தென் கொரியக் கப்பல் விபத்திற்கு ஈரான் மறுப்பு!
ஒப்பந்தம் எட்டாவிட்டால் கடும் தாக்குதல்" என டிரம்ப் எச்சரிக்கை!
தென் கொரியக் கப்பல் விபத்திற்கு ஈரான் மறுப்பு; "ஒப்பந்தம் எட்டாவிட்டால் கடும் தாக்குதல்" என டிரம்ப் எச்சரிக்கை!
1. தென் கொரியக் கப்பல் விபத்தில் தொடர்பில்லை: ஈரான் மறுப்பு
கடந்த திங்கட்கிழமை ஹார்முஸ் நீரிணையில் தென் கொரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட மர்ம வெடிவிபத்திற்கும், தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என ஈரான் வியாழக்கிழமை காலை திட்டவட்டமாக மறுத்துள்ளது. முன்னதாக இந்த விபத்தைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்பது குறித்த தங்களின் முடிவை "மீண்டும் கவனமாகப் பரிசீலிக்க உள்ளதாக" தென் கொரியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2. "ஒப்பந்தம் அல்லது கடும் தாக்குதல்" - டிரம்ப் எச்சரிக்கை!
ஈரானுடனான மிகச் சிறப்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஒரு முழுமையான அமைதி ஒப்பந்தம் எட்டப்படுவது "மிகவும் சாத்தியமே" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தார். இருப்பினும், இந்த ஒப்பந்தத்திற்கு ஈரான் சம்மதிக்காவிட்டால், "குண்டுவீச்சுத் தாக்குதல்கள் உடனடியாகத் தொடங்கும். துரதிர்ஷ்டவசமாக, முன்னெப்போதையும் விட மிகக் கடுமையான அளவில் அந்தத் தாக்குதல்கள் இருக்கும்," என அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
3. ஏடன் வளைகுடாவை நோக்கிப் பிரான்ஸ் போர்க்கப்பல்
பிரான்ஸ் தனது அதிநவீன 'ரஃபேல்' போர் விமானங்களைத் தாங்கிய மாபெரும் 'சார்லஸ்-து -கோல்' போர்க்கப்பலை ஏடன் வளைகுடாவை நோக்கி அனுப்பியுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இணைந்து உருவாக்கியுள்ள பன்னாட்டுப் பாதுகாப்புப் படையின் அவசியத்தைப் பிரான்ஸ் அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட இம்மானுவேல் மக்ரோன், ஐக்கிய அரபு அமீரகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
4. லெபனானில் இஸ்ரேல் தக்குதல் ; 11 பேர் பலி
கடந்த ஏப்ரல் 17-ஆம் திகதி அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதன்முறையாக, லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிறப்புப் படையான 'ரத்வான்' படையின் முக்கியத் தளபதி கொல்லப்பட்டார்.
மேலும், லெபனானின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் புதன்கிழமை நடந்த தொடர் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் இஸ்ரேலிய வீரர் பலி
தெற்கு லெபனான் பகுதியில் புதன்கிழமை நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தித் தாக்குதல் ஒன்றில், தங்கள் படையினன் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
6. கடல் முற்றுகை குறித்த முந்தைய நிலவரம்
அமெரிக்காவின் முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற 'எம்/டி ஹஸ்னா' என்ற ஈரானியக் காலி எண்ணெய்க் கப்பலை ஓமன் வளைகுடாவில் அமெரிக்க ராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட கப்பல்களைத் தாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, 'சைகோன்' என்ற சரக்குக் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பாக வெளியேறி, ஓமன் தலைநகர் மஸ்கட் கடற்பரப்பிற்கு அருகே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவா சின்னப்பொடி


