பேரனர்த்த மரணங்கள் தொடர்பான '2 மேலிடத்து உத்தரவுகளின்' சட்டவலு குறித்து கேள்வி !
நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மாற்றக்கூடிய அல்லது புறக்கணிக்கக்கூடிய வகையில் அரச உத்தியோகத்தர்களால் சுற்றறிக்கைகளை வெளியிட முடியுமா?
அண்மைய காலநிலை அனர்த்தத்தில் மரணமடைந்தவர்களின் சடலங்களை விரைவாக அகற்றுவதற்காக அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட உத்தரவுகளை செயற்படுத்துவதால் அரச உத்தியோகத்தர்கள் சட்டரீதியான சிக்கல்களை எதிர்நோக்கும் அபாயம் எழுந்துள்ளது.
டித்வா புயல் காரணமாக டிசம்பர் 11வரையில் இலங்கையில் 639 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 192 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், “ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை காரணமாக சம்பவிக்கும் உடனடி மரணங்களுக்கான மரண பரிசோதனைகள் நடத்துதல்” என்ற தலைப்பின் கீழ் சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நவம்பர் 28ஆம் திகதி அன்று அறிக்கை வெளியிட்டதோடு, நவம்பர் 29 அன்று “நாட்டை பாதித்த பாதகமான காலநிலை காரணமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் மரணமடைந்தவர்களது சடலங்களை விரைவாக அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்” என்ற தலைப்பின் கீழ் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் சில வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டன.
சுகாதார அமைச்சின் செயலாளரும், பொலிஸ் மா அதிபரும் அனுமதி அளித்தமைக்கு அமைய, அனர்த்தத்தில் இறந்தவர்களை நீதிமன்ற உத்தரவின்றி நல்லடககம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த அனுமதியை வெளிநாட்டவர்களது சடலங்களுக்கு அமுல்படுத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சுற்றறிக்கைகளும் சட்டவாக்கத்தினால் உருவாக்கப்பட்ட சட்டத்தை மீறும் சட்டவிரோத உத்தரவுகள் என தடயவியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
“குற்றங்களை மறைக்கலாம்”
இந்த சுற்றறிக்கைகளை நடைமுறைப்படுத்துவது மரண விசாரணைகளை நடத்துவதற்கான இலங்கையின் ஒரேயொரு சட்டமான குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவையின் 369 ஆவது பிரிவை மீறுவதாக அமையும் எனவும், இப்பிரிவை மீறுவதற்கு எந்தவொரு சட்ட ஏற்பாடும் இல்லை எனவும், ஓய்வுபெற்ற சட்ட வைத்திய அதிகாரியும் மற்றும் தடயவியல் வைத்தியத் துறையின் முன்னணி நிபுணருமான வைத்திய நிபுணர் தனஞ்சய வைத்தியரத்ன குறிப்பிட்டுள்ளார்.
“தெளிவாக இந்த இரு சுற்றறிக்கைகளும் சட்டவிரோதமானவை. இவற்றின்மூலம் குற்றங்களை மறைக்க முடியும். அத்துடன், இறந்தவர்களுக்கு நீதி கிடைப்பதும் தடுக்கப்படக்கூடும். ஏனெனில் சடலங்களை சரியாக அடையாளம் கண்டு முறையான நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு இவ்விரு சுற்றறிக்கைகளாலும் தடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் சடலங்களை அகற்றுதல் தொடர்பாக வெளியிட்ட இவ்விரு சுற்றறிக்கைகளும் இலங்கை அரசியல் அமைப்பின் குற்றவியல் சட்டத்தின் தொடர்புடைய சகல பிரிவுகளையும் மிகக் கடுமையாக மீறுகிறது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மாற்றக்கூடிய அல்லது புறக்கணிக்கக்கூடிய வகையில் அரச உத்தியோகத்தர்களால் சுற்றறிக்கைகளை வெளியிட முடியுமா? இது ஒரு மிகவும் மோசமான நிலை. 369 ஆவது பிரிவுக்கு வேறு மாற்றீடு இல்லை. சுகாதார அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மட்டுமல்ல, எங்களுக்குத் தெரிந்தவரை நீதி அமைச்சின் செயலாளருக்கு கூட சட்டரீதியாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தாண்டி சுற்றறிக்கைகளை வெளியிடும் அதிகாரம் இல்லை” எனக் குறிப்பிட்ட வைத்திய நிபுணர், சடலங்களை விரைவாக அகற்றுவதற்காக வழங்கப்பட்டுள்ள இந்த புதிய உத்தரவுகள் எதிர்காலத்தில் தீர்வற்ற பல சிக்கல்களை உருவாக்கக்கூடும் எனவும் கடுமையாக எச்சரித்தார்.
“குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் மரண விசாரணை அத்தியாயத்தில் உள்ள 369 ஆவது பிரிவு பின்வருமாறு குறிப்பிடுகிறது:
“இந்த சட்டக்கோவையின் ஏற்பாடுகளைத் தாண்டிமரண விசாரணை நடத்தப்படலாகது.”
இது தொடர்பாக மேலும் சட்ட விளக்கங்கள் பிரிவு 370 (1) இன் துணைப் பிரிவுகள் (அ), (ஆ) மற்றும் (இ) இன் கீழ் மேலும் சட்ட விளக்கங்கள் காணப்படுவதோடு, இது பிரேத பரிசோதனை அதிகாரிகளின் பங்கு முதல் தடயவியல் வைத்திய நிபுணர்களின் செயற்பாடுகள் வரை நீள்கிறது.
நீதிமன்ற அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல்
இலங்கை அரசியல் அமைப்பு குற்றவியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள சடலங்களை அடையாளம் காணும் விஞ்ஞானப் பரிசோதனையின் முக்கியமான பகுதியாக மரண பரிசோதனை செயன்முறை உள்ளது. இச்செயன்முறையின் பிரதானமான மற்றும் இறுதி அதிகாரம் நீதிமன்றத்துக்கு மாத்திரமே உரியது என்பதால், இது ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டக் கட்டமைப்பிற்குள் மேற்கொள்ளப்படுகிறது. மரண பரிசோதனை செயன்முறையின் முதன்மை விசாரணையாளர் நீதிமன்றமே அன்றி, அமைச்சின் செயலாளர்களோ, பொலிஸ் மா அதிபரோ அல்லது வேறு எந்த அரச உத்தியோகத்தரோ அல்ல. எந்தவொரு சடலத்துக்கும் மரண பரிசோதனை நடத்த வேண்டிய தேவை ஏற்படும்போது, அதற்காக நீதவான் ஒருவரால் மட்டுமே எழுத்துமூலமான உத்தரவு முறையாகவும் உத்தியோகபூர்வமாகவும் சம்பந்தப்பட்ட அதிகார எல்லையில் உள்ள தடயவியல் வைத்திய நிபுணருக்கோ அல்லது தகுதியான வேறு வைத்தியருக்கோ மட்டுமே வழங்கப்படுகிறது. அவ்வாறான அதிகாரம் கொண்ட அரசியல் அமைப்பு சட்டத்தை எந்த வகையிலேனும் மாற்றி அரச உத்தியோகத்தர்கள் சுற்றறிக்கைகளை வெளியிடுவது எப்படி என்பதே கேள்வியாகும்.
சுற்றறிக்கையின் ஆரம்பத்திலேயே பொலிஸ் மா அதிபர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“இயற்கை அனர்த்தங்களில் மரணமடைந்தவர்களின் அடையாளம் காணப்பட்ட அல்லது அடையாளம் காணப்படாத சடலங்களை வைத்தியசாலை பிரேத பரிசோதனை அறைகளில் நீண்ட காலம் வைத்திருப்பதால் மின்சாரம் இன்மை மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்ட ஏனைய வசதிகளை முகாமைத்துவம் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அந்த சடலங்களை விரைவாக அகற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை பொலிஸ் திணைக்களம், சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு மற்றும் ஏனைய நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.”
