சாதி, வேதம், ஆரியர் வருகை, தொல் திராவிட மொழி – ‘சிந்து நாகரிகம்’ பற்றிய புதிய ஆய்வு நூல் கூறுவது என்ன?
.
பிரிட்டிஷாரைப் போலவே, முகலாயர்களைப் போலவே, வேதங்களை இயற்றிய ஆரியர்களும் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்தவர்கள்தான்
சிந்துச் சமவெளி நாகரிகம் குறித்த சமீபத்திய புத்தகமான அஹிம்சா (Ahimsa), அந்த நாகரிகம் வணிகத்தை மையப்படுத்திய, வன்முறையை நாடாத ஒரு சமூகமாக இருக்கலாம் என்கிறது. வேறு பல சுவாரஸ்யமான தகவல்களையும் கருத்தாக்கங்களையும் இந்தப் புத்தகம் முன்வைக்கிறது.
அது 4,500 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர்கள் பிரமிடுகளைக் கட்டிக்கொண்டிருந்த காலகட்டம். அவர்கள் ‘லாபிஸ் லாஸுலி’ எனப்படும் நீல நிற கற்களை வாங்கிக் குவித்தார்கள். இந்தக் கற்கள், அந்த காலகட்டத்தில் தற்போதைய ஆஃப்கானிஸ்தானில் மட்டுமே கிடைத்தன.
அங்கிருந்து தோண்டியெடுக்கப்பட்ட இந்தக் கற்கள் ஐயாயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து பெர்ஷிய வளைகுடா வழியாக, எகிப்தையும் மெசபடோமியாவின் கோவில்களையும் சென்றடைந்ததற்கு ஒரே காரணம்தான் இருந்தது. அது ஹரப்பா நாகரிகம்.
பல்வேறு சிறு சிறு நகரங்களை உள்ளடக்கியிருந்த ஹரப்பா நாகரிகத்தால் இதை எப்படி சாதிக்க முடிந்தது?
அதற்குக் காரணம், அந்த நாகரிகம் போர்ப் படை தளபதிகளாலோ, மன்னர்களாலோ வழிநடத்தப்பட்ட ஒரு சமூகமல்ல; மாறாக செல்வச் செழிப்பை வெளிக்காட்டாத, கட்டுப்பாடான வர்த்தகர்களால் வழிநடத்தப்பட்ட ஒரு சமூகம் என்கிறது சமீபத்தில் வெளிவந்த ‘Ahimsa: 100 Reflections on the Harappan Civilization புத்தகம்.’
இந்த நூலை எழுதியவர் தேவ்தத் பட்நாயக். இந்தியாவில் புராணங்களில் ஆர்வமுடைய வாசகர்கள் அனைவருக்கும் ஏற்கனவே நன்கு அறிமுகமான எழுத்தாளரான தேவ்தத் இதற்கு முன்பாக இந்துத் தொன்மங்கள் குறித்த பல நூல்களை எழுதியவர்.
தேவ்தத் பட்நாயக்கைப் பொருத்தவரை, ஹரப்பா நாகரிகம் என்பது தனித்துவமிக்க, தொழில்சார்ந்த, வன்முறையை நாடாத ஒரு சமூகம். அதன் காரணமாகவே இந்தப் புத்தகத்திற்கு Ahimsa எனப் பெயர் சூட்டியிருக்கிறார் அவர்.
தேவ்தத் பட்நாயக்கைப் பொறுத்தவரை, ஹரப்பா நாகரிகம்என்பது தனித்துவமிக்க, தொழில்சார்ந்த, வன்முறையை நாடாத ஒரு சமூகம்
ஹரப்பா நாகரிகம்: இந்திய வரலாற்றைப் புரட்டிப்போட்ட கண்டுபிடிப்பு
ஹரப்பா நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது இந்திய வரலாற்றின் துவக்கத்தை மாற்றிப்போட்டது எப்படி? என சுவாரஸ்யமாக சொல்வதிலிருந்து புத்தகம் துவங்குகிறது. பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்பாக, “பாரதம் அல்லது ஜம்புதீபம் என்ற இந்த நாட்டில் ஏழு நதிகள் ஓடின. மனு வழியில் வந்த முனிவர்களும் அரசர்களும்தான் இந்த நாட்டை காலம்காலமாக ஆட்சி செய்தனர். அவர்கள் சமஸ்கிருதம் பேசியதோடு, சனாதனத்தையும் வேதங்களில் கூறப்பட்ட வர்ணாசிரமத்தையும் பின்பற்றினர்.
