ஊடகங்கள் ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தங்களை நேரடியாகப் போதிப்பதில்லை! மாறாக, அவற்றை "பொதுப்புத்தி" போலவும், "இயல்பானவை" போலவும் சித்தரிக்கின்றன.
ஊடகங்கள் நம்மை வன்முறையால் கட்டுப்படுத்துவதில்லை, மாறாக நமது சம்மதத்துடனேயே, நமது சிந்தனைகளை வடிவமைப்பதன் மூலமே நம்மை ஆள்கிறது.
ஊடகங்கள் ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தங்களை நேரடியாகப் போதிப்பதில்லை. மாறாக, அவற்றை "பொதுப்புத்தி" (Common Sense) போலவும், "இயல்பானவை" போலவும் சித்தரிக்கின்றன.
முதலாளித்துவ அமைப்பே மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு ஒரே வழி என்பது போன்ற ஒரு கருத்தை, வெற்றிகரமான தொழிலதிபர்களின் கதைகள், பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள்பற்றிய தினசரி செய்திகள், நுகர்வுக் கலாச்சாரத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் நம் மனதில் இயல்பாகப் பதிய வைக்கின்றன. இதனால், மாற்றுப் பொருளாதாரச் சிந்தனைகள் விசித்திரமானவையாகவும், நடைமுறைக்கு ஒவ்வாதவையாகவும் நமக்குத் தோன்றுகின்றன.
சம்மதத்தை உற்பத்தி செய்தல் (Manufacturing Consent): அரசின் கொள்கைகளையோ, பெருநிறுவனங்களின் நடவடிக்கைகளையோ மக்கள் கேள்வி கேட்காமல் இருக்க, ஊடகங்கள் அவர்களின் சம்மதத்தை உற்பத்தி செய்கின்றன. ஒரு தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்போது, அதைவிட அந்தத் தொழிற்சாலையால் கிடைக்கும் "வேலைவாய்ப்பு" மற்றும் "நாட்டின் வளர்ச்சி" பற்றிய சித்திரத்தையே ஊடகங்கள் பெரிதுபடுத்திக் காட்டும். இதன்மூலம், மக்கள் தங்களுக்கு எதிராக நிகழும் சுரண்டலை, நாட்டின் வளர்ச்சிக்காகச் செய்யப்படும் தியாகமாக மனமுவந்து ஏற்றுக்கொள்ள வைக்கப்படுகிறார்கள்.
பிரச்சனைகளைத் தனிநபர் மயமாக்குதல்: வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, கல்வி ஏற்றத்தாழ்வு போன்ற சமூக அமைப்பு சார்ந்த பிரச்சனைகளை, ஊடகங்கள் பெரும்பாலும் தனிநபர்களின் பிரச்சனைகளாகச் சித்தரிக்கின்றன. "திறமையில்லாததால் வேலை கிடைக்கவில்லை", "சோம்பேறியாக இருப்பதால் வறுமையில் வாடுகிறான்" என்பது போன்ற சித்தரிப்புகள், அமைப்பின் மீதான கோபத்தைத் தனிநபர்கள்மீது திருப்பிவிடுகின்றன. நாம் அமைப்பை எதிர்த்துக் கேள்வி கேட்காமல், நம்மையே நொந்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
பிரெஞ்சு தத்துவதியான அல்தூசர், "இடைமறித்துக் கூப்பிடுதல்" (Interpellation) என்ற ஒரு சுவாரசியமான கருத்தை முன்வைக்கிறார். ஒரு காவலர் தெருவில் போகும் ஒருவரைப் பார்த்து, "ஏய், நில் அங்கே!" என்று கூப்பிடும்போது, அந்த நபர் திரும்பிப் பார்க்கிறார். அந்த நொடியில், அவர் தன்னை அந்தக் காவலரின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு குடிமகனாக உணர்கிறார்.
இதேபோலத்தான் கருத்தியலும் நம்மை ஒவ்வொரு நொடியும் கூப்பிடுகிறது. ஒரு விளம்பரத்தைப் பார்த்து, 'இந்தக் காரை வாங்கினால் நான் ஒரு வெற்றிகரமான மனிதனாக மதிக்கப்படுவேன்' என்று நீங்கள் நினைக்கும்போது, நுகர்வுக் கலாச்சாரத்தின் கருத்தியல் உங்களைக் கூப்பிடுகிறது, நீங்களும் அதற்குப் பதிலளிக்கிறீர்கள். ஒரு திரைப்படத்தின் நாயகன் நாட்டுப்பற்றுடன் பேசும் வசனத்தைக் கேட்டு நீங்கள் கைதட்டும்போது தேசியவாதக் கருத்தியல் உங்களை ஈர்க்கிறது.
ஊடகங்கள் இரவு பகலாக நம்மை இப்படிக் கூப்பிட்டுக்கொண்டே இருக்கின்றன. அவை நம்மை ஒரு "நல்ல குடிமகனாக", "திறமையான ஊழியனாக", "அர்ப்பணிப்புள்ள குடும்பத்தலைவனாக/வியாக" தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அழைக்கின்றன. இந்த அழைப்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், நாம் அந்தச் சமூகக் கட்டமைப்பிற்குள் நமக்கான இடத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறோம்; அந்த அமைப்பை நிலைநிறுத்தும், கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளை நாமே விரும்பி மாட்டிக்கொள்கிறோம்.
லூயி அல்தூசரின் பார்வை நமக்கு உணர்த்துவது என்னவென்றால், ஊடகம் ஒருபோதும் ஒரு சுதந்திரமான, நடுநிலையான அமைப்பு அல்ல. அது ஆளும் வர்க்கத்தின் கருத்தியல்களைப் பரப்பி, சமூகத்தின் அதிகாரக் கட்டமைப்பை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்யும் ஒரு மிக முக்கிய கருவி. அது நம்மை வன்முறையால் கட்டுப்படுத்துவதில்லை, மாறாக நமது சம்மதத்துடனேயே, நமது சிந்தனைகளை வடிவமைப்பதன் மூலமே நம்மை ஆள்கிறது.
- சிவா சின்னப்பொடி


