விஜயின் கட்சிக் கொடி தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள்…!
2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுதற்கான சகல ஏற்பாடுகளையும் இப்போதிருந்தே ஆரம்பித்துள்ளார், விஜய்.
2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுதற்கான சகல ஏற்பாடுகளையும் இப்போதிருந்தே ஆரம்பித்துள்ளார், விஜய்.
பிரபல நடிகர் விஜய் இவ்வருடம் பெப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அறிவித்தார்.
நேரடி அரசியலில் ஈடுபடப்போவதாகவும் இனி புதிய படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் தனது இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுதற்கான சகல ஏற்பாடுகளையும் இப்போதிருந்தே ஆரம்பித்துள்ளார், விஜய்.
இந்நிலையில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியையும் பாடலையும் ஓகஸ்ட் 22ஆம் திகதி சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பனையூரில், தனது கட்சி அலுவலகத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார் விஜய். கொடியின் மேல் மற்றும் அடிப்புறம் சிவப்பு வர்ணமாகும்.
மத்தியில் மஞ்சள் நிற பின்னணியில் இருபக்கமும் இரண்டு போர் களிறு யானைகள் எதிரெதிரே முன்னங்கால்களை தூக்கிய வண்ணம் நிற்கின்றன. யானைகள் சாம்பல் நிறத்தில் உள்ளன.
இரண்டு யானைகளுக்கும் மத்தியில் வாகைப்பூ அதைச்சுற்றி 28 நட்சத்திரங்கள். இதில் 23 நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும் மிகுதி 5 நீல நிறத்திலும் உள்ளன. இவையே தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியில் உள்ள அம்சங்கள்.
கொடியில் உள்ள விடயங்கள் எதை குறிக்கின்றன என்பது குறித்து கட்சியின் சிரேஷ்ட நிர்வாகிகள் கூறும் போது, “கொடியில் இருக்கும் சிவப்பு நிறம் தொழிலாளர்களைக் குறிக்கிறது. மஞ்சள் மங்கலத்தை கூறுகின்றது.
இரண்டு யானைகளும் போருக்குத் தயாராக இருப்பதைக் குறிக்கின்றன. அதாவது மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ளத் தலைவர் தயாராகிவிட்டார் என்பதைக் காட்டுகிறது. வாகை மலர் வெற்றியைக் குறிக்கிறது. விஜய்தான் வெற்றி. வெற்றிதான் விஜய். 28 நட்சத்திரங்களும் கட்சியின் 28 கொள்கைகளைக் குறிக்கின்றன” என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விஜயின் கட்சிக் கொடியிலுள்ள சின்னங்கள் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
அதாவது அதில் உள்ள யானை சின்னமானது பகுஜன் சமாஜ் கட்சிக்கு சொந்தமானது என்றும் எனவே அதை பயன்படுத்த முடியாது என்றும் அக்கட்சி ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆனந்தனே முதலில் இந்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்தார்.
கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்ட சில மணிநேரங்களில் பகுஜன் சமாஜ் கட்சி அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து கட்சியின் தமிழகத் தலைவர் ஆனந்தன் கூறும் போது எமது கட்சியின் தேர்தல் சின்னமாக யானை உள்ளது. இது தேர்தல் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதை மற்ற கட்சிகள் பயன்படுத்த முடியாது
கடந்த 2003ஆம் ஆண்டு தேர்தல் ஆணைக்குழு கொண்டு வந்த திருத்தத்தில், அசாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநிலக் கட்சிகளோ, தேசியக் கட்சிகளோ, அங்கீகரிக்கப்படாத கட்சிகளோ யானை சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையக சட்டவிதிகளை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளுக்கு நாம் அனுப்பியுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த எதிர்ப்புகளுக்கு பதில் வழங்கியுள்ள விஜயின் கட்சியினர் யானை என்பது குறியீடே ஒழிய சின்னம் அல்ல என்று கூறியுள்ளனர்.
இது குறித்து கட்சியின் ஊடக தொடர்பாளர் லயோலா மணி கருத்துத்தெரிவித்த போது, கொடியில் உள்ள வாகை மலரைப் போல யானையும் ஒரு குறியீடுதான்.
