இலங்கையில் JVP தலைமையிலான கூட்டணி ஆட்சி
.
இந்திய விரிவாக்க பண்புக்கு (Expansionism) எதிரான இடதுசாரிய கட்சி JVP. இந்தியா, இலங்கை தமிழர்களுக்கு உதவிய 80களின் காலத்தில் பெரும் கலவரத்தை நடத்திய கட்சி JVP. குறிப்பாக ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்களுக்கான ஆட்சி என இந்தியா முன் வைத்த தீர்வையும் கடுமையாக எதிர்த்த கட்சி அது.
கூடுதல் தகவல், தன்னை சிங்கள தேசியவாத கட்சியாக அறிவித்துக் கொள்ளும் கட்சி அது. பெளத்தத்துக்குதான் முன்னுரிமை கொடுக்கப்படும் என வெளிப்படையாக அறிவித்த கட்சியின் வேட்பாளர்தான் தற்போது ஜனாதிபதி ஆகவிருக்கிறார்.
இந்தியாவின் அயலுறவு கொள்கையில் இந்திய கட்சிகள் கொண்டிருக்கும் நுட்ப முரண்கள் குறித்து முன்பு எழுதி இருந்தேன். அந்த முரண் தெளிவடையும் சுவாரஸ்யத்தை தற்போதைய இலங்கையின் ஆட்சி மாற்றம் வெளிப்படுத்தும்.
இந்தியா முன் வைத்த 13வது சட்டத்திருத்தத்தை இந்திய இடதுசாரிகள் ஆதரித்தனர். அந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஒற்றை இலங்கையை வலியுறுத்தும் இடதுசாரிய கட்சிதான் JVP.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நார்வே தலையீட்டில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையை இந்திய இடதுசாரிகள் ஆதரித்தபோது, JVP அதை எதிர்த்தது. ராணுவ ரீதியிலான தாக்குதல் மட்டுமே தீர்வு என வலியுறுத்தியது.
போர் முடிந்து ஒன்றரை லட்ச தமிழர்கள் கொல்லப்பட்டுருந்த நிலையில் கூட, “போரை வேண்டுமானால் இலங்கை அரசு நடத்தியிருக்கலாம். ஆனால் அதற்கான ஆதரவை நாங்கள்தான் உருவாக்கி தந்தோம்” என பெருமையுடன் உரிமை கோரினர் JVP தலைவர்கள்.
கூட்டாட்சி அற்ற ஒற்றை இலங்கை என்பது பாஜக முன் வைக்கும் இந்தியாவை போன்றது. தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, JVP-க்கு சிவப்பு கம்பள வரவேற்பை ஒன்றிய பாஜக அரசு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கத்தில் IMF-ன் தலையீட்டை எதிர்த்திருக்கிறது JVP. அதானியின் துறைமுகத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இது போன்ற பொருளாதார நடவடிக்கைகளை மட்டும் கொண்டு ‘இடது வெல்கிறது’ என சில்லறையை சிதற விடுவதிலுள்ள அபத்தங்கள் இனி உடையத் தொடங்கும். IMF தீர்வை மறுபரிசீலனை செய்வதாக சமீபத்தில் திஸ்ஸநாயகே சொல்லி இருப்பது அதன் முதல் கட்டம்.
அதாவது IMF-ன் திட்டத்துக்கு வெளிப்படையாக உடன்படும் முதல் இடதுசாரிய கட்சியாக JVP இருக்கும். இன்னும் பல ‘முதல்’கள் இனி வரும். IMF-க்கு உடன்படுவதன் மூலம், இலங்கை ஆளும்வர்க்கத்தின் சுரண்டலை ஈடுகட்ட இலங்கையின் உழைக்கும் வர்க்கத்தை உழைக்கச் செய்யவிருக்கிறது JVP.
பிடல் காஸ்ட்ரோ கண்ட கனவின் அடிப்படையில் உருவான Tricontinental அமைப்பில் இருக்கும் விஜய் பிரஷாத், JVP-க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ‘இலங்கையின் இறையாண்மை JVP-யால் காக்கப்படும்’ என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அந்த இறையாண்மைக்குள் இந்திய அரசாங்கம், ஜெய்ஷங்கர் மற்றும் இந்திய இடதுசாரி கட்சிகள் ஆற்றப்போகும் பங்குதான் இந்தியாவில் இயங்கும் இடதுசாரியத்தின் உட்கூறுகளை புரிந்து கொள்ள நமக்கு உதவவிருக்கின்றன.
