இறுதிப் போரின் மூலோபாயம் எனது அலுவலகத்திலேயே வகுக்கப்பட்டது - முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க
பயங்கரவாத ஒழிப்பின் வெற்றிக்கு கூட்டுச் சக்தியே காரணம்
உலகமே வெல்ல முடியாது என்று கூறிய கொடூரமான பயங்கரவாத அமைப்பை இந்த நாட்டின் மண்ணிலிருந்து வேரறுத்து ஒழிப்பதுக்கு அன்றைய காலகட்டத்தில் இருந்த அரசியல், சமூக, பொருளாதாரத் தலைமைத்துவங்கள் மற்றும் ஒட்டுமொத்தப் பொதுமக்களின் கூட்டுச் சக்தியே பிரதான காரணமாக அமைந்ததுடன், கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இறுதிப் போரின் திருப்புமுனையான மனிதாபிமான நடவடிக்கைக்கான முழுமையான மூலோபாயத் திட்டமிடல்கள் அனைத்தும் எனது அலுவலகத்திலேயே வகுக்கப்பட்டன என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.
சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைமையக காரியாலயத்தில் நேற்று (18) நடைபெற்ற இராணுவ வீரர்களின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
17 வருடங்களுக்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட கொடூர பயங்கரவாதத்தை வேரோடு ஒழித்துக் கட்டி, இன்றுடன் பதினேழு வருடங்கள். முப்பது வருடங்களாகத் தொடர்ந்த போரில் 30 ஆயிரம் வீரர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளதுடன், 30 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் தமது உடல் உறுப்புகளைத் தியாகம் செய்துள்ளனர்.
இராணுவ வீரர்கள் மட்டும் தனியாக இந்த வெற்றியை ஈட்டவில்லை. அன்றைய காலகட்டத்தில் இருந்த அரசியல் தலைமைத்துவம், சமூகத் தலைமைத்துவம், பொருளாதாரத் துறையைச் சார்ந்த தலைவர்கள், ஒட்டுமொத்த நாட்டு மக்கள் மற்றும் நாட்டுக்கு வெளியே வாழ்ந்து கொண்டு தாய்நாட்டை நேசித்த புலம்பெயர் மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து வழங்கிய கூட்டுச் சக்தியினாலேயே முடிந்தது.
2005ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நாட்டுக்கு ஒரு புதிய கொள்கையை முன்வைத்தது. கோட்டாபய ராஜபக்ஷவின் வழிநடத்தலின் கீழ் அன்றைய முப்படைத் தளபதிகளான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் வசந்த கரன்னாகொட, எயார் போர்ஸ் மார்ஷல் ரொஷான் குணதிலக ஆகியோருடன் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையின் தலைவர்கள் ஒன்றிணைந்து 'மனிதாபிமான நடவடிக்கை' எனும் கொள்கையை உருவாக்கினர்.
கிழக்கு மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த மனிதாபிமான நடவடிக்கை தொடர்பான ஆலோசனைகள் எனது அலுவலகத்திலேயே இடம்பெற்றன. இராணுவத்தின் சிரேஷ்ட தளபதிகளான பிரசன்ன சில்வா மற்றும் சாகி காலகே ஆகியோர் என்னுடன் ஒன்றிணைந்து இதற்கான திட்டங்களை வகுத்தனர். ஜெனரல் பிரசன்ன சில்வாவின் தலைமையில் வாகரைப் பகுதியும், ஜெனரல் சாகியின் தலைமையில் தொப்பிகல பகுதியும் மனிதாபிமான நடவடிக்கையினூடாக வெற்றிக் கொள்ளப்பட்டு, இறுதியாக நந்திக்கடல் வரை அந்தப் பயணம் தொடரப்பட்டு முழுமையான வெற்றி எட்டப்பட்டது.
2009ஆம் ஆண்டின் வெற்றிற்குப் பின்னர், அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய, பொருளாதாரப் பிரச்சினைகளற்ற, அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை கொண்ட ஒரு அழகான இலங்கையையே எதிர்பார்த்தோம். ஆனால், ஒரு இராணுவ வீரனாக இன்று நாட்டில் அரசியல் ரீதியான ஒற்றுமையோ அல்லது எதிர்காலத்தை நோக்கிய தொலைநோக்குப் பார்வையோ இல்லாத நிலையைத் தான் காண முடிகின்றது. இதனால் நாம் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளோம்.
இந்த யுத்தம் வெற்றியை நோக்கி நகர்வதற்கு முன்னர், திலித் ஜயவீர மற்றும் வருணி ஆகியோர் எமது 'அபி வெனுவென் அபி' கொள்கையினூடாக எமக்குத் தேவையான அனைத்துப் பிரச்சாரங்களையும் ஊடக ஆதரவுகளையும் வழங்கிச் சிவில் சமூகத்தை இராணுவத்துடன் ஒன்றிணைக்கப் பெரும் பங்காற்றினர். இத்தகைய அர்ப்பணிப்புகளே எமக்குக் களத்தில் போரிட மாபெரும் சக்தியைத் தந்தன.
எமது அடுத்த தலைமுறைக்கு இந்த வரலாற்று வெற்றிகளைக் கொண்டு சேர்க்க வேண்டுமாயின், இராணுவ இலக்கியம் என்ற ஒன்று உருவாக்கப்பட வேண்டும். எனவே, நான் முன்னின்று 'இராணுவ இலக்கிய மன்றம்' என்ற ஒன்றை உருவாக்கிப் புத்தகங்களை எழுதி இந்த வரலாற்றைச் சமூகமயப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றார்.