அதில் உள்ள 28 நட்சத்திரங்களும் குறியீடுதான். இது கொடி மட்டும்தான். தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட வாக்கு எண்ணிக்கையைப் பெற்றால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட சின்னம் கிடைக்கும்,”
“யானை பலம் பொருந்தியது, அறிவுக்கூர்மையானது. இப்போதும் பழங்குடி மக்கள் யானையைக் கடவுளாக வழிபடுகின்றனர்.
மேலும் அது கூட்டுக் குடும்பமாக வாழக்கூடிய உயிரினம். அண்ணல் அம்பேத்கரும் தனது கட்சியின் அடையாளமாக யானையைப் பயன்படுத்தியுள்ளார்.
யானை என்பது ஒடுக்கப்பட்ட மக்களை எழுச்சியூட்டுவதற்கான அடையாளமாக இருக்கிறது. அதையே கொடியில் குறியீடாகப் பயன்படுத்தினோம்,” என்று கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி 1984 ஆம் ஆண்டு கான்ஷிராம் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இது பிற்படுத்தப்பட்ட வர்க்கத்தினரான தலித்களை பிரதிநிதித்துவம் செய்ய ஆரம்பிக்கப்பட்ட புரட்சிகர கட்சியாகும்.
இதன் தலைவராக மாயாவதி இருக்கின்றார். இந்திய முழுதும் இதற்கு ஆதரவாளர்கள் உள்ளனர்.
இதன் தலைவர் மாயாவதி உத்தரபிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தவர். அம்மாநிலத்தில் கட்சிக்கு பெரும் ஆதரவு உள்ளது. இக்கட்சியின் சின்னம் யானையாகும்.
இதேவேளை பகுஜன் சமாஜ் கட்சி சின்னமாக ஒரு யானையே உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இரண்டு யானைகள் உள்ளன. ஆகவே சட்டரீதியான சவால்களை சந்திக்கவும் நாம் தயாராகவுள்ளோம் என விஜய் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
முன்பதாக நடிகர் விஜய் கட்சிப்பெயரை அறிவித்த நேரத்தில் இரண்டு சர்ச்சைகளை சந்தித்திருந்தார்.
‘தமிழக வெற்றி கழகம்’ என்றே பதாகைகளிலும் சமூக ஊடகங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் ‘க்’ என்று எழுத்து சேர்க்கப்படவில்லையென தமிழ் ஆர்வலர்கள் விமர்சனத்தை முன்வைத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விஜய் மீண்டும் அனைத்திலும் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என மாற்றினார்.
பின்பு கட்சியின் பெயரை சுருக்கி டி.வி.கே (T.V.K) என பயன்படுத்த தொடங்கினர் அவரது ஆதரவாளர்கள்.
ஆனால் இங்கும் பிரச்சினை எழுந்தது. ‘தமிழக வாழ்வுரிமை கட்சி’ இதற்கு போர்க்கொடி தூக்கியது.
ஏனென்றால் அவர்களும் தமது கட்சியை சுருக்கமாக டி.வி.கே என்றே அழைத்து வந்தனர். இவ்வாறு சுருக்கமாக அழைத்தால் அது எமது கட்சியின் பெயராகி விடும் எனவே இதற்கு நாம் தேர்தல் ஆணையகத்தை அணுகி தீர்வை பெறுவோம் என அறிவித்தார்கள்.
உடனே அவ்வாறு சுருக்கமான பெயரை பயன்படுத்த வேண்டாம் என விஜய் அறிவித்தார்.
இவை எல்லாவற்றையும் விட சுவாரஷ்யமான விடயம் என்னவெனில் கட்சி கொடியின் பின்னணியில் உள்ள மஞ்சள் மற்றும் சிவப்பு வர்ணங்கள் ஸ்பெயின் நாட்டு கொடியை ஒத்ததாக இருப்பதாகவும் விஜய் ஸ்பெயின் நாட்டின் தேசிய கொடியை அவமதித்து விட்டார் என்றும் சமூக ஊடகங்களில் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.