பொது வேட்பாளரை தோற்கடிப்போம் என்று கூறியவர்களை நாங்கள் வென்றிருக்கின்றோம்
.
இந்த ஜனாதிபதித்தேர்தலில் பொது வேட்பாளரை தோற்கடிப்போம் என்று கூறியவர்களை நாங்கள் வென்றிருக்கின்றோம் என்பதை எம்மால் உறுதிபடக்கூற முடியும் சுய லாபங்களுக்காக பலருக்கு எதிராக வேலை செய்தாலும் கூட மக்கள் திரட்சியாக சென்று வாக்களித்திருக்கின்றார்கள் என என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
இந்த ஜனாதிபதி தேர்தலில் பலர் எங்களுக்கு உதவி செய்திருக்கின்றார்கள். அதில் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழ்கின்ற அனைவரதும் உதவிகள் கிடைத்திருக்கின்றன.அவர்களின் பிரசாரம் என்பது எமக்கு தெளிவையும் ஒரு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.
இதைவிட வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் உதவி செய்திருந்தார்கள் பொதுக் கட்டமைப்பில் இருக்கக்கூடிய அனைவரும் இணைந்து வேலை செய்திருந்தார்கள் அதை விடவும் முன்னால் போராளிகள் பலரும் பல விடயங்களில் எங்களுக்கு உதவி செய்திருந்தார்கள் அதில் தமிழ் தேசிய கட்டமைப்பில் இருக்கின்ற ஜனநாயக போராளிகள் கட்சிக்கு அப்பால் இருக்கின்ற போராளிகளும் எங்களுக்கு உதவிகளை செய்திருந்தார்கள்.
குறிப்பாக ஊடகவியலாளர்களையும் பாராட்ட வேண்டும் குறிப்பாக தேர்தல் பிரசாரம் தொடங்கிய காலம் முதல் சகல ஊடகங்களும் எங்களுக்கு அர்ப்பணிப்புடன் பல உதவிகளையும் பிரசார நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார்கள். அதேபோன்று கிழக்கு பல்கலைக்கழகம் யாழ் பல்கலைக்கழகம் அத்தோடு பொது கட்டமைப்பில் இருக்கின்ற 83 பொது அமைப்புகளை தவிர்ந்த இன்னும் பல அமைப்புகள் பல உதவிகளை எங்களுக்கு செய்திருந்தார்கள் அவர்களை நாங்கள் மறக்க முடியாது.
இந்த ஜனாதிபதித்தேர்தலில் பொது வேட்பாளரை தோற்கடிப்போம் என்று கூறியவர்களை நாங்கள் வென்றிருக்கின்றோம் என்பதை எம்மால் உறுதிபடக்கூற முடியும் சுய லாபங்களுக்காக பலருக்கு எதிராக வேலை செய்தாலும் கூட மக்கள் திரட்சியாக சென்று வாக்களித்திருக்கின்றார்கள். இதை மையப்படுத்தி எதிர்வரும் காலங்களில் ஒற்றுமையாக செல்லாமல் விடுவோமாக இருந்தால் எதிர்காலத்தில் பாரிய சவால்களை சந்திக்க நேரிடும் என்பதனை பொது வேட்பாளர் என்கின்ற அடிப்படையில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.