இந்தியா மீது படையெடுத்த யவனர்கள் (வெளிநாட்டவர்கள்), இஸ்லாத்தை இங்கே பரப்பியதோடு கோவில்களை இடித்து, மசூதிகளைக் கட்டினர். சமஸ்கிருதத்திற்குப் பதிலாக பாரசீக மொழியைப் பரப்பினர்” என்று நம்பப்பட்டது.
பிரிட்டிஷாரின் வருகையில் இந்த வரலாற்றுப் பார்வை சற்று மாறியது. ஏசியாட்டிக் சொசைட்டியும் இந்தியத் தொல்லியல் கழகமும் (ASI) நிறுவப்பட்டன. ஏசியாடிக் சொசைட்டி பழங்கால இந்திய எழுத்துகளை மொழிபெயர்க்க ஆரம்பித்தது. இந்தியத் தொல்லியல் கழகம், அகழ்வாராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தது. இந்தியாவின் வரலாறு மெல்லமெல்ல ஆழத்திலிருந்து மேலெழ ஆரம்பித்தது என்கிறார் தேவ்தத் பட்நாயக்.
அதே நேரத்தில் மொழியியலில் நடந்த ஆய்வுகளில், சமஸ்கிருதத்திற்கும் லத்தீன் மொழிக்கும் இருக்கும் தொடர்பு கண்டறியப்பட்டு இந்தோ – ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்ற புரிதல் உண்டானது. மேலும், விந்திய மலைகளுக்குத் தெற்கே, திராவிட மொழிக் குடும்பம் போன்ற புதிய மொழிக் குடும்பங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டதால், சமஸ்கிருதம் ஒன்றும் இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளின் தாய் அல்ல என்பதும் புரிந்தது.
பாலி மொழியில் இருந்த எழுத்துகளை மொழிபெயர்த்தபோது, புத்தர், அசோகர் போன்றோர் வாழ்ந்தது தெரியவந்தது. பௌத்த ஸ்தூபிகள், மௌரிய கல்வெட்டுகள் வெளிவந்தன. இந்தக் கட்டத்தில் 2,300 ஆண்டுகளுக்கு முன்பாக அலெக்ஸாண்டர் படையெடுத்ததில் இருந்துதான் நவீன இந்திய வரலாறு துவங்குகிறது என்ற புரிதல் உருவானது.
1924ல் சிந்துச் சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்து அறிவித்தார் ஜான் மார்ஷல்
இந்த காலகட்டத்தில், அதாவது 1924-இல் சிந்துச் சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்து அறிவித்தார் ஜான் மார்ஷல். சுமேரிய நாகரிகத்தோடு இருந்த சில ஒற்றுமைகள் காரணமாக, இதன் காலகட்டம் சுமார் 4,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று முடிவானது. ஆகவே, இந்தியாவின் வரலாறு 4,500 அல்லது 5,000 ஆண்டுகளுக்கு முன்பு துவங்குகிறது என்பது உறுதியானது.
இந்த நிலையில், வேதங்களையும் ஹரப்பா சிதைவுகளையும் வைத்து பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் ஒரு கருத்தை முன்வைத்தனர். அதாவது “சமஸ்கிருதம் பேசிய வேத கால மக்கள், திராவிட மொழி பேசக்கூடிய ஹரப்பர்களை ஒடுக்கினார்கள். அப்படித்தான் ஜாதி உருவானது” என்றார்கள். இது ஒரு மிக பிரபலமான கருதுகோள். ஆனால், இதில் ஒரு பிரச்னை இருந்தது. அதாவது வேத காலத்திற்கும் ஹரப்பா நாகரிகம் முடிவுக்கு வந்ததற்கும் இடையில் சுமார் 500 வருட இடைவெளி இருந்தது.
