யுக்ரேன் போர் குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோதி என்ன பேசினார்?
மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு நரேந்திர மோதி மேற்கொள்ளும் இருநாட்டு உறவுகள்.
மோதியும் புதினும் என்ன பேசினர்?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையிலான சந்திப்பு சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படும் நிகழ்வாக மாறியுள்ள நிலையில், யுக்ரேன் போர் குறித்து ரஷ்ய அதிபரிடம் நரேந்திர மோதி பேசியிருக்கிறார்.
மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு நரேந்திர மோதி மேற்கொள்ளும் இருநாட்டு உறவுகள் தொடர்பான முதல் அரசு முறை பயணம் இந்த ரஷ்யப் பயணம் தான். சீனாவுடன் ரஷ்யா நெருங்குவதைச் சமாளிக்கும் உத்தியாகவும் மோதியின் இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தை அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் விமர்சித்துள்ளன.
பிரதமர் மோதி ரஷ்யாவில் பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில் யுக்ரேனில் குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது நரேந்திர மோதிக்கு மிகப்பெரிய தர்ம சங்கடமாக அமைந்த நிலையில், யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி மோதி புட்டினை கட்டித்தழுவியது குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) இரு நாட்டு தலைவர்கள் தங்களது சந்திப்பில் பேசிய விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளனர்.
யுக்ரேன் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததை ரஷ்ய அதிபர் புதின் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மோதியும் புதினும் என்ன பேசினர்?
நரேந்திர மோதி, “போரோ, சண்டையோ அல்லது தீவிரவாத தாக்குதல்கள் நிகழும்போது மனிதநேயம் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் உயிர்கள் மரணமடைவதை காணும்போது வலியை உணர்கிறார்கள். குறிப்பாக அப்பாவி குழந்தைகள் கொல்லப்படும்போது,” என்றார்.
மேலும், “அப்பாவிக் குழந்தைகள் இறக்கும் காட்சி இதயத்தை நொறுக்குகிறது. அந்த வலி மிகவும் கொடூரமானது. உங்களுடன் இந்த பிரச்னை குறித்து விரிவாக விவாதித்தேன்,” என்றார்.
“நமது வருங்கால சந்ததியினரின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, அமைதி மிகவும் முக்கியமானது என்பதை ஒரு நண்பன் என்கிற முறையில் நான் தொடர்ந்து கூறி வருகிறேன். போர்கள் மூலமாக தீர்வுகள் சாத்தியமில்லை என்பதையும் நான் அறிவேன்.
குண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கு மத்தியில் சமாதானப் பேச்சுக்கள் நடத்துவது வெற்றிபெறாது. அமைதிக்கான வழியை பேச்சுவார்த்தை மூலமே அடைய வேண்டும்,” என்றார் மோதி.
இதற்கு பதிலளித்த புதின், “யுக்ரேனிய நெருக்கடியைத் தீர்க்கச் சில வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிப்பது — குறிப்பாக அமைதி வழியில் தீர்வு காணுவது உட்பட – மிக முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நீங்கள் கவனம் செலுத்தி வருவதற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.