தெளிவாகவே இது பொலிஸ் மா அதிபர் தனதும் பொலிஸ் திணைக்களத்தினதும் அதிகார வரம்பை மீறும் ஒரு நிலைமை ஆகும். சடலங்களை விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் ஏனைய அமைச்சுக்களிடம் எவ்வாறு கோர முடியும்? அத்தகைய அதிகாரம் பொலிஸ் மா அதிபருக்கு இல்லை. ‘அடையாளம் காணப்பட்ட அல்லது அடையாளம் காணப்படாத’ எனக் கூறுவதும் மிகவும் பாரதூரமான விடயமாகும். ஏனெனில், ஒரு சடலத்தை முறையாக அடையாளம் காணும் விடயம் அவசியமான ஒரு தேவைப்பாடாக உள்ளதோடு, அதனைத் தொடர்ந்து வரும் பல சட்டரீதியான விடயங்களுடன் அது பின்னிப் பிணைந்துள்ளது. உறவினர்களுக்கு சடலங்களை முறையாக ஒப்படைத்தல், இறப்புச் சான்றிதழ்களை வழங்குதல், மற்றும் இறப்பு ஒரு குற்றத்தின் விளைவாக ஏற்பட்டதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்துவது போன்றவை மரண பரிசோதனையின் மூலம் எதிர்பார்க்கப்படும் சில முக்கியமான விடயங்களாகும். முறையான விசாரணை அல்லது சாட்சியங்கள் இல்லாமல் சடலங்களை சட்டவிரோதமாக அகற்றுவதனால் அதன்பின்னர் சிக்கலை எதிர்கொள்வது இறந்தவரின் நெருங்கிய உறவினர்களே ஆவர். சரியான இறப்புச் சான்றிதழ் இல்லாமல், அவர்களுக்கு எந்தவொரு இழப்பீட்டையோ அல்லது இறந்தவருக்கு உரித்தான காப்புறுதி உரிமையையோ கோருவதற்கான வாய்ப்பு கிடைக்காது.
அரச உத்தியோகத்தர்கள் நெருக்கடியில்
மரண பரிசோதனையின்றி சடலங்களை அப்புறப்படுத்த பொலிஸ் மா அதிபர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வெளியிட்டுள்ள வழிகாட்டலுக்கு அமைய மரணித்தவருக்காக வழங்கப்படும் பத்து இலட்சம் ரூபாய் இழப்பீட்டைப் பெறுவதற்கு இறப்புச் சான்றிதழ் கட்டாயமாகும். புயல் நிலைமை ஏற்படுவதற்கு பத்து மாதங்களுக்கு முன்பாக இந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த வெளியிட்ட வழிகாட்டலில் ‘மரணித்த நபரின் இறப்புச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி’ உயிரிழப்புக்கான இழப்பீட்டைப் பெறுவதற்கு தேவையான ஆவணங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே விடயம் தொடர்பில் இரண்டு அரச உத்தியோகத்தர்களால் இரு முரண்பாடான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பதவி நிலையில் குறைந்த அரச உத்தியோகத்தர்கள் எந்த வழிகாட்டலைப் பின்பற்ற வேண்டும் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் சங்கம் இது தொடர்பாக தமக்கு முறையான ஒரு வழிகாட்டல் சுற்றறிக்கையை வெளியிடுமாறு நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், மரண பரிசோதனை நடத்தப்படாமல் சடலங்களை விடுவிக்க முயல்வதால், திடீர் மரண விசாரணை அதிகாரிகள் எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாக நேரிடும் எனவும் அச்சங்கத்தின் தலைவர் அனுர ஹேரத் எச்சரித்துள்ளார். இன்னொரு புறம், மரண பரிசோதனை நடத்தப்படாமல் சடலங்களை அகற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் கோரியிருப்பது துறைசார் நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எந்தவொரு சூழ்நிலையிலும் சம்பவித்த இறப்புக்கான காரணங்களைக் கண்டறிந்து நீதிமன்றத்துக்கு அறிக்கையிடுவது தடயவியல் வைத்திய நிபுணர்களது பணியாகும். பொலிஸாருக்கு உள்ள பொறுப்பு, அதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதும், விசாரணைகளை மேற்கொள்வதும் ஆகும். தடயவியல் நிபுணர்களது பணியை மேற்கொள்வது பொலிஸாரின் பொறுப்பல்ல, சட்டரீதியாக அதற்கு இடமும் இல்லை. தடயவியல் அல்லது பொலிஸ் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் சிக்கல்கள், சிரமங்கள் மற்றும் நடைமுறை இயலாமைகள் இரண்டாம் நிலை விடயங்களாகும். அதன் மூலமாக மரண பரிசோதனை போன்ற மிகவும் முக்கியமான மற்றும் தீர்க்கமான பணியை மேற்கொள்ளாமல் சடலங்களை அகற்ற அனுமதிக்க முடியாது. பொலிஸார் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினரின் பொறுப்பாக அமைவது, விசாரணைகளுக்கான வசதிகள் மற்றும் ஏனைய வளங்களில் பற்றாக்குறை இருப்பின் அந்த வசதிகளை வழங்குமாறு அரச அதிகாரிகளிடம் கோருவதே அன்றி, மரண பரிசோதனைகளை நடத்தாதிருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வதல்ல.
