழ்வாகவும் காணலாம். இதுதான் எதிராளியின் எண்ணம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இது மிகப்பெரிய, இதற்கு முன் எப்போதும் நடைபெறாத தாக்குதல் என்று மேற்கோள்காட்டிய அவர், ஹெஸ்பொலா பேச்சுவார்த்தைக்குத் தயார் நிலையில் உள்ளது என்றும் கூறினார்.
அவருடைய பேசும் தொனியில் எதிர்ப்பு இருந்தபோதும், கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தபோதும், தற்போது இருக்கும் கலவர நிலையை மேலும் பெரிதாக்க ஹெஸ்பொலா விரும்பவில்லை என்றும் கூறினார். காஸாவில் போர் நிறுத்தம் அறிவிக்கும் வரை, எல்லையில் நிலவும் சண்டை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவரின் உரை துவங்குவதற்கு முன்பு, ஹெஸ்பொலாவின் ஆதரவாளார்கள் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர் பகுதிகளில் ஒன்று சேர்ந்து செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்ட இரண்டு உறுப்பினர்களின் உடலை அடக்கம் செய்தனர்.
சிலர் இந்தத் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறினார்கள். சிலர் இதற்குக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றும் கூறியிருக்கின்றனர்.
தெற்கு லெபனானில் ஆக்கிரமிப்பு செய்ய காத்திருக்கும் இஸ்ரேல்
பேஜர் வெடிப்புகளை தொடர்ந்து, பெய்ரூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினர்களைப் பார்க்க வரும் பெண்கள்
இந்தத் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் வியாழக்கிழமை காலை தெற்கு லெபனானில் இருந்து இரண்டு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது ஹெஸ்பொலா. ஆளில்லா சிறிய ரக விமானம் மூலமும் தாக்குதலை நடத்தியது. இதில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கூறியுள்ளது இஸ்ரேல் ராணுவம்.
காஸாவில் இருந்து தங்களின் கவனம் தற்போது வடக்குப் பக்கம் திரும்பியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்த சில மணிநேரங்களில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
வடக்குப் பகுதியில் தேவையான ராணுவ நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார் ராணுவ தளபதி ஹெர்ஸி ஹலேவி என்று இஸ்ரேல் ராணுவம் செப்டம்பர் 19ஆம் தேதி அன்று அறிவித்துள்ளது.
ராணுவம் மற்றும் உளவுத்துறை தலைவர்களுடன் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலென்ட், போரின் இந்தப் புதிய கட்டத்தில் முக்கியமான வாய்ப்புகள் இருப்பது போல் கணிசமான சவால்களும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
ஹெஸ்பொலா துன்புறுத்தப்படுவதாகவும், ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வரும் என்றும் ஹெஸ்பொலா நினைப்பதாக அவர் கூறினார்.
“எங்களின் இலக்கு, இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்பதுதான். தாமதமாகும்போது அதற்கான விலையை ஹெஸ்பொலா கொடுக்கும்,” என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த இலக்கை இஸ்ரேல் எப்படி அடையும் என்று தெரியவில்லை. ஆனால், வடக்குப் பகுதியில் உள்ள இஸ்ரேல் ராணுவ தலைமை தெற்கு லெபனானின் உள்ளே இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் ஒரு பகுதியை உருவாக்க ஒப்புதல் கொடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹசன் இந்த அறிவிப்பை மேற்கோள்காட்டி ராணுவ தலைமையை “முட்டாள்” என்று கூறினார். மேலும் இந்த ஒரு நடவடிக்கை மோசமான விளைவைச் சந்திக்க வழிவகை செய்யும் என்றும் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.