வெறும் ரூ.45 கோடிதான் பட்ஜெட்; ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் குறிவைக்கும் வீரர்கள் யார்?
.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலம் தொடங்குவதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) தங்கள் அணியில் வலுவான பல வீரர்களை தக்கவைத்துள்ளது.ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான எம்ஐ அணி, ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய நான்கு சர்வதேச இந்திய நட்சத்திரங்களையும் தக்கவைத்துக் கொண்டது.இதனால் ஐபிஎல் 2025க்கான மெகா ஏலத்தில் 45 கோடி ரூபாய் என்ற குறைந்த பட்ஜெட்டுடன் களமிறங்குவது அந்த அணிக்கு ஏலத்தில் மிகப்பெரும் பின்னடைவாக இருக்கும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
ஏலத்திற்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி
எம்ஐ ஐபிஎல் 2025 ஏலத்திற்கு பிறகு ஒரு ஜோடி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களைத் தவிர, முழு இந்திய பேட்டிங் வரிசையையும் முழு வெளிநாட்டு பந்துவீச்சு வரிசையையும் கொண்டிருக்கக்கூடும் என்று ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.சுழற் பந்துவீச்சைப் பொறுத்தவரை நிச்சயமாக யுஸ்வேந்திர சாஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தரை கைப்பற்ற முயற்சி செய்வார்கள் என அவர் மேலும் கூறினார்.மெகா ஏலத்திற்கு முன்னதாக, சாஹலை ராஜஸ்தான் ராயல்ஸ் யுஸ்வேந்திர சாஹலை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.லெக் ஸ்பின்னர் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் மற்றும் 200 ஐபிஎல் விக்கெட்டுகளுக்கு மேல் பெற்ற ஒரே பந்து வீச்சாளர் என்ற பெருமைகளை யுஸ்வேந்திர சாஹல் கொண்டுள்ளார்.
வாஷிங்டன் சுந்தரின் பின்னணி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர், டீம் இந்தியாவுக்காக டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட நிலையில், ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட வாய்ப்புள்ளது.மும்பை இந்தியன்ஸ் இஷான் கிஷனை ஏலத்தில் எடுக்கலாம் என்று நினைத்தாலும், அவர்களின் பட்ஜெட் அதற்கு ஒத்துழைக்காமல் போகலாம் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறினார்.மாறாக, சில மாற்று வழிகளையும் அவர் பரிந்துரைத்தார். அதன்படி விக்கெட் கீப்பருக்காக, குயின்டன் டி காக் அல்லது ஜிதேஷ் ஷர்மா அல்லது பில் சால்ட் போன்ற வீரர்களை குறிவைக்கலாம் என்றார்.இதற்கிடையே, ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஜெட்டாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.