“நான் ராஜபக்சவின் புதிய தலைமுறை”: நவீன இலங்கையை விரும்பும் நாமல்
.
“நானோ அல்லது எனது தந்தையோ ஏதேனும் குற்றவாளியாக இருந்தால், நாங்கள் தேர்தலில் மக்களை எதிர்கொள்ள மாட்டோம்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“முன்னிணி ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தீவிரமான, குழப்பமான கடந்த காலங்களுடன் வந்தவர்கள்.
ஆனால் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஏதும் இல்லாத ஒரே வேட்பாளர் தான் மட்டுமே.
கடந்த காலங்களில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து தனது சிறிய தந்தை கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலக நேரிட்டது.
இந்நிலையில், தனக்கு எதிராகவும் திட்டமிட்ட சதித்திட்டம் இருப்பதாக நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் பயப்படவில்லை, ஏனென்றால் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நாங்கள் தவறு செய்திருந்தால், நான் போட்டியிட மாட்டேன்.
நானோ அல்லது எனது தந்தையோ ஏதேனும் குற்றவாளியாக இருந்தால், நாங்கள் தேர்தலில் மக்களை எதிர்கொள்ள மாட்டோம்.
நான் ராஜபக்சவின் புதிய தலைமுறை என்றும், நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டுச் செல்ல நவீன மற்றும் புதிய சிந்தனையை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“என் சிந்தனை நவீனமானது. நவீன இலங்கைக்கு செல்ல வேண்டுமானால் நவீன சிந்தனையை நாம் கொண்டிருக்க வேண்டும்.
உள்கட்டமைப்பு மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சேவைகள் மற்றும் சுற்றுலாத்துறைக்கான உலகளாவிய மையமாக இலங்கையை மாற்றுவதே எனது கவனம்.
நான் அதை மிகவும் நேர்மறையான அணுகுமுறையுடன் பார்க்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.