முறைகேடான சட்டம்
“அனைத்து சடலங்களையும் அடையாளம் காண வேண்டும். நிலத்தில் புதையுண்ட சடலங்களுக்கும் இது பொருந்தும். அதனைப் புறக்கணிக்கிறோம் என்றால் முறைகேடான சட்டங்களை அமுல்படுத்துகிறோம் என்று பொருளாகாதா? இயற்கை அனர்த்தத்தின்போது என்றாலும் இதுபோன்ற தீர்மானங்களால் நடக்கக்கூடிய குற்றங்களுக்கு மறைமுகமாக இடமளிப்பதாக அமையாதா?” என வினவிய தடயவியல் நிபுணர் தனஞ்சய வைத்தியரத்ன, சுகாதார செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் இரு சுற்றறிக்கைகளும் எதிர்காலத்தில் குற்றவியல் விசாரணை நடவடிக்கைகளில் கடுமையான நெருக்கடி நிலையை உருவாக்கக்கூடும் எனவும் மேலும் தெரிவித்தார்.
சந்தேகத்திற்கிடமான எந்தவொரு சடலத்தின் மரண பரிசோதனையும் நீதவானின் உத்தரவின் பேரில் தடயவியல் நிபுணரின் தலையீட்டின் கீழ் நடைபெற வேண்டும். இதன் நோக்கம் ஒரு குற்றம் நடந்ததா என்பதை உறுதிப்படுத்துவதாகும்.
பொலிஸ் மா அதிபரின் சுற்றறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “அனர்த்த நிலை காரணமாக மரணமடைந்த நபரின் சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டிருப்பின் அது தொடர்பான வேறு சட்டரீதியான சிக்கல்கள் எதுவும் எழாத சந்தர்ப்பங்களில் மரண பரிசோதனையின்றி அந்த சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் இணைந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்....”
இந்த பிரிவின்படி, மரண பரிசோதனைகளை நடத்த உத்தரவிடும் நீதவான் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பொலிஸ் மா அதிபர் தனக்குரியதாக்கி உள்ளார். மறுபுறம் எழும் கேள்வி என்னவென்றால், அவ்வாறு சடலங்களை அகற்றுவது குறித்து சம்பவம் நடந்த இடத்தின் கள ஆய்வுக்குப் பிறகு தீர்மானிக்கும் அதிகாரம் யாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது? அது பிரதி பொலிஸ் மா அதிபர் முதல் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி வரையிலான ஒருவராக இருக்கலாம். யாரால் மேற்கொள்ளப்பட்டாலும் அந்தத் தீர்மானம் அவரால் அந்த நேரத்தில் எடுக்கப்படும் தனிப்பட்ட அவதானிப்பின் அடிப்படையிலானது அன்றி, சட்ட நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் அல்ல. இது மிகத் தெளிவாக நீதிமன்றத்தின் அதிகாரத்தை கைமாற்றுவதும் அதற்கு சவால் விடுவதுமாகும்.
ஆகவே, இலங்கையில் நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டத்தின் கீழ், மரண விசாரணை அல்லது மரண பரிசோதனை நடவடிக்கைகள் வைத்தியர்கள் அல்லது திடீர் மரண விசாரணை அலுவலர்கள் தவிர வேறு எந்த தரப்பினரிடமோ அல்லது தனிநபரிடமோ ஒப்படைக்கப்படவில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமானால், தற்போதுள்ள சட்டம் நாடாளுமன்றத்தால் திருத்தப்பட வேண்டும். இது சுற்றறிக்கைகள் மூலம் செய்யக்கூடிய பணி அல்ல.
