தமிழ் மக்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலம் கிடைக்கும் என்று கூறமுடியாது?
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் என்று சொல்லப்படும் விடயங்களை திரிவுபடுத்தி இந்த நாட்டில் தமிழரசுக்கட்சியின் பிரச்சினை வேறு தமிழ் மக்களின் பிர்சினை வேறு என்ற வகையிலான நகர்த்தல்களை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இந்த ஆட்சிக்காலத்திலும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள் மக்கள் வாழாத பகுதிகளில் 44 விகாரைகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நான்காம் வட்டாரத்தில் போட்டியிடும் ஆரியரட்ன அவர்களை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 25 ஆம் திகதி மாலை சின்ன ஊறணியில் நடைபெற்றது.
நூன்காம் வட்டார வேட்பாளர் ஆரியரட்ன தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், இ.சிறிநாத், ஞா.சிறிநேசன், முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,முன்னாள் மாநகரசபை உறுப்பினரும் வேட்பாளருமான ரகுநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டதுடன் வேட்பாளர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளும் நடைபெற்றன.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் என்று சொல்லப்படும் விடயங்களை திரிவுபடுத்தி இந்த நாட்டில் தமிழரசுக்கட்சியின் பிரச்சினை வேறு தமிழ் மக்களின் பிர்சினை வேறு என்ற வகையிலான நகர்த்தல்களை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் அநுர குமாரவுடன் இருந்தபோது மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் இலங்கை தமிழரசுக்கட்சியுடன் இருந்தது என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் வடக்கு கிழக்கிலே இருக்கின்ற எட்டு மாவட்டங்களிலே மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர்த்து ஏனைய ஏழு மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்காகவே அரசியலில் ஈடுபடுகின்ற தமிழினத்திற்கு எதிராக கடந்த காலங்களில் செயற்பட்ட பேரினவாத அரசாங்கக் கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது என்பது தமிழ் மக்களுக்கு ஒரு ஆபத்தான நிலைமையை உருவாக்கியிருக்கின்றது.
இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் என்னென்ன என்பது பற்றி தேசிய மக்கள் சக்தியினுடைய ஜனாதிபதியும் அந்த அரசாங்கத்தினுடைய அமைச்சர்களும் புதிதாக விளக்கங்களை அளித்து வருகின்றார்கள். இந்த நாட்டின் தமிழ் மக்களுடைய பிரச்சினை சோறும் நீரும் மாத்திரம் தான் என்று இந்த அரசாங்கத்தினர் மறைமுகமாக சொல்லி வருகின்றனர்.
இந்த மாவட்டத்தினுடைய அபிவிருத்திக் குழுத் தலைவராக அயல் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற ஒரு பிரதியமைச்சர் ஒரு வட்டாரத்தின் பெயரைக் குறிப்பிட்டு இந்த வட்டாரத்திலே இருக்கின்ற மக்கள் தேசிய சக்திக்கு வாக்களிக்க வேண்டும் எனென்றால் ஜனாதிபதி பயன்படுத்தும் எரிபொருளினுடைய அளவை 2,500 லீற்றராக குறைத்திருக்கின்றார்.
அந்தக் காரணத்தினால் இந்த வட்டாரத்தினுடைய மக்கள் தேசிய சக்திக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.
உங்களுடைய ஜனாதிபதி எரிபொருள் பாவனையை குறைத்திருப்பது எங்கள் பிரச்சினையல்ல. எரிபொருள் பாவனையைக் குறைத்து நாட்டிலே நிதியை மீதப்படுத்துவது வரவேற்கத்தக்க விடயம்.
ஆனால் மீதப்படுத்துகின்ற அந்த நிதியை பயன்படுத்தி வடக்கு கிழக்கிலே ஏதும் செய்கின்றார்களா என்பதையே நாங்கள் பார்க்க வேண்டும்.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து இந்த நாட்டிலே தமிழர்களுக்கு சமவுரிமை இல்லை, இந்த நாட்டிலே தமிழர்களுக்கு நிரந்தரமானதொரு அரசியற்தீர்வு வேண்டும், அந்த அரசியல் தீர்வினூடாக இந்த நாட்டிலே தமிழ் மக்களும் சம அந்தஸ்துடன் வாழவேண்டும், எங்கள் நிலங்களை நாங்களே ஆளவேண்டும், எங்கள் பிரதேசத்தினுடைய எதிர்காலத்தை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று எத்தனையோ தசாப்த காலமாக நாங்கள் சொல்லிவருகின்றோம்.
இருபது, முப்பது வருடங்களாக அதனை அரசியல் ரீதியாக சொல்லி வந்தோம். அது பயனளிக்காத காரணத்தினால் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். முப்பது வருடங்களாக போராட்டம் நடந்தது. போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் மீண்டம் நாங்கள் அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதன் நோக்கம் நிரந்தரமானதொரு அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கினால் மாத்திரம் தான் தமிழ் மக்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை அமைக்கலாம்.
ஜனாதிபதி எரிபொருளை குறைவாக பயன்படுத்துகின்றார் என்பதற்காக தமிழ் மக்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலம் கிடைக்கும் என்று கூறமுடியாது என தெரிவித்தார்.