பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு இம்மாதம் திருமணம்!
.
இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு இம்மாதம் 22-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை சிந்து திருமணம் செய்ய உள்ளார்.வெங்கட தத்தா போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் என்ற IT நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றுகிறார்.இவர்களின் திருமணம் உதய்பூரில் நடைபெறும், திருமண வரவேற்பு நிகழ்ச்சி டிசம்பர் 24-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது."இரண்டு குடும்பங்களும் நீண்டகாலமாக அறிந்தவர்கள். ஆனால் ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் குறித்த அனைத்து பேச்சுகளும் முடிவடைந்தன. ஜனவரி முதல் அவரது அட்டவணை பரபரப்பாக இருக்கும் என்பதால் இந்த தேதி மட்டுமே சாத்தியம்" என்று சிந்துவின் தந்தை பி.வி. ரமணா பிடிஐயிடம் தெரிவித்தார்.
போட்டிகளில் தொடர்ந்து பங்குபெறும் சிந்து
சமீபத்தில், சையத் மோடி சர்வதேச ஓபன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற சிந்து, இந்த வெற்றி மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பட்டம் வென்றுள்ளார்.அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் மீண்டும் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளார்.29 வயதான பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.2019-ல் உலக சாம்பியன்ஷிப்பில் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்றார். காமன்வெல்த், ஆசிய போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஜூனியர் அளவிலும் பல்வேறு பட்டங்களை வென்றுள்ளார்.