ஆகவே, தாமிர காலத்தைச் சேர்ந்த ஹரப்பா நாகரிகம் கி.மு. 2500லிருந்து 2000வது ஆண்டுவரை செழித்திருந்தது என்பதும் சுமேரியாவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்தது என்பதும் உறுதி. அந்த நாகரிகம் அழிந்து போனதற்கு காலநிலை மாற்றம், ஆறுகள் இடம் மாறியது, பருவமழையில் ஏற்பட்ட மாற்றம், புதிய வணிகப் பாதைகள் கண்டறியப்பட்டது, சுமேரியாவில் தேவை குறைந்தது போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
ஆகவே ஆரியர்கள் படையெடுப்பால் ஹரப்பா நாகரிகம் அழியவில்லை. ஹரப்பா நாகரிகத்தின் அழிவிற்கு சில நூற்றாண்டுகளுக்குப் பிறகே, ஆரியர் வருகை நிகழ்ந்தது. இவர்கள் குறுக்குக் கம்பிகளுடன் கூடிய சக்கரங்களையும் குதிரைகளையும் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தினார்கள். ஆகவே, பிரிட்டிஷாரைப் போலவே, முகலாயர்களைப் போலவே, வேதங்களை இயற்றிய ஆரியர்களும் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்தவர்கள்தான் என்கிறார் தேவ்தத் பட்நாயக்.
இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டவுடனேயே, “இது இந்து நாகரிகத்தை மறைக்கும் சதி” என கூச்சல் எழுந்தது. “ஆரியர்கள் இந்தியர்கள். அவர்கள்தான் ஹரப்பா நாகரிகத்தை உருவாக்கினார்கள். அதன் வேத அடித்தளத்தை நிறுவும் வகையில் அதனை சரஸ்வதி நாகரிகம் என்றே அழைக்க வேண்டும். இந்த நாகரிகம் முஸ்லிம்களின் பாகிஸ்தானில் உள்ள மெஹ்ர்கரில் தோற்றம்பெறவில்லை. மாறாக, இந்தியாவில் உள்ள ராக்கிகடியில்தான் தோற்றம்பெற்றது. சித்திர எழுத்துகள் என்பவை உண்மையில் யந்திரங்கள். ஹரப்பர்கள் சைவ உணவையே உண்டனர்” என்பது இவர்களது கருத்து.
மொழிகளை அறிவியல் ரீதியாகப் படிப்பது, பொருட்களின் பழமையை ஆய்வு செய்வது போன்றவற்றில் ஐரோப்பியர்கள் முதலில் ஈடுபட்டதற்குக் காரணம், “பைபிளை உண்மை என்று நிறுவுவதற்காகத்தான். உலகம் கி.மு. 4004ல்தான் தோன்றியது என நிரூபிப்பதற்காகத்தான்.” ஆனால், விரைவிலேயே வேதங்கள் அதைவிடப் பழமையானவை எனத் தெரிந்தது. ஹரப்பா நாகரிகம் இவை இரண்டையும்விட பழமையானது, ஹரப்பாவைவிட பழமையானது சுமேரிய நாகரிகம்.
ஹரப்பா நாகரிகம் என்பது தனித்த ஒன்றல்ல. கி.மு. 3000லிருந்து கி.மு. 1200 வரை நிலவிய மிகப் பெரிய வர்த்தக நடவடிக்கையின் ஒரு பகுதி.
ஹரப்பா: துறவிகள் – வர்த்தகர்களால் கட்டுப்படுத்தப்பட்ட நாகரிகம்
பிரிட்டிஷ் அகழ்வாராய்ச்சியாளர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் கடந்த காலத்தை படையெடுப்புகளின் பார்வையிலேயே பார்த்தார்கள். ஹரப்பா நாகரிகத்தை துறவிகளால் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நாகரிகமாக பார்க்க இயலவில்லை. விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருவாயை வைத்து, கோவில்களை அடிப்படையாகக் கொண்ட இந்து மதம் உருவாவதற்கு முன்பாக, இந்தியாவின் வளம் என்பது வர்த்தகத்திலிருந்துதான் வந்தது என்கிறார் தேவ்தத் பட்நாயக்.
ஹரப்பா நாகரிகம் என்பது தனித்த ஒன்றல்ல. கி.மு. 3000லிருந்து கி.மு. 1200 வரை நிலவிய மிகப் பெரிய வர்த்தக நடவடிக்கையின் ஒரு பகுதி. கி.மு. 2500லிருந்து கி.மு. 2000வரை சுமார் 500 ஆண்டுகள் இந்த நாகரிகம் உச்சத்தில் இருந்தது. இந்த காலகட்டத்தில், லாபிஸ் லாஸுலி எனப்படும் அரிய நீலக்கற்களும் வெள்ளீயமும் இங்கே மட்டுமே கிடைத்தன.
