அடை மழை – வெள்ள நீரில் மூழ்கிய விவசாய நிலங்கள் வீடுகள்: பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விசேட ஏற்பாடு
.
நாட்டில் வானிலை சீற்றத்தினால் கடந்த இரு தினங்களாக மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது.
எனினும் நேற்று (25) இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்களில் அண்டி வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கந்தபளை, ஹைபொரஸ்ட், ரேஸ்கோஷ் குடியிருப்பு , பம்பரகலை மற்றும் நானுஓயா பகுதிகளில் பெய்யும் கடும் மழை காரணமாக பெருமளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
அத்தோடு குறித்த பிரதேசங்களை அண்டிய வீடுகளில் புகுந்த வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
இதில் அதிகமாக கந்தப்பளை பிரதேசத்தில் பல இடங்களில் வெள்ள அனர்த்த நிலை உருவாகியுள்ளதுடன் கோர்ட்லோட்ஜ் சந்தி மற்றும் புதிய வீதி தொகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையால் நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கா.பொ.த உயர்தரப் பரீட்சைக்கும் செல்லும் மாணவர்களுக்கு விசேட ஏற்பாடு
கடும் மழை காரணமாக நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று (26) காலை மழைக்கு மத்தியில் மாணவர்களின் பரீட்சை நிலையங்களுக்கு உரிய நேரத்தில் அழைத்து செல்லும் நடவடிக்கையை கனரக வாகனங்கள் மூலம் போக்குவரத்து ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
பிற்பகல் இடம்பெற உள்ள பரீட்சைக்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு உரிய நேரத்திற்குள் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.