முதல் வாக்கு பொது வேட்பாளருக்கு 2 வது வாக்கு சஜித்துக்கு
.
நீங்கள் விரும்பியது போன்று தமிழ் பொது வேட்பாளருக்கு உங்களுடைய முதலாவது வாக்கை செலுத்தி இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு செலுத்துமாறு எம்.பி.யான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் கூறியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் எம்.பி. தலமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் வணிகர் கழக பிரதிநிதிகளை நேற்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன, பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, , யாழ்ப்பாண வணிகர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தமிழ் பொது வேட்பாளருக்கு ஏன் ஆதரவு வழங்கியுள்ளது என்பது தொடர்பாக வருகைதந்தவர்களுக்கு தெளிவுபடுத்தியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.
அதற்கு பதில் வழங்கிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நீங்கள் விரும்பியது போன்று தமிழ் பொது வேட்பாளருக்கு உங்களுடைய முதலாவது வாக்கை செலுத்தி இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு செலுத்துங்கள் என்று கூறியதாக இ.ஜெயசேகரம் மேலும் தெரிவித்தார்.