உங்களால்முடியாவிடின் பிரதமர் பதவியை தாருங்கள் பட்டியலை நான் எடுத்து தருகிறேன்.
நீதிமன்ற பொறிமுறையை தவிர்த்து மாற்று பொறிமுறைகளை ஏற்பதற்கு எமது மக்கள் தயாரில்லை.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், நல்லிணக்கத்துக்கான அலுவலகம் ஆகியவற்றை காணாமல் போனோரது போராட்டத்துக்கான தீர்வாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் இந்த பொறிமுறையை புறக்கணிக்கிறார்கள். நீதிமன்ற பொறிமுறையை தவிர்த்து மாற்று பொறிமுறைகளை ஏற்பதற்கு எமது மக்கள் தயாரில்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துங்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற அமர்வின்போது பிரதமருடனான கேள்வி கோரல் வேளையின் போது கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
முன்வைத்த கேள்விகளுக்கு பிரதமர் வழங்கிய ஒருசில பதில் திருப்தியற்றவை. அடையாளப்படுத்தப்பட்ட வழக்குகள் என்றால் என்னவென்பதை பிரதமர் அறிவார். கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகளில் பலர் கொல்லப்பாட்டார்கள். காணாமலாகக்ப்பட்டார்கள். இவ்விடயம் தொடர்பான பட்டியலை கடந்த அமர்வின் போது நீதியமைச்சருக்கு அளித்திருந்தோம்.
திருகோணமலை படுகொலை , வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற படுகொலைகள், 2009 ஆம் ஆண்டு வைத்தியசாலை மீது குண்டுத்தாக்குதல் நடத்தியமை தொடர்பில் புதிதாக குறிப்பிட வேண்டிய அவசியம் கிடையாது. அனைத்து வழக்குகளையும் விரைவாக விசாரிக்க முடியாது என்பதை நாங்களும் அறிவோம்.இதனால் தான் அடையாளப்படுத்தப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்கிறோம்.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், நல்லிணக்கத்துக்கான அலுவலகம் ஆகியவற்றை காணாமல் போனோரது போராட்டத்துக்கான தீர்வாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் இந்த பொறிமுறையை புறக்கணிக்கிறார்கள்.நீதிமன்ற பொறிமுறையை தவிர்த்து மாற்று பொறிமுறைகளை ஏற்பதற்கு எமது மக்கள் தயாரில்லை.
காணாமல் போனோர் விவகாரம் மற்றும் அடையாளப்படுத்தப்பட்ட வழக்குகள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுங்கள். குறிப்பிட கூடிய வகையில் ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். நான் விருப்பம் கொள்ளும் அடையாளப்படுத்தப்பட்ட வழக்குகளை குறிப்பிடுமாறு பிரதமர் குறிப்பிடுகிறார். இந்த நாட்டில் இடம்பெற்ற அனைத்து சம்பவங்களும் முக்கியமானது தான். விசாரணைகளை அரசாங்கம் தான் மேற்கொள்ள வேண்டும்.
அரசியல் கைதிகள் தொடர்பான விபரங்களை தருமாறு பிரதமர் என்னிடம் கோருகிறார். இந்த அரசாங்கத்தில் அவர் தான் பிரதமர் என்பதை அவர் விளங்கிக் கொள்ள வேண்டும். பட்டியலை நீதியமைச்சரிடம் கேளுங்கள்.முடியாவிடின் பிரதமர் பதவியை தாருங்கள் பட்டியலை நான் எடுத்து தருகிறேன்.
காணி அபகரிப்பினை கடந்த அரசாங்கம் மேற்கொண்டதாக குறிப்பிடுகின்றீர்கள். இதனால் தான் மக்கள் அவர்களை புறக்கணித்து உங்களை ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளார்கள். திருகோணமலை , மட்டக்களப்பு, வவுனியா ஆகிய பகுதிகளில் இன்றும் காணிகள் அபகரிக்கப்படுகிறது. இது தான் எமது அடிப்படை பிரச்சினை.
மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக பிரதமர் குறிப்பிடுகிறார்.பிரதமரின் இடது கை பக்கம் உள்ள அமைச்சர் மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்டு நடக்காது என்று குறிப்பிடுகிறார். மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்டு நடக்கும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். தேர்தலுக்கு பின்னர் புதிய அரசியலமைப்பு என்று பிரதமர் குறிப்பிடுகிறார்.
ஆகவே ஒவ்வொருவர் ஒவ்வொன்றை குறிப்பிடுகிறார்கள். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை. ஆகவே புதிய யாப்பு உருவாக்கத்துக்கான பணிகள் எப்போது மேற்கொள்ளப்படும் என்றார்.