இந்த பொருட்கள் தற்போதைய ஆஃப்கானிஸ்தான் பகுதியில் எடுக்கப்பட்டு, சிந்து நதிக் கரையில் மேம்படுத்தப்பட்டன. இவை குஜராத்திலிருந்து படகு மூலம் மக்ரானுக்கும் (பலூசிஸ்தான்) பிறகு அங்கிருந்து தில்மன் (பஹ்ரைன்), சுமேரியா (ஈராக்), பிறகு எகிப்திற்கும் கொண்டுசெல்லப்பட்டன. இந்தப் பொருட்களுக்குப் பதிலாக வெள்ளியும் தங்கமும் பெற்றுக்கொள்ளப்பட்டன.
அந்தக் காலகட்டத்தில் தங்கத்தைப் போலவே லாபிஸ் லாஸுலிக்கும் மதிப்பிருந்தது. அந்தக் கற்கள் புனிதமானவையாகக் கருதப்பட்டு மெஸபடோமியா, எகிப்து, அனடோலியாவில் இருந்த கோவில்களில் பயன்படுத்தப்பட்டன.
பிற்காலத்தில் ஐரோப்பிய கிழக்கிந்தியக் கம்பனிகள் செய்ததுபோல, சந்தைகளை வசப்படுத்த ஹரப்பா வர்த்தகர்கள் ஒருபோதும் படைபலத்தைப் பயன்படுத்தவில்லை. வன்முறைக்கு எதிரான முதல் கலைப்படைப்பை இவர்களே உருவாக்கியவர்களாக இருக்கலாம் என்று கூறும் தேவ்தத் பட்நாயக், அதற்குச் சில உதாரணங்களைச் சொல்கிறார்.
சிந்துவில் உள்ள மொஹஞ்சதாரோவில் கிடைத்த, 478 B என இலக்கமிடப்பட்ட முத்திரை ஒன்று இருக்கிறது. அதில் மரத்தை வைத்துக்கொண்டு சண்டையிடும் இரண்டு ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் நிற்பதைப் போல வரையப்பட்டிருக்கிறது. அந்த இரு ஆண்களையும் அந்தப் பெண் பிரிப்பதைப் போல அந்த சித்திரம் இருக்கிறது.
ராஜஸ்தானில் உள்ள காலிபங்கனில் உருளை வடிவ முத்திரை ஒன்று கிடைத்தது. அதில் வேல்களால் ஒருவரை ஒருவர் குத்திச்சாய்க்க முயலும் இரு ஆண்கள் ஒரு பெண்ணை பிடித்திருக்கிறார்கள்.
இந்த இரண்டையும் பார்த்த தொல்லியலாளர்கள், ஒரு பெண்ணுக்காக இரு ஆண்கள் சண்டையிடுகிறார்கள் என்ற முடிவுக்கே வந்தார்கள். ஆனால், இதற்கு வேறு விதமான விளக்கங்கள் இருக்கக்கூடும் என்கிறார் தேவ்தத் பட்நாயக். இந்தச் சித்திரங்களில் உள்ள பெண், இரு ஆண்களின் சண்டையை விலக்கும் பெண்ணாக, யோசிக்கச் சொல்லும் பெண்ணாக நமக்கு ஏன் தோன்றுவதில்லை எனக் கேள்வியெழுப்புகிறார் தேவ்தத்.
இரு ஆண்களை ஒரு பெண் பிரிப்பதைப்போல இருக்கும் சித்திரம்
ஹரப்பா நகரங்களுக்குள் யுத்தம் நடந்ததாக எவ்வித ஆதாரமும் கிடைக்காத நிலையிலும், ஒப்பீட்டு அளவில் அந்த நாகரிகம், ஒரு அமைதியான நாகரிகமாக இருந்திருக்கலாம் என்பதில் தொல்லியலாளர்களுக்கு முழு நம்பிக்கை இல்லை. சில அரசியல் கட்டுப்பாடுகளுக்காகவும் தங்களுடைய விலை மதிக்க முடியாத பொருட்களை காக்கவும் சிறிய அளவில் வன்முறை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், எகிப்திலோ, மெஸபடோமியாவிலோ இருந்த வன்முறையோடு ஒப்பிட்டால், இங்கிருந்த வன்முறை ஒன்றுமேயில்லை என்றது இந்தப் புத்தகம்.
