“வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவர் நியமனங்களில் நெப்போடிசம்”: அமைச்சின் அதிகாரி கூறுவதென்ன?
.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கான நியமனங்களில் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு முன்னுரிமை (நெப்போடிசம்) கொடுப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பங்களின் மகன்கள், மகள்கள் மற்றும்உறவினர்கள் வெளிநாட்டு தூதரகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களின் நியமனங்களை அமைச்சகம் மதிப்பாய்வு செய்து வருகிறது என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
உறவுமுறை நியமனங்களில் ஈடுபட்டவர்களை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளதா? அவர்களை மீள அழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? இந்த நியமனங்களில் பொது நிதி மற்றும் வளங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதை அமைச்சகம் ஒப்புக்கொள்கிறதா? இதுபோன்ற எத்தனை நபர்கள் தற்போது வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றுகின்றனர், அவர்களின் பணி என்ன? என்று கொழும்பு ஊடகம் ஒன்று வெளிவிவகார அமைச்சிடம் மின் அஞ்சல் ஊடாக கேள்வியெழுப்பியுள்ளது.
இதற்கு பதலளித்துள்ள அமைச்சின் அதிகாரி, இந்த விடயம் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இதர இராஜதந்திர முகவர்களை நியமிப்பதற்கு அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம் வெளிநாட்டு தூதரகங்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது.
இந்த அதிகாரிகள் தற்போது இலங்கை தூதரகங்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளின்படி சேவையாற்றி வருகின்றனர்.
“செப்டெம்பர் 25, 2024 அன்று தேர்தல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், தேர்தல் காலத்தில் பொது நிறுவனங்களில் உள்ள அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த விவகாரத்தில் அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்கும்” அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.