'திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம் அமெரிக்கா வரை சென்று சந்தி சிரிக்கிறது' - சீமான் விளாசல்!
.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மின்சார வாரியங்களுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பெற்றிருப்பது பேரதிர்ச்சி தருகிறது என நாம் தமிழர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி சூரிய சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு, இந்திய அதிகாரிகளுக்கு 2,200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்காவில் நிதி திரட்டியதாக நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றசாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள அதானி குழுமம் டாலர் பத்திரங்களைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. மேலும், கெளதம் அதானியுடன் போடப்பட்டிருந்த, பல மில்லியன் டாலர் விமான நிலைய விரிவாக்கம் மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்களை கென்யா ரத்து செய்துள்ளது.
இந்த நிலையில், கெளதம் அதானியை முதல்வர் ஸ்டாலின் ரகசியமாகச் சந்தித்ததேன்? கௌதம் அதானியைக் காப்பாற்ற பாஜகவும், திமுகவும் போட்டி போடுவதா?'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யச் சொல்லி ஆந்திரா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஒரிசா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் மின்சார வாரியங்களுக்குக்கு 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 2,000 கோடி ரூபாய்வரை லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறதெனக் கூறி, அதானி குழுமத்தின் மாபெரும் முறைகேட்டை ஆதாரங்களோடு வெளிப்படுத்தியிருக்கிறது அமெரிக்க அரசு. இந்த வழக்கு அமெரிக்க நாட்டின் நியூயார்க் கிழக்கு மாவட்டத்தின் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் தொடுக்கப்பட்டு, கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 8 பேருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கொடூர தாக்குதல்: கை முறிந்த நிலையில் இளைஞர் கைது!
செப்டம்பர் 21, 2021 அன்று 1,000 மெகாவாட் மின்சாரத்தைப் பெற இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்துடன் தமிழக மின்சார வாரியம் ஒப்பந்தமிட்டிருக்கிறது. இதற்குப் பின்புலத்தில் அதானி குழுமம் தமிழக மின்சார வாரியத்துக்குக் கோடிகளைக் கொட்டியிறைத்திருக்கிறது என்பது அமெரிக்க அரசின் குற்றச்சாட்டின் மூலம் அம்பலமாகியிருக்கிறது. திமுகவின் ஆட்சி நிர்வாகத்துக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்து, இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து (SECI) அதிக விலைக்கு மின்சாரம் வாங்கச் செய்திருக்கும் செய்தி வெளியாகியிருப்பது திராவிடக்கட்சிகளின் கேடுகெட்ட ஆட்சி நிர்வாகத்துக்கான சமகாலச் சாட்சிகளாகும்.
திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம் அமெரிக்காவரை சென்று தமிழ்நாட்டின் மானம் சந்தி சிரித்து நிற்கிறது. அதானி குழுமத்துடன் எந்த ஒப்பந்தமும் இடவில்லை என்பதோடு நிறுத்திக் கொண்டுவிட்டாரே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அதானி குழுமத்தோடு திமுக அரசு ஒப்பந்தம் இட்டதாக யாரும் குற்றஞ்சாட்டவில்லையே! அதானி குழுமம் லஞ்சம் கொடுத்துதான், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து தமிழக மின்சார வாரியம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தமிட்டது என்பதுதானே குற்றச்சாட்டு. அதுகுறித்து திமுக அரசின் நிலைப்பாடென்ன? என்ன சொல்லப்போகிறார் செந்தில் பாலாஜி?
ஆகவே, நாட்டின் மானத்தைக் கப்பலேற்றிய கெளதம் அதானி மீதும், அவரது குழுமத்தின் மீதும் நடவடிக்கை எடுத்து, அவரைக் கைதுசெய்யவும், அவரது குழுமத்துடான அரசின் ஒப்பந்தங்களை ரத்து செய்து, அக்குழுமத்தினை மொத்தமாகக் கறுப்புப்பட்டியலில் வைக்கவுமான செயல்பாடுகளை மேற்கொள்ள மறுக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயல்பாடு ஒட்டுமொத்த நாட்டுக்கே செய்திடும் பச்சைத்துரோகமாகும். இத்தோடு, பாஜக அரசை எதிர்ப்பதாக வெளிவேடமிட்டுக் கொண்டே, அவர்களோடு கொல்லைப்புற வழியாக உறவாடி, அதானிக்கு வாசல்திறந்துவிடும் திமுக அரசின் நயவஞ்சகப்போக்கு தமிழர்களது நலனை அடகு வைத்திடும் கங்காணித்தனத்தின் உச்சம்'' என சீமான் அதில் குறிப்பிட்டுள்ளார்.