வன்முறை இல்லாவிட்டால், இவ்வளவு பெரிய பரப்பில் இத்தனை ஆண்டுகாலமாக ஒரு நாகரிகம் நிலைத்திருந்தது எப்படி? அது எப்படி நடந்திருக்கலாம் என ஒரு யூகத்தை முன்வைக்கிறார் தேவ்தத்.
அதாவது, “ஹரப்பாவில் இருந்த சமூகம், வர்த்தகமும் துறவும் இணைந்த ஒரு சமூகமாக இருந்திருக்கலாம். வர்த்தக வெற்றி, செல்வம் இவற்றின் மூலம் அதிகாரம் கிடைக்கும் அதே நேரத்தில், அவற்றைத் துறப்பதன் மூலமாக தார்மீக அதிகாரம் அந்த சமூகத்தில் கிடைத்திருக்கலாம். ஒட்டுமொத்த நாகரிகமும் துறவிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். இந்தத் துறவிகள், வர்த்தகப் பின்னணியில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம். இவர்கள் வன்முறையை நாடாத, சமூக ரீதியான கட்டுப்பாடுகளில் சிக்காதவர்களாக இருந்திருக்கலாம்” என்கிறார் தேவ்தத்.
சுமேரிய நாகரிகத்திலும் எகிப்திய நாகரிகத்திலும் செல்வத்தைக் குவிப்பதன் மூலமாக அதிகாரம் கிடைத்தது. ஹரப்பாவில், அவற்றைத் துறப்பதன் மூலம் ஒரு அதிகாரம் கிடைத்திருக்கலாம். இதன் காரணமாகவே மற்ற நாகரிகங்களில் இருந்ததைப் போன்ற அச்சுறுத்தும் வகையிலான மிகப் பெரிய கட்டடங்கள், அரண்மனைகள், கல்லறைகள் ஹரப்பாவில் இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார் தேவ்தத்.
இங்கு அதிகாரம் பொருந்தியவர்களாக இருந்த துறவிகளை, ஒற்றைக் கொம்புள்ள ஒரு மிருகத்தின் மூலம் குறித்திருக்கலாம். அதன் காரணமாகவே, ஹரப்பா நகரங்களில் கிடைத்த 2,000 முத்திரைகளில் 80 சதவீத முத்திரைகளில் இந்த மிருகங்கள் இருக்கின்றன. ஹரப்பாவில் பல பிரிவினர் இருந்தாலும், அவர்கள் யாரையும் குறிக்காத, அந்த நாகரிகத்தைக் கட்டுப்படுத்திய பொதுவான துறவிகளின் முத்திரையாக இது இருக்கலாம் என்கிறார் தேவ்தத் பட்நாயக்.
ஆனால், தான் சொல்வதை முழு உண்மையாகக் கருத முடியாது என்றும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் கிரேக்கத்தின் வன்முறைமிக்க கதாநாயகர்கள், பைபிளில் சொல்லப்படுவது போன்ற இறைதூதர்களை மனதில் வைத்து வரலாற்றைப் படிக்கும் நிலையில், ஜைன, பௌத்த, இந்து மரபிலிருந்து தான் இந்தச் சின்னங்களைப் படித்ததாகக் குறிப்பிடுகிறார் தேவ்தத்.
ஹரப்பா நகரங்களில் கிடைத்த 2,000 முத்திரைகளில் 80 சதவீத முத்திரைகளில் இந்த மிருகங்கள் இருக்கின்றன
ஹரப்பாவில் உள்ள ஸ்வஸ்திகா முத்திரை சொல்வது என்ன?
ஹரப்பாவில் காதல் சார்ந்த சித்திரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஹரப்பா மக்கள் வண்ணமயமான ஆடைகளை, நகைகளை விரும்பினார்கள். வாசனை திரவியங்களையும் பயன்படுத்தினார்கள். விளையாட்டு, இசை போன்றவை அவர்களுக்குப் பிடித்திருந்தன. இருந்தபோதும் பாலியல், காதல் போன்றவற்றை தங்கள் கலைகளில் அவர்கள் வெளிப்படுத்தவில்லை.