குற்றங்களுக்கு ஊக்கமளித்தல்
இறந்தவரின் நெருங்கிய உறவினர்களின் சம்மதத்தின் பேரில் மரண பரிசோதனை செய்யாமல் இருக்க இடமளிப்பதும் புறக்கணிக்க முடியாத ஒரு தவறாகும். இது மரண பரிசோதனை செயன்முறை மற்றும் குற்றவியல் விசாரணை செயன்முறை ஆகியவற்றை பின்னோக்கித் தள்ளுவதாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், குடும்ப உறுப்பினர்களின் அல்லது வேறு எந்த சிவில் தரப்பினரின் விருப்பத்தின் பேரில் மட்டுமே மரண விசாரணை அல்லது குற்றவியல் விசாரணை நடைபெறுவதில்லை. ஆனால் இங்கு அந்த உரிமை சிவில் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றங்கள் மறைக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என, இது குறித்து வினவியபோது, வைத்தியர் வைத்தியரத்ன குறிப்பிட்டுள்ளார்.
“உலகின் அதிக அளவான குற்றங்கள் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினரால் அல்லது நெருங்கிய உறவினரால் நடக்கின்றன என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது பொலிஸ் மா அதிபருக்கு தெரியாதா? இயற்கை அனர்த்தத்தின் மத்தியிலும் கூட தனிப்பட்ட விரோதங்களை தீர்த்துக் கொள்பவர்கள் இருக்கிறார்களே? நிலத்தடியில் புதையுண்டு போவதால் மட்டுமல்ல, ஒரு சம்பவம் நிகழும்போது, யாராவது தங்கள் எதிரியின் கழுத்தை நெரித்து கொன்றுவிடவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யவோ முடியாதா? அதனால், மரண பரிசோதனை அவசியமா இல்லையா என்று நெருங்கிய உறவினர்களிடம் கேட்பது தவறு. நான் சொல்வது என்னவென்றால், ஒவ்வொரு சடலத்துக்கும் முழுமையான உடற்கூறாய்வு செய்யாவிட்டாலும், குறைந்தபட்சம் வெளிப்புற பரிசோதனையாவது செய்யப்பட வேண்டும். அதை செய்ய வேண்டியது பொலிஸாரோ அல்லது வேறு யாரோ அல்ல, தடயவியல் வைத்திய நிபுணர்களே."
மரண பரிசோதனைகள் நடத்துவதில உள்ள தடையாக சுகாதார அமைச்சின் செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள காரணமாவது, ‘சடலங்களை தடயவியல் வைத்தியர் கடமையாற்றும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் உள்ள சிரமம் என்பதாகும்’.
“அதற்குத் தேவையான மனித வளங்களில் பற்றாக்குறை இருப்பின், இந்த நாட்டில் ஓய்வுபெற்ற வைத்திய நிபுணர்கள் இருக்கிறார்கள், அவர்களை அழையுங்கள். அவ்வாறன்றி, குறைபாடுகள் அல்லது குழப்பம் குறித்துக் கூறி சடலங்களை வெறுமனே அடககம் செய்ய விட வேண்டாம். அது சட்டம் அல்ல. மாறாக, குற்றங்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும்” என தடயவியல் வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.
'நீதவான் விசாரணை அவசியமற்ற இறப்புகளுக்கே' சுகாதார அமைச்சின் செயலாளரின் இந்த இடைக்கால ஏற்பாடுகள் சுற்றறிக்கை செல்லுபடியாகும்.
சுகாதார அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தல்களில் “தொடர்புடைய திடீர் மரண விசாரணை அதிகாரிகளால் நடத்தக்கூடிய மரணப் பரிசோதனைகள் (நீதவான் பரிசோதனை அவசியமற்ற) சம்பந்தப்பட்ட பிரதேசத்துக்கு அருகில் உள்ள பிரதேச வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியர் / வேறு தகுதி வாய்ந்த வைத்தியர் ஒருவரால் நிறைவேற்றப்பட வேண்டும்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனர்த்தத்தில் மரணிக்கும் நபர்களில் நீதவான் விசாரணை அவசியமற்ற சடலங்கள் எவை, என்பது குறித்து வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெளிவுபடுத்தவில்லை.
அதேபோன்று, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் அல்லது குறைந்தபட்சம் தடயவியல் நிபுணர்களிடமிருந்து கூட இதுவரை உத்தியோகபூர்வமான தெளிவுபடுத்தல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
கே.விஜேசிங்க


