கலைத்தமிழோடு களமாடும் வளரிளம் கலைஞர்களின் கலைத்திறனாற்றுகை – கற்றிங்கன்.
,

தமிழரது கலை வடிவங்களைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டும் உணரவும், அதனுடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாது காக்கவும் கலை அரங்காற்றுகை, செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளை அறிந்துகொள்ளவும், பயிலவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவு கலைத்திறன் போட்டியை நடாத்தி வருகிறது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம் மற்றும் விடுதலை நடனம், விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு ஆகிய ஒன்பது கலைகள் போட்டிகளாக நடைபெறுகின்றன. முதலாவது போட்டியரங்கம் வடமத்திய மாநிலத்தின் கற்றிங்கன் நகரிலே பொதுச்சுடர் ஏற்றலோடு தொடங்கியது.
போட்டியரங்கிலேயே வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்புகளும் நடைபெற்றன. வடமத்திய மாநிலத் தமிழாலயங்களிடையேயான போட்டியில் முதலாம் இடத்தை வாறன்டோர்வ் தமிழாலயமும் இரண்டாம் இடத்தை டோட்முன்ட் தமிழாலயமும் மூன்றாம் இடத்தை எசன் தமிழாலயமும் பெற்றுக்கொண்டன. முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயங்களுக்கான சிறப்பு மதிப்பளிப்பு, தமிழ்க் கல்விக் கழகத்தின் 35ஆவது அகவை நிறைவு விழாவில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
2025ஆம் ஆண்டிற்கான முதலாவது போட்டியரங்கம் வடமத்திய மாநிலத்திலே 01.02.2025ஆம் நாளன்று 08:30 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிய போட்டிகள், 19:30 மணிக்குத் தமிழினத்தின் நம்பிக்கையைப் பறைசாற்றிச் சிறப்பாக நிறைவுற்றது. தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப ஐந்து மாநிலங்களிலும் போட்டிகளை நடாத்துவதற்கான ஏற்பாட்டொழுங்கில் முதலாவது போட்டியரங்கம் வடமத்திய மாநிலத்திலே நிறைவுற்றுள்ளது. தொடர்ந்து 08.02.2025ஆம் நாளன்று மத்திய மாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டி கிறீபெல்ட் நகரில் நடைபெறவுள்ளது.