பல பழைய கலாசாரங்களில், ஆகாயத்தின் வடபகுதியில் தெரியும் பிரபலமான ஏழு நட்சத்திரத் தொகுப்பின் சுழற்சியை அறிந்திருந்தனர். ஹரப்பர்களும் அதனை அறிந்திருந்தனர். இந்த நட்சத்திரங்கள் சப்தரிஷி மண்டலமாகவும் இதன் சுழற்சியின் வடிவம், ஸ்வஸ்திகாவாகவும் வேதங்களில் குறிப்பிடப்படுகிறது. ஹரப்பா முத்திரைகளிலும் இந்த ஸ்வஸ்திகா சின்னம் காணப்படுகிறது. ஆனால், இதன் பொருள் இன்னமும் புரியவில்லை.
வானத்தை 27 பகுதிகளாக பிரிப்பது வேதங்களில் இருக்கிறது. பௌர்ணமிக்கு அருகில் எந்த நட்சத்திரம் இருக்கிறதோ, அந்த நட்சத்திரங்களின் பெயர்கள் இந்து மாதங்களுக்குச் சூட்டப்பட்டன. இப்படி மாதங்களுக்கு பெயர் சூட்டும் வகையிலான நட்சத்திர அமைப்பு கி.மு. 3,000வாக்கில் இருந்திருக்கலாம் என்கிறார்கள் வானியலாளர்கள்.
அந்த காலகட்டத்தில் வேதங்கள் உருவாகவில்லை. ஆகவே ஹரப்பர்கள்தான், பிற்காலத்தில் இங்கு வந்த ஆரியர்களுக்கு வானத்தை நட்சத்திரங்களின் அடிப்படையில் பிரிக்கும் முறையைச் சொல்லியிருக்க வேண்டும் என்கிறார் தேவ்தத் பட்நாயக்.
திராவிட மொழிகளில் மீன் என்பது மீனையும் விண்மீனையும் குறிப்பதைப்போலவே ஹரப்பாவில் பேசப்பட்ட மொழியிலும் இருந்திருக்கலாம் என்கிறார்கள் சில அறிஞர்கள்
மீன்கள்: ஹரப்பாவுக்கும் திராவிட மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமை
மொழி ரீதியான மற்றொரு முக்கியமான விஷயத்தை சொல்கிறார் தேவ்தத். ஹரப்பாவில் கிடைத்த பானைகளில் நிறைய நட்சத்திரங்கள் இருக்கின்றன. மீன்களின் உடல்களிலும் நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. திராவிட மொழிகளில் மீன் என்பது மீனையும் விண்மீனையும் குறிப்பதைப் போலவே ஹரப்பாவில் பேசப்பட்ட மொழியிலும் இருந்திருக்கலாம் என்கிறார்கள் சில அறிஞர்கள். ஆகவே ஹரப்பாவின் சித்திரங்களில் மீன்களாகக் குறிக்கப்பட்டிருப்பவை விண்மீன்களையே குறிப்பிடலாம் என்கிறார் தேவ்தத்.
ஹரப்பா நாகரிகத்தை சிந்து – சரஸ்வதி நாகரிகம் என பலர் அழைக்கின்றனர். இவர்களைப் பொருத்தவரை தற்போது பாகிஸ்தானிலும் இந்தியாவின் ஹரியானாவிலும் பாயும் கக்கர் – ஹக்ரா நதியே, ஹரப்பா நாகரிக காலத்தில் சரஸ்வதி நதியாக ஓடியது என்கிறார்கள். ரிக் வேதத்தில் சரஸ்வதி என்ற நதி ஐம்பது இடங்களில் குறிப்பிடப்படுகிறது.
இப்போதும் தரைக்கு அடியில் இந்த சரஸ்வதி நதி ஓடுவதாகவும், திரிவேணி சங்கமத்தில் கங்கை – யமுனையுடன் சங்கமிப்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். ஆகவே, ஹரப்பா நாகரிகத்தை வேதகால நாகரிகம் என குறிப்பிட வேண்டும் என்கிறார்கள் இவர்கள். ஆனால், காலவரிசை இந்தக் கருத்துக்குப் பொருத்தமாக இல்லை. ஹரப்பா நாகரிகம் கி.மு. 2,000வது ஆண்டுக்கு முன்பு செழிப்பாக இருந்த நாகரிகம். வேதப் பாடல்கள் கி.மு. 1,000வது ஆண்டில்தான் இயற்றப்பட்டன.
