மீனவ பிரச்சினை: தீர்வு காண புதுடெல்லி செல்லும் டக்ளஸ்
.
யாழ். மாவட்ட செயலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநரும் இணைத் தலைவருமான பி.எஸ். எம். சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகளை மீண்டும் முன்னெடுத்து, இந்திய- இலங்கை மீனவ விவகாரத்தினை தீர்ப்பதற்கும் இந்திய வெளிவிககார அமைச்சர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இதன்போது,மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்ட போது, இந்திய மீனவர்களின் சட்டவிரோத செயற்பாடு காரணமாக பாதிக்கப்படும் தங்களுடைய வாழ்வாதாரம் தொடர்பாக போதிய கரிசனை வெளிப்படுத்தப்படுவதில்லையென கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் ஆதங்கம் வெளியிட்டனர்.
அண்மையில் இலங்கைக்கு வந்த இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்த போதுகூட தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் மீனவ விவகாரம் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் இதன்போது முன்வைத்தனர்.
இந்நிலையில் தனக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பில் இந்த விவகாரம் விரிவாக கலந்துரையாடப்பட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மாவட்டத்தில் காணப்படும் போதைப் பொருள் பரவல் மற்றும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தல், வீதி விபத்துக்களை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெடுப்புக்கள் போன்றவை குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
அதேபோன்று, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண திணைக்களங்களால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்களை ஆராய்ந்து சரியானவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
குறிப்பாக, சட்டத்திற்கு முரணான வகையில் சுண்ணக்கல் அகழப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனால் முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுக்களில் உண்மை இல்லை என்பதை கள விஜயங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,சுண்ணக்கல் அகழ்வு என்பது ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரமாக இருக்கின்ற நிலையில், உரிய நியமங்களின் அடிப்படையில் சுண்ணக்கல் அகழ்வினை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
அகழப்படுகின்ற சுண்ணக்கல், வர்த்தக நோக்கோடு வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்ற பட்சத்தில் அவற்றுக்கான அனுமதிப் பத்திரங்களை விநியோகிப்பதற்கான பொறிமுறையை, சட்ட ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து அதற்கேற்றவாறு உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இன்றைய கூட்டத்தில், மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மற்றும் மாகாண திணைக்களங்களின் பிரதானிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.