ஊழலை ஒழித்து நாடாளுமன்றத்தைச் சுத்தம் செய்யும் நாளாகவே பொதுத் தேர்தல் கருதப்படும்!
.
ஊழலை ஒழித்து நாடாளுமன்றத்தைச் சுத்தம் செய்யும் நாளாகவே பொதுத் தேர்தல் நடைபெறும் தினம் கருதப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது” நவம்பர் 14 ஆம் திகதி என்பது இலங்கையில் நாடாளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கான சிரமதான தினமாகும். தேசிய மக்கள் சக்திக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு தற்போது ஒரு கூட்டத்தைக் கூட நடத்த முடியாமல் போயுள்ளது.
மக்கள் பொய்யை கேட்டுக்கொண்டிருக்க தயாரில்லை என்பதால் அவர்களின் குறை கூறல்களுக்குள்ளேயே அவர்கள் சிறைக் கைதிகளாக மாறியுள்ளார்கள்.
இந்த பொதுத் தேர்தல் எந்தவிதமான போட்டியும் இல்லாமல் சோர்ந்துபோன ஒரு தேர்தல் என சிலர் கூறுகிறார்கள். எனினும், இந்த தேர்தலில் இலங்கை வரலாற்றின் மிகவும் தனித்துவமான வெற்றியை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுப்பது உறுதியானதாகும்.
கடந்த நாடாளுமன்றம் தொடர்பாக மக்கள் மத்தியில் எதிர்ப்பே நிலவியது. கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக பாடசாலைப் பிள்ளைகள் நாடாளுமன்றம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அந்தளவிற்கு அருவருப்பு நிலைக்கு உள்ளாகியிருந்த நாடாளுமன்றத்தைக் கலைத்து மக்களுக்கு வாய்ப்பினை வழங்கியிருக்கின்றோம். ஊழலற்ற, நேர்மையான குழுவினரை நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.
அதைப்போலவே, அங்குமிங்கும் கட்சித்தாவாத, விலைபோகாத குழுவினரை நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.
நவம்பர் 14 ஆம் திகதி திசைகாட்டியின் குழுவினரைக் கொண்டு நாடாளுமன்றத்தை நிரப்ப வேண்டும் மற்றுமொரு கும்பல் பலம்பொருந்திய எதிர்க்கட்சியை அமைத்துக்கொள்வதற்காக அழைப்பு விடுக்கிறார்கள். அது அப்படியல்ல. இந்த நேரத்தில் பலம்பொருந்திய அரசாங்கமொன்றே இருக்க வேண்டும்” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.