வெண்ணையை நெய்யாக மாற்றும் உத்தி இங்கேதான் உருவாகியிருக்க வேண்டும் என்கிறார் தேவ்தத்
ஹரப்பாவாசிகளுக்கு பால் பிடிக்காதா?
ஹரப்பா நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் பல விஷயங்களைக் கண்டுபிடித்ததாகக் குறிப்பிடுகிறார் தேவ்தத். பருத்தி ஆடைகள், நல்லெண்ணெய், தைப்பதற்கான ஊசி, செங்கல் செய்வதற்கான அச்சு, மழை நீர் சேகரிப்பு, பொதுவான குளியல் இடங்கள், மையப்படுத்தப்பட்ட வடிகால் வசதிகள், பொது இடத்தில் குப்பைத் தொட்டிகள், திறந்தவெளி அரங்குகள், தங்கத்திற்கான உரைகல், சிலைகளைச் செய்வதற்கான மெழுகு அச்சு, மசாலா பொருட்கள், தந்தத்தால் ஆன பொருட்கள், சேவல் சண்டை, தாயம் போன்றவை ஹரப்பா நாகரிக காலத்தில்தான் உருவாயின என்கிறார் அவர்.
மற்றொரு சுவாரஸ்யமான தகவலையும் சொல்கிறார் தேவ்தத். ஆரியர்களின் மரபணுக்களைக் கொண்டவர்களைத் தவிர, உலகின் பெரும்பான்மையானவர்கள் மாட்டின் பாலை, பாலாகவே அருந்த இயலாதவர்கள் (lactose intolerant). ஹரப்பாவில் வாழ்ந்தவர்களும் அப்படித்தான். ஆகவே, அவர்களை பாலை உறையூற்றி, தயிர், மோர், வெண்ணெய், நெய் என்ற வடிவிலேயே பயன்படுத்தினார்கள் என்கிறார் அவர். வெண்ணையை நெய்யாக மாற்றும் உத்தி இங்கேதான் உருவாகியிருக்க வேண்டும் என்கிறார் அவர்.
மெஸபடோமியாவில் ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகளும் பொருட்களும் கிடைக்கின்றன. ஆனால், பரந்த சிந்துவெளி பகுதியில் மெஸபடோமிய முத்திரைகளோ, பொருட்களோ கிடைக்கவில்லை. ஹரப்பா நாகரிகத்திற்கு உள்ளேயே தேவையான பொருட்கள் கிடைத்ததால், அப்பகுதியில் கிடைக்காத பொருட்களை மட்டுமே அவர்கள் இறக்குமதி செய்தனர்.
சுமேரியாவுடன் நீண்ட காலத் தொடர்பு இருந்தாலும், அதன் தாக்கம் தம் மீது ஏற்படாமல் அவர்கள் பார்த்துக்கொண்டனர். சுமேரியாவில் இருந்த க்யூனிஃபார்ம் (ஆப்பெழுத்து) எழுத்தை அவர்கள் பின்பற்றவில்லை.
ஹரப்பா நாகரிகத்தின் பரப்பளவு எகிப்திய நாகரிகத்தின் பரப்பைப்போல இருபது மடங்கு பெரியது
ஹரப்பா நாகரிகம் அழிந்தது ஏன்?
ஹரப்பாவின் வாழ்வாதாரமே சுமேரியாவுடனான வர்த்தகத்தைத்தான் சார்ந்திருந்தது. சுமேரியக் கோவில்களுக்குத் தேவையான பொருட்களைத் தயாரித்து அளிப்பதற்காகத்தான் சிந்து நதிக்கரையில் தொழிற்சாலைகள் இயங்கின. அக்கேடிய சாம்ராஜ்யம் கி.மு. 2300 வாக்கில் சுமேரியாவைக் கைப்பற்றிய போதும் ஹரப்பாவில் இருந்து ஏற்றுமதி தொடர்ந்தது.
ஆனால், அக்கேடிய சாம்ராஜ்ஜியம் கி.மு. 2,000ல் வீழ்ந்த போது, சுமேரிய நகரங்களால் தனித்துச் செயல்பட முடியவில்லை. இதனால் ஹரப்பாவின் பொருட்களுக்கான தேவை குறைந்து, அந்த நாகரிகம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.