க்யூபாவில் பிடலின் ஆட்சி அமைந்ததும் முதலில் நேசக்கரம் நீட்டி நட்பு நாடானது இலங்கைதான். ஆசியாவின் வல்லாதிக்கங்களில் ஒன்றாக கருதப்படும் இந்தியாவின் நட்புறவு மற்றும் இந்திய இடதுசாரிய கட்சிகளின் நிலைப்பாட்டை கொண்டு வழக்கம்போல் சிங்கள மேலாதிக்க அரசை க்யூபா ஆதரிக்குமா?
பாஜகவின் நட்பை பெற்றிருக்கும் JVP இடதுசாரியத்தை இந்திய இடதுசாரிகள் ஏற்பரா?
இலங்கை பிரச்சினைக்குள் தலையிட்டு இந்தியா முன் வைத்த தீர்வை ஆதரிக்கும் இந்திய இடதுசாரிகளை, இந்திய விரிவாக்கத்தை எதிர்க்கும் JVP ஏற்குமா?
JVP முன் வைக்கும் சிங்கள தேசியவாதத்தை இந்திய இடதுசாரிகள் ஏற்பரா?
சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை பெருமையுடன் வரித்துக் கொள்ளும் JVP-தான் தமிழ் பாட்டாளிகளையும் சிங்கள பாட்டாளிகளையும் ஒன்றிணைக்கப் போகிறதா?
பெளத்தம் மற்றும் இந்து மேலாதிக்க தேசியவாதங்களின் வழியாக
இணையவிருக்கும் பாஜக மற்றும் JVP- ன் அயலுறவு கொள்கை செயல்திட்டங்களை இந்திய இடதுசாரிகள் ஏற்கப் போகிறார்களா?
சீனா மற்றும் இலங்கை இடதுசாரி கட்சிகள் பாட்டாளி உணர்வுடன் ஒன்று சேர்ந்து இலங்கையில் இயங்கத் தொடங்குகையில், இந்திய இடதுசாரிகள் என்ன செய்வார்கள் என்பது இன்னொரு சுவாரஸ்யமாக மாறலாம்.
இலங்கை தேர்தலில் பாஜகவின் தலையீட்டை கண்டிக்க, தமிழ் மீனவர்களை மொட்டை அடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து போராட்டம் நடத்திய தமிழ்நாட்டு இடதுசாரிகள், இனி JVP அரசு நம் தமிழ் மீனவர்களை அதே வகையில் கையாளும்போது என்ன செய்வார்கள் என்பது அடுத்த சுவார்ஸ்ய கேள்வி.
‘புலி வருது, புலி வருது’ என அச்சுறுத்தி எல்லா பழிகளையும் புலிகளின் மீது போட்டுக் கொண்டிருந்த இடதுசாரிகளின் சர்வதேசிய உணர்வு, எத்தனை அவலட்சணமான முரண்களை கொண்டிருக்கிறது என்பதை இனி வரும் காலம் காட்டும்.
ஆசியாவிலுள்ள ஒவ்வொரு நாட்டின் இடதுசாரியத்துக்குள்ளும் பூகோள ரீதியிலான கொள்கையும் அந்தந்த நாட்டு இறையாண்மை மற்றும் மேலாதிக்கம் சார்ந்த நிலைப்பாடுகளும் இருக்கும் என்கிற யதார்த்தம் வெளிவரலாம்.
இலங்கையின் இனவாதத்துக்கு தீர்வாக தமிழ் பாட்டாளிகளையும் சிங்களப் பாட்டாளிகளையும் ஒன்றாக வேண்டுமென பாடம் நடத்திய இந்திய இடதுசாரிகள், முதலில் இலங்கையின் JVP இடதுசாரிகளுடன் அவர்கள் ஒன்றாக முடியுமா என்பதை ஆலோசிக்கலாம்.
ஒரு நாட்டின் அரசுக்கென ஒரு தன்மை இருக்கும். அதற்கென ஒரு ஆளும்வர்க்கம், கருத்தியல் மேலாதிக்கம், பூகோள அரசியல் யாவும் இருக்கும். அந்தத் தன்மை சார்ந்த கேள்விகள் கேட்கப்படாமல் ஒரு நாட்டில் இடதுசாரியம் உருவாகக் கூடாது. அந்த அரசு, ஆளும் வர்க்கம், கருத்தியல் மேலாதிக்கம் எல்லாவற்றையும் முழு முற்றாக உதறி நிற்கும் ஒரு கட்சியும் அமைப்பும்தான் தன்னை இடதுசாரியத்துடன் பேச முடியும். அதை செய்யாமல் பேசுகிற இடதுசாரியம் யாவும் போலிதான்.
சோவியத் முன் வைத்த சர்வதேசியத்தை படித்து விட்டு, தேசியவாதம் வளர்த்தெடுக்கப்பட்ட காலத்துக்கு பின்னான அரசியலை அவதானிப்பதில் நாம் கொண்டிருக்கும் போதாமை இன்னும் தெளிவாகும்.