ஈஸ்டர் தாக்குதல் வழக்கு; கோத்தாபய கைதாவார்- முன்னாள் அமைச்சர் கம்மன்பில ஆருடம்
,

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் என்ற அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஆகியோரை கைதுசெய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
சுவிற்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்துவரவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அசாத் மௌலானாவுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை அங்கு நீக்கப்பட்டுள்ளது.
அசாத் மௌலானாவுக்கு எதிராக முறைப்பாடளிக்க பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அழுத்தம் பிரயோகித்தார் என்று முறைப்பாட்டை வழங்குமாறு அசாத் மௌலானாவின் மனைவிக்கு சாய்ந்தமருது பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதன் பின்னணியில் உள்ள நடவடிக்கை என்ன என்பதை அரசாங்கம் வெளிப்படையுடன் பகிரங்கப்படுத்த வேண்டும் - என்றார்.