ஹரப்பா நாகரிகத்தின் பரப்பளவு எகிப்திய நாகரிகத்தின் பரப்பைப்போல இருபது மடங்கு பெரியது. சுமேரிய நாகரிகத்தைப் போல பத்து மடங்கு பெரியது. இதில் சிறிதும் பெரிதுமான பல குடியிருப்புகள் அடங்கியிருந்தன.
இவை அனைத்துமே ஒரே மாதிரியான தரப்படுத்துதலை சுமார் 20 தலைமுறைகளுக்குப் பின்பற்றின. அதாவது ஒரே மாதிரியான நகர வடிவமைப்பு, வீடு வடிவமைப்பு, முத்திரைகள், தயாரிப்பு முறைகள், பல்வேறு மொழிகளைப் பேசக்கூடிய உற்பத்தியாளர்கள், விநியோகிஸ்தர்கள், பொருட்களை எடுத்துச் செல்பவர்களால் புரிந்துகொள்ளக்கூடிய குறியீடுகள், புதைக்கும் முறைகள், பானைகள் ஆகியவற்றை இவர்கள் கொண்டிருந்தார்கள். ஆனால், சுமேரிய நாகரிகம் வீழ்ந்தபோது, இவை எதற்கும் தேவையில்லாமல் போனது.
ஹரப்பா நாகரிகத்தின் மிகவும் ஆர்வமூட்டக்கூடிய பகுதி, இங்கு கிடைத்த எழுத்துகள். இவை எதனைக் குறிக்கின்றன என்ற விவாதம் நீண்ட நாட்களாக நடந்துவரும் நிலையில், இவை குறித்து சில சுவாரஸ்யமான கருத்துகளை முன்வைக்கிறார் தேவ்தத்.
மொத்தம் 400 – 600 தனித்துவமிக்க எழுத்து வடிவங்கள் இருந்தாலும், சுமார் 50 எழுத்துகளே திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, ஒரு வரியில் ஐந்து முதல் 20 வார்த்தைகளே இருக்கின்றன. இந்த எழுத்துகளோ, சின்னங்களோ விருப்பப்படி பதிக்கப்படவில்லை. அவற்றில் ஒரு ஒழுங்கு (இலக்கணம்?) இருந்தது. வர்த்தகம், மதம் தொடர்பாகவே இவை எழுதப்பட்டிருந்தன. ஆனால், ஈமக் குழிகளில் எழுத்துகள் இல்லை.
ஹரப்பாவில் வாழ்ந்தவர்கள் என்ன மொழியைப் பேசினர்?
ஹரப்பாவில் வாழ்ந்த மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் யார் என்பது குறித்து சில கருதுகோள்களை முன்வைக்கிறார் தேவ்தத். டிஎன்ஏ ஆதாரங்களின்படி, ஹரப்பர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கங்கை நதி சமவெளியிலிருந்து தென்பகுதிவரை பரவி வாழ்ந்தனர்.
இவர்களில் சிலர் தொல் திராவிட மொழியைப் பேசியிருக்கலாம். 3,500 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரியர்களின் மரபணுக்கள் வந்து சேர்ந்தன. 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக ஜாதிக்குள் திருமணம் செய்யும் வழக்கம் துவங்குகிறது. ராக்கிடியில் ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த பெண்ணின் உடலில் இருந்து கிடைத்த டிஎன்ஏ, தமிழ்நாட்டின் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர்களின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போகிறது.
மொழிகளைப் பொறுத்தவரை, இந்த நாகரிகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மொழியைப் பேசியிருக்கலாம். வட பகுதியில் வசித்தவர்கள் திபெத்திய மொழியையும் மத்தியப் பகுதியில் வசிப்பவர்கள் முண்டாவை ஒத்த ஒரு மொழியையும் தென் பகுதியில் வசித்தவர்கள் தொல் திராவிட மொழியைப் பேசியிருக்கலாம்.
பலூசிஸ்தானில் ஆடு, மாடு மேய்க்கும் இனத்தவரின் ப்ராஹுயி மொழியில் இப்போதும் தனித்த திராவிட மொழி அடையாளங்கள் உண்டு. மெஸபடோமியாவில் எள், தந்தம் ஆகியவற்றுக்கு தொல் திராவிட மொழி வார்த்தைகளே புழங்கின என்கிறார் தேவ்தத் பட்நாயக்.
பிபிசி