தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் புதிய சூழ்ச்சி: வெற்றியளிக்குமா?
.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி,
ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் எவராவது சட்டத்துக்கு அப்பால் செயல்பட முற்பட்டால் அது நாட்டின் அடிப்படை சட்டமான அரசியலமைப்பை மீறுவதாகும்.
தேர்தல்கள் ஆணைக்குழுவால்கூட தேர்தலை ஒத்திவைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியாது. அவ்வாறு முற்பட்டால் அது அரசியலமைப்பை மீறும் செயல்.
நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் முன்னிலையாக வேண்டிய சந்தர்ப்பங்களில் பெப்ரல் அமைப்பு முன்னிலையாகும்.
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க எவராவது முற்பட்டால் அதற்கு எதிராக பெப்ரல் அமைப்பு செயல்பட்டு மக்களுக்கு தேர்தல் உரிமையை பெற்றுக்கொடுக்கும்.
இலங்கையில் பல தேர்தல்கள் பல கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளன. சில தேர்தல் தொடர்ந்து நடத்தப்படாமலும் இருந்துள்ளன. ஆனால், ஜனாதிபதித் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் ஒருபோதும் பிற்போட்டதில்லை. அதனை செய்ய முடியாது.
அரசியலமைப்பில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான தெளிவான சட்ட ஏற்பாடுகள் உள்ளன. என்றாலும், ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை முன்கூட்டியே நடத்த முடியும். பிற்போட முடியாது.
மக்கள் மத்தியில் தேர்தல் தொடர்பிலான நம்பிக்கையின்மையை ஏற்படுத்த முற்படுகின்றனர். நீதிமன்றங்கள் மக்களின் உரிமைகளை பறிக்காது பாதுகாக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
அமைச்சரவையில் நேற்று தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ள பின்புலத்தில் இவ்வாறான தீர்மானத்தை எடு்ககின்றனர்.
அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து தேர்தலை ஒத்திவைக்கும் சூழ்ச்சிகள் இடம்பெறலாம். ஆனால், அதற்கு ஒருபோதும் அனுமதிகள் அளிக்கப்படாது நீதிமன்றம் மக்களின் பக்கமே நின்று தீர்ப்பளிக்கும்.” என்றார்.