சஜித் பிரேமதாஸ சமஷ்டி குறித்து வழங்கிய உத்தரவாதம் என்ன ? – தமிழசுக்கட்சியின் ஆதரவு குறித்து எஸ்.சிறிதரன் கேள்வி
.
– எஸ்.சிறிதரன் எந்தக்கட்சியில் இருக்கிறார்?? தமிழரசுக்கட்சியிலிருந்து எஸ்.சிறிதரன் நீக்கப்படுவாரா??
இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் யார் தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்குகின்றாரோ, அவரையே ஆதரிப்பது என ஏற்கனவே நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக்கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட நிலையில், தற்போது தமிழரசுக்கட்சி ஆதரிப்பதற்குத் தீர்மானித்திருக்கும் சஜித் பிரேமதாஸ சமஷ்டி தீர்வு குறித்து வழங்கிய உத்தரவாதம் என்ன என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுமாத்திரமன்றி தீர்வு குறித்த எவ்வித உத்தரவாதமுமின்றி சஜித்தை ஆதரிப்பதென கட்சி பிழையான முடிவை எடுத்து அதன்வழி செயற்படுமேயானால், தானும் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிப்பது என்ற சரியான தீர்மானத்தில் எவ்வித மாற்றமுமின்றி அதன்வழி பயணிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் தாம் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கப்போவதில்லை எனவும், மாறாக தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்கக்கூடிய ஏனைய பிரதான வேட்பாளர்களில் ஒருவரையே ஆதரிப்போம் எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார்.
ஆனால் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து கட்சி ரீதியாகத் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்பதாகவே கடந்த மாத இறுதி வாரத்தில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை நேரில் சந்தித்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், அவருக்குத் தனது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் அத்தீர்மானம் குறித்து கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அதற்கு மறுதினம் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சி எடுத்திருக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவோம் என அறிவித்தார்.
இது இவ்வாறிருக்க கடந்த மாதம் 29 ஆம் திகதி லண்டன் பயணமான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெற்ற தினத்தன்று நாட்டில் இல்லாததன் காரணமாக அதில் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் அவர் மீண்டும் நாடு திரும்பியதன் பின்னர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு தமிழரசுக்கட்சி எடுத்திருக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வாரா? அல்லது கட்சியின் தீர்மானத்துக்குப் புறம்பாக தொடர்ந்து தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவாரா? என வினவியபோதே சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் குறிப்பிட்ட அவர், கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறும் திகதி தொடர்பில் 7 நாட்களுக்கு முன்னர் தான் அறிவிக்கப்பட்டதாகவும், அதேபோன்று எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது பற்றி உரியவாறு கலந்துரையாடித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை கட்சியின் கடந்த மத்திய குழுக்கூட்டங்களில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் யார் தமிழ் மக்களுக்கான சமஷ்டி தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்குகின்றாரோ, அவரையே ஆதரிப்பது எனக் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்ட சிறிதரன், அவ்வாறிருக்கையில் சமஷ்டி தீர்வு குறித்து சஜித் பிரேமதாஸ வழங்கியிருக்கும் உத்தரவாதம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.
எனவே இவை பற்றிய எந்தவொரு தெளிவுபடுத்தல்களும் இல்லாத நிலையில், தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது குறித்துத் தான் மேற்கொண்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என சிறிதரன் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்த எவ்வித உத்தரவாதமுமின்றி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென தமிழரசுக்கட்சி பிழையான முடிவை எடுத்துச் செயற்படும் பின்னணியில், தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது என்ற சரியான தீர்மானத்தின் வழியில் பயணிப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.