இன்று உலக நடன தினம்!
புலம் பெயர்ந்த தமிழர் அந்தந்த நாடுகளில் தங்கள் தடங்களை பதிக்க முனைந்த காலங்களில் தோற்றம்பெற்ற விடயங்களுள் பரதநாட்டியமும் ஒன்று.
இன்று உலக நடன தினம்.
நேற்றைய தினம் (28.04.2024) சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்தை மையமாகக்கொண்டு சுவிற்சர்லாந்தின் பல பாகங்களிலும் பரதக்கலையை கற்பித்து வரும் “கலாநிகேதன் நடனாலயம்” தனது 33வது ஆண்டு விழாவை பாசல் மாநிலத்தில் கொண்டாடியது.
சுவிற்சர்லாந்துக்கு புலம் பெயர்ந்த தமிழர் அந்தந்த நாடுகளில் தங்கள் தடங்களை பதிக்க முனைந்த காலங்களில் தோற்றம்பெற்ற விடயங்களுள் கலாநிகேதன் நடனாலயமும் ஒன்று.
கலாநிகேதன் நாட்டியப்பள்ளி “நாட்டியக் கலைமணி” கிருஸ்ணபவானி சிறிதரன் அவர்களின் பெரும் முயற்சியாலும் அர்ப்பணிப்பாலும் உருவாகி இன்று மூன்று தசாப்பங்களை கடந்து நிற்கின்றது.
கலாநிகேதன் நடனாலயம் தனது முதலாவது “நாட்டியாஞ்சலி” நிகழ்வை 1995ம் ஆண்டின் இதே காலப்பகுதியில் செய்திருந்தது.அந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய கஜேந்திரக் குருக்கள் ஒரு விடயத்தை பதிவாக்கியிருந்தார். அன்று அவர் உரையாற்றியதில் இருந்து என் நினைவுள் அழியாது பதிந்துள்ள ஒரு விடயத்தை முடிந்த வரை அப்படியே சொல்கிறேன். “இந்த பாசல் மாநிலம் மீது எனக்கு சற்றுப் பொறாமையாக இருக்கின்றது. தமிழர் சார்ந்த விடயங்களின் பதிவுகளில் பலவற்றை பார்த்தால் அதை முதலில் செய்தவர்கள் பாசல் மாநிலத்தவர்களாக இருக்கின்றார்கள். முதற் கோவில், முதற் தமிழ்ப் பாடசாலை அந்த வரிசையில் முதலாவது முழுநேர பரதநாட்டிய நிகழ்வு.” ஆம் சுவிற்சர்லாந்தில் முதலாவது முழு நேர பரதநாட்டிய நிகழ்வான “நாட்டியாஞ்சலி” நிகழ்வை நடத்திய பெருமையும் வரலாறும் “கலாநிகேதன்” நாட்டியப்பள்ளிக்கு உண்டு. அந்த நிகழ்வில் “கலாநிகேதன்” நடனாலயம் சார்ந்த நன்றியுரையினை வழங்கும் வாய்ப்பை ஆசிரியை எனக்கு வழங்கியிருந்தார். பாடசாலை நிகழ்வு, போட்டி நிகழ்வுகள் கடந்து நான் ஏறிய முதலாவது வெளி மேடை அதுவாகும்.
பரதக்கலையை அதன் மரபு மீறாதவகையில் கற்பிக்கும் அதேவேளையில் காலத்துக்கு ஏற்ற வகையில் நாட்டிய அடவுகளினூடாக எம் தேசத்தின் வலி, போர் அதற்கான எழுச்சி்யையும் வெளிக்கொணரத் தவறவில்லை.
சுவிற்சர்லாந்தில் “கலாநிகேதன்” முத்திரை பதிக்காத மேடைகளே இல்லை எனலாம்.
“நிருத்திய மாலை” என தனது பத்தாவது அகவையையும் கொண்டாடிய கலாநிகேதன் இன்று 33 ஆண்டுகளை எட்டி தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது பல்லின மக்களிடையேயும் பரதக்கலையை கற்பிக்கும் நாட்டியப்பள்ளியாக வளர்ந்து நிமிர்ந்து நிற்கின்றது.
சுவிற்சர்லாந்தில் பல இரண்டாந்தலைமுறையை சேர்ந்தவர்களை உருவாக்கி அவர்களை ஆசிரியர் தரம் வரை உயர்த்தி இன்று மூன்றாந்தலைமுறையினருக்கும் கற்பிக்கும் நாட்டியப்பள்ளியாக நிமிர்கின்றது.
33வது அகவையை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட “நாட்டியாஞ்சலி” நிகழ்வு மிகச் சிறப்பாக மண்டபத்தையும் மீறிய கொள்ளளவுடன் நடைபெற்று நிறைவடைந்திருந்தது..