பிரித்தானியாவின் குடியேற்றத் துறை "கட்டுப்பாடற்றதாகவும், நியாயமற்றதாகவும்" மாறிவிட்டது - ஷபானா மஹ்மூத்.
இங்கிலாந்தின் குடியேற்றச் சீர்திருத்தம்: ஒரு விரிவான பார்வை.
பிரித்தானியாவின் குடியேற்றத் துறை "கட்டுப்பாடற்றதாகவும், நியாயமற்றதாகவும்" மாறிவிட்டதாகக் கூறி, அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) நவீன காலத்தின் மிக முக்கியமான சீர்திருத்தங்களை அறிவித்துள்ளார். சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், சிறிய படகுகள்மூலம் வருவோரைக் குறைக்கவும் இந்த "கடுமையான" விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதோ அந்தப் புதிய சீர்திருத்தங்களின் முக்கிய அம்சங்கள்:
1. அகதி அந்தஸ்து இனி நிரந்தரமல்ல (30 மாத கெடு)
முன்பு போல அகதி அந்தஸ்து வழங்கப்பட்டால் அது நிரந்தரமாக இருக்காது.
இனி ஒவ்வொரு 30 மாதங்களுக்கும் (2.5 ஆண்டுகள்) அந்தஸ்து மறுஆய்வு செய்யப்படும்.
ஒருவேளை அவர்கள் வந்த நாடு மீண்டும் பாதுகாப்பானதாக மாறினால் (எ.கா: இலங்கையில் நிலமை சீரானால் ), அவர்கள் மீண்டும் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்.
2. PR கிடைக்க 20 ஆண்டுகள் காத்திருப்பு
இதுவரை அகதிகள் 5 ஆண்டுகளில் நிரந்தர வதிவிட உரிமை (Permanent Residence) கோர முடிந்தது.இனி டென்மார்க் மொடலை பின்பற்றி, இந்தக் காலக்கெடு 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது. அதாவது, நிரந்தரக் குடியுரிமை கனவு அவ்வளவு எளிதில் பலிக்காது.
3. 'ஒரே ஒரு வாய்ப்பு' விதி
நீதிமன்றங்களில் வழக்குகள் குவிவதைத் தவிர்க்க, தஞ்சம் கோருவோர் (Asylum seekers) இனி ஒரே ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.அதேபோல, நிராகரிக்கப்பட்டால் ஒரே ஒரு முறை மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும்.
4. இலவசங்களுக்குத் தடை
அரசாங்கத்திடமிருந்து வரும் தானியங்கி நிதி உதவி (Financial Aid) நிறுத்தப்படும்.வேலை செய்யத் தகுதியிருந்தும் வேலைக்குச் செல்லாதவர்களுக்கும், சொந்தமாகச் சொத்து அல்லது வருமானம் இருப்பவர்களுக்கும் இனி அரசு உதவித்தொகை கிடைக்காது. அவர்கள் தங்கள் செலவை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.
5. விசா கெடுபிடிகள்
பிரிட்டனில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களைத் திரும்பப் பெற ஒத்துழைக்காத நாடுகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்படும்.குறிப்பாக அங்கோலா, நமீபியா மற்றும் கொங்கோ (DRC) ஆகிய நாடுகளுக்கு நிலைமையைச் சரிசெய்ய ஒரு மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
6. குடும்ப உறவு வரையறை மாற்றம்
மனித உரிமைகள் சட்டத்தில் மாற்றம் செய்து, "குடும்பம்" என்பதன் வரையறையைச் சுருக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இனி பெற்றோர் மற்றும் குழந்தைகளைத் தவிர மற்ற உறவினர்களைக் குடும்பமாகக் காட்டி விசா பெறுவது கடினமாகும்.
2025 ஜனவரி முதல் இதுவரை 39,292 பேர் சிறிய படகுகள்மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்துள்ளனர்.
புகலிடக் கோரிக்கைகள் கடந்த ஆண்டைவிட 18% அதிகரித்துள்ளன.
இந்தக் கட்டுப்பாடற்ற குடியேற்றம் வலது சாரி அமைப்புகளின் (Far-right) வளர்ச்சிக்கு வழிவகுப்பதாகத் தொழிற்கட்சி (Labour Party) அரசு அஞ்சுகிறது.
இந்த அறிவிப்புக்குக் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. "இது மிகவும் கடுமையானது மற்றும் தேவையற்றது" என்று அகதிகள் நல அமைப்புகள் விமர்சித்துள்ளன. அதேவேளை, எதிர்க்கட்சியினர் மற்றும் வலது சாரித் தலைவரான நைஜல் ஃபாரேஜ் (Nigel Farage) போன்றோர், "இது ஒரு நல்ல தொடக்கம், ஆனால் போதாது" எனக் கூறியுள்ளனர்.


